குக்கர்: மு.க.ஸ்டாலின் – டி.டி.வி.தினகரன்… கரு. பழனி கிண்டலடிப்பது யாரை?
கரு. பழனியப்பன் இயக்கும் புதிய திரைப்படமான “குக்கர்” படத்தின் தலைப்பைத் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
ஏற்கெனவே, “பாரம்பரிய உணவுகள் மற்றும் புதிய உணவுகளை அடிப்படையாக வைத்து கரு.பழனியப்பன் படம் ஒன்றை இயக்க இருக்கிறார்” என்ற யூகத் தகவல் வெளியானது. அதோடு, படத்தின் தலைப்பு “குக்கர்” என இருப்பதால், அந்த யூகம் உண்மைதானோ என்கிற எதிர்பார்ப்பும் எழுகிறது.
அதே நேரம், அரசியல் தலைவரான மு.க.ஸ்டாலினை சந்தித்துப் படத்தலைப்பை வெளியிடச் செய்ததால், இது அரசியல் படமாக இருக்குமோ என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
ஆர்.கே. நகர் தொகுதியில், இந்தச் சின்னத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிட்டார்.
அப்போது, வாக்காளர்களுக்கு டி.டி.வி.தினகரன் பெருமளவு பணம் கொடுத்தார் என்றும், குக்கர் உள்ளிட்ட பரிசுகளை அளித்தார் என்றும் புகார் எழுந்தது. இதையடுத்து தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. ஆனாலும் தேர்தல் நடந்தபோது, டி.டி.வி.தினகரன் பெரும் வெற்றி பெற்றார். தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் டெபாசிட் இழந்தன.
அடுத்தடுத்த தேர்தல்களிலும் அ.ம.மு.க., குக்கர் சின்னத்தில்தான் போட்டியிட்டு வருகிறது.
இதையடுத்து, “அரசியல் படமாகத்தான் இருக்கும். ஆனால் குக்கரிடம் தோற்ற திமுகவின் தலைவரிடம் படத்தலைப்பை வெளியிடச் சொல்லி அவரை கிண்டலடிக்கிறார்களா.. அல்லது படத்தில் டிடிவி தினகரனை கிண்டலடிக்கப் போகிறார்களா” என்ற சந்தேகம் கிளம்புகிறது.
அதோடு, “அரசியல் படமாகவே இருக்கட்டும்… வேறு கட்சியின் சின்னத்தின் பெயரில் தலைப்பு வைக்க முடியுமா… தணிக்கை வாரியம் அனுமதிக்குமா” என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
பா.ஜ.க.வின் சின்னமான தாமரை என்கிற பெயரில் நெப்போலியன், ரூபினி நடித்த திரைப்படம் வெளியானது. ஆனால், அப்படம் வெளியான 1990களில் பா.ஜ.க. சொல்லிக்கொள்ளும்படியான கட்சியாக இல்லை.
அதே போல, காங்கிரஸின் சின்னமான ‘கை’ என்கிற பெயரிலேயே கடந்த இரண்டாயிரத்து பன்னிரண்டாம் ஆண்டு வினோத் ராகவா என்பவர் இயக்கி, தயாரித்துப் புதுமுகங்கள் நடித்த திரைப்படம் வெளியானது. பெரிதாகக் கவனம் ஈர்க்கவில்லை. ஈர்த்திருந்தாலும், காங்கிரஸ்காரர்கள் கவனத்திற்கு வந்திருக்குமா என்பது சந்தேகமே. (ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்து நான்கிலேயே, ரஜினி நடிப்பில் மகேந்திரன் இயக்கத்தில், ‘கை கொடுக்கும் கை’ என்ற திரைப்படம் வெளியானது.)
இப்போது அ.ம.மு.க. சின்னமான குக்கர் பெயரில், கரு. பழனியப்பன் புதிய திரைப்படத்தை இயக்குகிறார்.
வெற்றி தோல்விகளைக் கடந்து பார்த்திபன் கனவு, மந்திரப்புன்னகை, பிரிவோம் சந்திப்போம் போன்ற சிறப்பான படங்களை அளித்தவர். ஆகவே, குக்கர் படமும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்படம், வணிக ரீதியிலும் பெருவெற்றி பெறட்டும்!

