“ஜி.டி.நாயுடுவை அன்றே கொண்டாடி இருந்தால்…!”: ‘ஜிடிஎன்’ நாயகன் மாதவன் ஆதங்கம்!
திரை உலகிலும் தொழில்நுட்ப வரலாற்றிலும் ஒரு புதிய அத்தியாயம் மலரப்போகிறது! தமிழ் சினிமாவின் வசீகரம் மாதவன், “ராக்கெட்ரி”. படத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை கதையைத் திறம்படப் படைத்து, வசூலிலும் மக்களின் இதயங்களிலும் அரிய சிம்மாசனத்தைப் பிடித்தார். அந்த மாபெரும் வெற்றிக் கொண்டாட்டத்தைத் தொடர்ந்து, அடுத்ததாக இந்தியாவின் தலைசிறந்த ஆராய்ச்சியாளரான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை அப்படியே வெள்ளித்திரைக்குக் கொண்டுவருகிறார்!
இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் செதுக்கியுள்ள இந்த பிரம்மாண்டமான படைப்பில், ஜி.டி. நாயுடுவாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார் மாதவன். ஏற்கனவே வெளியான டீசரும் டிரைலரும் இணையத்தைக் கலக்கி, திரையுலக ரசிகர்களின் ஆர்வத்தைக் உச்சத்திற்குத் தள்ளியுள்ளது. ஆகஸ்ட் 7 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் படம் அடியெடுத்து வைக்கிறது. மாதவனுடன் இணைந்து துஷாரா விஜயன், சத்யராஜ், ஜெயராம், வினய் எனத் திரைபட்டாளமே ஒன்று கூடி மாஸ் காட்டியுள்ளது!
இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் மிகச் சிறப்பாக நடந்தது. அப்போது புன்னகையோடு பேசிய மாதவன், “சுற்றிலும் நிறைய நாடகங்கள் (எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது) பரபரப்பாக நடந்துகொண்டிருக்கும் சூழலிலும், இந்த நிகழ்விற்குத் திரண்டு வந்த பத்திரிகையாளர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்கத் திட்டமிட்டபோதே, தயாரிப்பாளர்களிடம் ‘நிச்சயமாக இதை நாம் செய்ய வேண்டுமா?’ என்று அழுத்தமாகக் கேட்டேன். ஏனென்றால், நான் ஒரு காரியத்தில் இறங்கிவிட்டால் அதை மிகவும் ஆழமாக, முழு மூச்சாகச் செய்யக்கூடியவன்.
இந்த முயற்சி எக்காரணத்தைக் கொண்டும் பாதியிலேயே நின்றுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். ஆனால், என் மீது எனக்கு இருந்த நம்பிக்கையை விட, என் தயாரிப்பாளருக்கு என் மீது அதிக நம்பிக்கை இருந்தது. அந்த உத்வேகம்தான் இந்த பிரம்மாண்டப் படைப்பிற்கு பிள்ளையார் சுழி போட்டது!
ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை உலகளாவிய தளத்திற்குக் கொண்டு செல்ல அவரது குடும்பத்தினர் மிகச் சிறந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறார்கள். அத உணர்ந்து, மிகவும் பொறுப்போடும் கடமை உணர்ச்சியோடும் உழைத்திருக்கிறோம். அவர் வெறும் ஒரு கண்டுபிடிப்பாளர் மட்டுமல்ல; ஒரு மிகச் சிறந்த, அசாதாரணமான மனிதர். அவரது கதை அனைவருக்கும் போய்ச்சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். ஜி.டி. நாயுடுவைப் பற்றி நம்மில் பலருக்குமே முழுமையாகத் தெரியவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம். இத்தகைய மாபெரும் மேதையை ஏன் நாம் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டக் கூடாது என்ற கேள்விதான் என்னை இயக்கியது.
இன்றைய நவீன கண்டுபிடிப்புகள் பல உருவாவதற்கு முன்பே, ஜி.டி. நாயுடு பல புதிய பாதைகளை அமைத்துக்கொடுத்துவிட்டார். பில் கேட்ஸ் போன்ற தொழில்முனைவோர்கள்கூட இவரிடமிருந்துதான் பல நுட்பங்களைக் கற்றுக்கொண்டார்களோ என்று தோன்றும் அளவுக்கு அவரது சிந்தனை இருந்தது! விவசாயம், கல்வி, பெண்கள் முன்னேற்றம் எனப் பல துறைகளில் தடம்பதித்து, தொழில் முனைவோர் என்ற சொல்லுக்கே முன்னோடியாக வாழ்ந்தவர் அவர். அன்றைய தினமே நாம் அவரைச் சரியாகக் கொண்டாடியிருந்தால், கோயம்புத்தூர் இந்நேரம் உலகின் மிகப்பெரிய தொழில் நகரமாக உருவெடுத்திருக்கும்; அதன் வரலாறே வேறாக அமைந்திருக்கும்.
அப்படிப்பட்ட ஒரு மகத்தான மனிதருக்கு இந்தப் படத்தின் மூலம் நியாயம் சேர்த்திருக்கிறோம் என்ற திருப்தி கிடைத்துள்ளது.
படத்தின் வெற்றி விழாவில் இன்னும் ஏராளமான நன்றிகளை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்!” என்று தனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டார்.
