லஷ்மிகாந்தன் கொலை வழக்கு: விமர்சனம்: தூக்கிலிடப்படும் நீதி!
மனித உணர்வின் நுண்ணிய உணர்வுகளையும், சமூகச் சிக்கல்களையும் ஓர் புள்ளியில் ஒன்றிணைக்கும் வல்லமை கொண்டவர், இயக்குநர் தயாள் பத்மநாபன். இந்த ‘லஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்திலும் அந்தப் புள்ளியை மிக நுணுக்கமாகத் தொட்டிருக்கிறார்.
முதல் விஷயம்…
தமிழின் முதல் மிரட்டல் பத்திரிகையாளர் – கொலை செய்யப்பட்ட – லஷ்மிகாந்தன் குறித்த படம் அல்ல. அதே பெயருள்ள ஒரு வட்டிக்கடைக்காரர் கொல்லப்படுகிறார். கொலை செய்த நபரின் உணர்வுகளின் பின்னணியில், மரண தண்டனை சரியா என்ற விவாதத்தை ஏற்படுத்தியிருக்கும் படம் இது.
மிக வறிய குடும்பத்தைச் சேர்ந்த கிராமத்து இளைஞன் வெற்றி. படிப்புக்கேற்ற வேலை தேடிக்கொண்டிருக்கிறார். அப்பா வேலைக்குச் செல்லாமல், குடித்துவிட்டு ஊர் சுற்றும் பேர்வழி. அம்மாவின் உழைப்பில்தான் குடும்பம் ஓடுகிறது. இந்த நிலையில், கடன் கொடுத்த வட்டிக்கடைக்காரன், பணத்தைக் கேட்டு நெருக்குகிறான். அதன் பிறகு வெற்றியின் திசை மாறுகிறது. அடுத்தடுத்து என்ன நடந்தது என்ற சுவாரசியமான, அதிரவைக்கும் சம்பவங்கள்தான் கதை.
நடிப்பில் வெற்றிக்கோட்டை நெருங்க முயற்சித்திருக்கிறார் வெற்றி. அந்த வகையில் இயக்குநருக்குப் பாராட்டுகள்.
நாயகி பிரிகிடா இயல்பாக நடித்திருக்கிறார். “நேர்மையான திருடன்” என காதலனை கலாய்ப்பதாகட்டும், “கடைசியா ஒரு திருட்டு பண்ணுய்யா.. வட்டி கட்ட இல்லை.. அசலை அடைக்க” என வெற்றியைப் பார்த்துத் தீவிரமாகச் சொல்வதாகட்டும்.. ஜொலிக்கிறார். பாடல் காட்சிகளில் கூடுதலாய் ஈர்க்கிறார்.
மிக முக்கியமான கதாபாத்திரம் ரங்கராஜ் பாண்டேவுக்கு. நடிப்பில் சுமார். எதிரே இருக்கும் வெற்றியும் சுமார். ஆனால் அவர்களுக்கிடையே நடக்கும் உரையாடல்கள்தான் முக்கியம் என்பதால், காட்சி மனதில் தைக்கிறது. இயக்குநர் முத்திரை பதிக்கும் காட்சிகளில் இதுவும் ஒன்று.
மரண தண்டனை கைதியைத் தூக்கிலிடும் வேலையைச் செய்யும், ஹேங்மேனாக சுப்ரமணிய சிவா. சற்றே தடுமாறும் நடை, வெற்றுப் பார்வை, தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டிருக்கும் கைதியிடம், “கயிறுல நெய் தடவிருக்கேன் சாமி.. வலிக்காம இருக்கணும்னு” என வறண்ட குரலில் சொல்வது.. என அசத்துகிறார்.
நாயகனின் நண்பனாக வரும் லொள்ளு சபா மாறனும் ரசிக்க வைக்கிறார். வயற்காட்டில், நள்ளிரவில் நாயகனுக்கு அவர் திருடோபதேசம் செய்யும் காட்சி, கூடுதல் அசத்தல்.
நாயகனின் தாயாராக வருபவர், கந்துவட்டிக்காரராக வரும் கவிதா பாரதி, மற்றும் கன்யா பாரதி, லிஸ்ஸி ஆண்டனி உள்ளிட்ட அனைவரும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
வசனங்கள் நெஞ்சில் தைக்கின்றன.
“அரசியல்வாதி மகன் அரசியல்வாதி ஆகும்போது வராத அசிங்கம், வெட்கம், திருடன் மகன் திருடன் ஆகிறப்ப ஏன் வரணும்?”
“திருடன்னு ஒத்துக்குற அளவுக்கு நேர்மையா இருக்கீங்க.. ஆனா நேர்மையே இல்லாம திருட்டுத்தொழில் பண்றீங்க..”
“நம்ம ஜனங்களுக்கு அடுத்தவன் கதைன்னா சுவாரசியம் அதிகம்..”
