ஜி.டி. நாயுடு: விமர்சனம்: பிரமிக்க வைக்கும் டைம் ட்ராவல்!
‘ராக்கெட்ரி’ படத்தில் நம்பி நாராயணனின் போராட்ட வாழ்வைப் பதிவு செய்து, அநீதி இழைக்கப்பட்ட ஒரு விஞ்ஞானிக்குத் திரையில் நீதி தேடித் தந்தவர் மாதவன். அதே பாணியில், இந்திய மண்ணின் உண்மையான சாதனையாளரான ஜி.டி. நாயுடுவின் புகழை அடுத்த தலைமுறைக்குக் கடத்த மீண்டும் களமிறங்கியிருக்கிறார். தயாரிப்பு, திரைக்கதை பங்களிப்பு, நாயகன் என அனைத்துப் பொறுப்புகளையும் தோளில் சுமந்து, வரலாற்று நாயகனுக்குத் திரையில் உயிர் கொடுத்திருக்கும் இந்த முயற்சியில் மாதவன் எந்த அளவுக்கு வென்றிருக்கிறார்?
கதைக்களம்
தமிழகப் பாடநூல்களில் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றைச் சேர்க்கலாமா வேண்டாமா என்ற காரசாரமான விவாதத்தோடு கதையின் தொடக்கப் புள்ளி அமைகிறது. ஹென்ரி ஆடம்ஸ் என்பவரின் மோட்டார் சைக்கிளைப் பல போராட்டங்களுக்குப் பிறகு விலைக்கு வாங்கும் நாயுடு, அதை வெறுமனே ஓட்டிப் பெருமைப்பட்டுக்கொள்ளாமல், பாகம் பாகமாகப் பிரித்து மேய்ந்து, அதன் இயங்குமுறையைக் கற்றுத் தேர்கிறார். அங்கிருந்து தொடங்கும் அவரது ஆராய்ச்சிப் பயணம், கோவையில் ‘யுஎம்எஸ்’ பஸ் நிறுவனத்தைக் கட்டியெழுப்பி, ஒரு மாபெரும் தொழிலதிபராகவும் கண்டுபிடிப்பாளராகவும் அவரை உயர்த்துகிறது.
ஆனால், அவரது இந்த அசுர வளர்ச்சியைப் பொறுக்க முடியாத ஆங்கிலேய அரசு, வரி விதிப்பு என்ற பெயரில் முட்டுக்கட்டை போடுகிறது. தன் அறிவாலும் உழைப்பாலும் உருவாக்கிய சாம்ராஜ்யம் கண்முன்னே சரியும் சூழல் வரும்போது, ‘இந்தியாவின் எடிசன்’ என அழைக்கப்படும் அந்த மாமேதை என்ன செய்தார்? அவரைப் பாடப்புத்தகத்தில் சேர்ப்பதில் என்ன சிக்கல்? இதற்கான விடைகள்தான் திரைக்கதை.
நடிப்பு
சாதாரண கமர்ஷியல் படங்களில் நடித்துவிட்டு சுலபமாகக் கல்லா கட்டிவிடலாம். ஆனால், வரலாற்றில் மறைக்கப்பட்ட சாதனையாளர்களை உலகுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டும் மாதவனின் இந்தத் தேடலும் துணிச்சலும் பாராட்டுக்குரியது. 25 வயது வாலிபன் முதல் 75 வயது முதியவர் வரை ஜி.டி. நாயுடுவின் தோற்ற மாறுதல்களுக்காக அவர் சிந்திய வேர்வை ஒவ்வொரு காட்சியிலும் பளிச்சிடுகிறது.
சத்யராஜ் சில காட்சிகளே வந்தாலும் கச்சிதமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். நாயகனின் முதல் மனைவியாக பிரியாமணியும், இரண்டாவது மனைவியாக துஷாரா விஜயனும் அளவான நடிப்பால் கதைக்கு வலு சேர்த்திருக்கிறார்கள். வரி வசூலிக்கும் அதிகாரியாக ஜெயராம், வில்லத்தனத்தில் மிரட்டும் வினய், தம்பி ராமையா ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தைச் செவ்வனே செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு
1900-களின் தொடக்க காலக் கட்டத்தை அப்படியே தனது கேமராவுக்குள் சிறைபிடித்து, நம்மை அக்காலக்கட்டத்திற்கே டைம் டிராவல் செய்ய வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கமலநாதன். காட்சிகளின் வண்ண அமைப்பும், அந்தந்த காலகட்டத்துக்கேற்ப மாறும் ஒளிப்பதிவு கோணங்களும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்து, பார்ப்பவர்களுக்கு ஒரு அசல் வரலாற்றுப் உணர்வைத் தருகின்றன.
கலை இயக்கம்
பழைய கோவையின் தெருக்கள், அக்கால மோட்டார் வாகனங்கள், தொழிற்சாலைகள் என 1900-களின் தொடக்கக் காலக் கோவையை மீண்டும் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியதில் கலை இயக்குநர் சிரில் குருவிலாவின் உழைப்பு அபாரம். ஜெர்மனியில் ஹிட்லரை ஜி.டி. நாயுடு சந்திக்கும் காட்சி படமாக்கப்பட்ட விதம் மற்றும் அதன் பிரம்மாண்ட செட் அமைப்புகள் திரையில் வியக்க வைக்கின்றன.
இசை
கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கிறது. நாயகனின் எழுச்சி, வீழ்ச்சி, போராட்டக் தருணங்கள் என ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்றவாறு ஒலிக்கும் பின்னணி இசை, கதையின் கணத்தை நேர்த்தியாகத் தாங்கிப் பிடித்து கூடுதல் பலத்தைக் சேர்க்கிறது.
திரைக்கதை & இயக்கம்
ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாளரின் வாழ்க்கையை வெறும் ‘சூப்பர் ஹீரோ’ பிம்பமாக மட்டும் காட்டாமல், அவரிடம் இருந்த மனிதக் குறைகளையும் தோலுரித்துக் காட்டியதில் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் நேர்மை காட்டியிருக்கிறார். ஆனால், அந்த அம்சங்களே சில இடங்களில் சுவாரசியத்தைக் குறைத்து விடுகின்றன. தவிர, ஒருவரின் முழு வாழ்க்கையையும் 2 மணி நேரத்திற்குள் அடக்க நினைத்ததால், பல முக்கியக் காட்சிகள் ஆழமில்லாமல் சட்டெனக் கடந்துபோவது சற்றுத் தொய்வைத் தருகிறது.
மொத்தத்தில்..
குறைகள் சில இருந்தாலும், ஜி.டி. நாயுடு யார், இந்திய சமூகத்திற்கு அவரது பங்களிப்பு என்ன என்பதைத் தெரிந்துகொள்ள தடிமனான புத்தகங்களைப் புரட்டுவதை விட, இந்த ஒரு திரைப்படத்தைப் பார்த்தாலே போதும். அடுத்த தலைமுறையினருக்கு நிச்சயம் இது ஒரு சிறந்த வரலாற்றுப் பாடம்! பிரமிக்க வைக்கும் டைம் டிராவலிங்!
