“நீட் போராட்டம்.. அரசியல் ஆக்காதீங்க!”: நடிகை தீப்ஷிகா வலியுறுத்தல்!

“நீட் போராட்டம்.. அரசியல் ஆக்காதீங்க!”: நடிகை தீப்ஷிகா வலியுறுத்தல்!

டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர்ந்து குரலெழுப்பி வரும் போராட்டக் களம், நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் ஆதங்கத்தையும் நியாயமான கோரிக்கைகளையும் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது. அதே நீட் எதிர்ப்புப் போராட்டம் குறித்து நடிகை தீப்ஷிகாவும் கருத்து தெரிவித்து உள்ளார்.

நாளைக்கு உயிரைக் காப்பாற்றப்போகும் மருத்துவ நிபுணர்களைத் தேர்ந்தெடுக்கும் ஒரு தேர்வுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. ஆனால், அனைவருக்கும் ஒரே மாதிரியான வாய்ப்பு கிடைக்கும்போதுதான் உண்மையான திறமைக்கு மதிப்பே கிடைக்கும்.

மருத்துவக் கல்லூரிச் சேர்க்கைக்கு நீட் தேர்வுதான் அளவுகோலாகத் தொடரும் என்றால், அதற்குத் தயாராவதற்கான வாய்ப்பும் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். குறிப்பாக, அரசுப் பள்ளிகளிலும் கிராமப்புறப் பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களுக்குத் தரமான நீட் பயிற்சியும் கல்வியும் போய்ச்சேர வேண்டும். நானும் முன்பு நீட் தேர்வு எழுதிய மாணவி என்ற அடிப்படையில் இதை அழுத்தமாகச் சொல்கிறேன்.

தேர்வில் முறைகேடு செய்பவர்கள் நிச்சயம் அதற்குப் பொறுப்பேற்றே ஆக வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குத் தகுந்த நீதி கிடைக்க வேண்டும். தேர்வு முறையின் நம்பகத்தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் வலுப்படுத்தும் சீர்திருத்தங்கள் உடனே மேற்கொள்ளப்பட வேண்டும்.

இது மாணவர்களால் முன்னெடுக்கப்படும் ஒரு இயக்கமாகவே தொடர வேண்டும். இதை அரசியல் லாபங்களுக்காகப் பிளவுபடுத்தக் கூடாது. மாணவர்களின் நலன், சமத்துவம், பொறுப்பேற்றல் மற்றும் கல்விச் சீர்திருத்தங்கள் மட்டுமே இந்த இயக்கத்தின் மையமாக இருக்க வேண்டும்.