திருடுவது சரியா தவறா என்பதில் ஆரம்பித்து மரண தண்டனை சரியா தவறா என்பது வரையிலான உரையாடல்களில் அத்தனை நேர்த்தி. கலை உணர்வும், சமூக அக்கறையும் இரண்டறக் கலந்தவர்களால் மட்டுமே இப்படி உணர்ந்து எழுத முடியும்.
தர்புகா சிவாவின் இசையில் மூன்று பாடல்களுமே மனதைக் கவர்கின்றன. ‘உசுருக்கு விலை என்ன சாமி’ ஆதங்கத்துடன் கேள்வி கேட்கிறது, பாரதியின் ‘ஆதலினால் காதல் செய்வீர்’ கசிந்து உருகுகிறது, பாரதிதாசனின் ‘முத்தம் கொடு’ பாசத்தைக் கொட்டுகிறது. பின்னணி இசை, படத்தின் ஒரு கதாபாத்திரமாகவே ஓடிவருகிறது. அற்புதம்.
காட்சிகளின் உணர்வெழுச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. எம்.வி. பன்னீர்செல்வத்தின் ஒளிப்பதிவில் வீடு, சிறை அறை என சில இடங்கள்தான் படத்தில் வருகின்றன. ஆனாலும் அலுக்காத அளவுக்கு வெவ்வேறு கோணங்களில் காட்சிகளைப் பதித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். சிறையின் பறவைப்பார்வை, வயல்வெளி என சில இடங்கள்தான் அவுட்டோர் என்றாலும் அவை மனதில் நிற்கின்றன.
இயக்குநர் தயாள் பத்மநாபனின் சிறந்த படைப்புகளின் வரிசையில், இந்தப் படமும் சேர்ந்திருக்கிறது.
எளிய குடும்பம், வாழ்க்கை என ஆரம்பிக்கும் திரைக்கதை, அரசு உத்தரவின் உயிர்ப்பலி என்பதில் தடதடவென ஆரம்பிக்கிறது.
காட்சிகளை நுண்ணுணர்வோடு எடுத்திருக்கிறார். வட்டிக்கடைக்காரனைக் கத்தியால் குத்திய அடுத்த நொடி, “அய்யோ குத்திவிட்டோமே” என நாயகன் கண்களை இறுக மூடித் திறக்கும் அந்த விநாடி.. இயக்குநரின் முத்திரை.
இந்த நாகரிக உலகிலும், மரண தண்டனை தேவையா என்ற அவசியமான கேள்வியை எழுப்பியிருக்கிறார்.
உலகெங்கிலும் மரண தண்டனையை பல நாடுகள் முழுமையாக நீக்கிவிட்டன. சில நாடுகள் தேசத் துரோகக் குற்றங்களுக்கு மட்டும் மரண தண்டனை அளிக்கின்றன. சட்ட அளவில் மரண தண்டனை இருந்தாலும், பல நாடுகளில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக யாருக்கும் மரண தண்டனை அளிக்கப்படவில்லை.
ஆனால், பல நாடுகளில் இன்னும் மரண தண்டனை அமலில் உள்ளது. அவற்றுள் ஒன்று இந்தியா.
முன்னர் ஒரு வழக்கில், உச்ச நீதிமன்றம் “குற்றவாளி திருந்த வாய்ப்பு உண்டா என்பது குறித்து யோசிக்க வேண்டியதில்லை, குற்றத்தின் கொடூரத்தை மட்டும் பார்த்தே மரண தண்டனை விதிக்கலாம்” என்று தவறான முன்னுதாரணத்தை உருவாக்கியது. இந்தத் தவறான வழிகாட்டுதலால், அடுத்தடுத்து வந்த வெவ்வேறு வழக்குகளில் சிலருக்குத் தவறான சட்ட நெறிமுறைகளின் அடிப்படையில் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இணைந்து குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதினர். அதில், “தவறான முன்னுதாரணத்தால் மரண தண்டனை வழங்கப்பட்ட கைதிகளின் தண்டனையைக் குறைக்க வேண்டும்” எனக் கோரினர்.
அதுமட்டுமல்ல.. மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு, அவர்கள் நிரபராதிகள் என உறுதிசெய்யப்பட்ட சம்பவங்கள் உலகெங்கிலும் நடந்துள்ளன.
பிரிட்டன் நாட்டில் திமோதி எவான்ஸ் என்பவர் தூக்கிலிடப்பட்டு பல ஆண்டுகள் கழித்து அவர் நிரபராதி எனக் கண்டறியப்பட்டது.
அதுவும் சாதி, பணம், அதிகாரம் உள்ளிட்டவை விசாரணையில், சட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் நமது நாட்டில் மரண தண்டனை கூடவே கூடாது. இதை அற்புதமாக விளக்கும் திரைப்படமாக லஷ்மிகாந்தன் கொலை வழக்கு அமைந்துள்ளது.
அடுத்து தயாள் பத்மநாபன், மனித நாகரிகத்துக்கு – உரிமைக்கு எதிரான என்கவுண்டர் கொடுமை பற்றித் திரைப்படம் எடுக்க வேண்டும்.
- டி.வி.சோமு

