பள்ளியில் சினிமா பாடம்!: சீனு ராமசாமி ஆலோசனையைஏற்ற குடியரசு துணைத் தலைவர்!
இலக்கியப் பரப்பிலும் கலை உலகிலும் தனக்கெனத் தனித்துவமான தடம் பதித்து, தேசிய மற்றும் சர்வதேச அங்கீகாரங்களைப் பெற்ற தமிழ்த் திரைப்பட இயக்குநர் கவிஞர் சீனு ராமசாமிக்கு, இந்தியத் துணைத் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நெஞ்சம் நிறைந்த அதிகாரப்பூர்வ பாராட்டுச் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். இந்த உயரிய அங்கீகாரத்தைக் கண்டு உளம் நெகிழ்ந்த இயக்குநர் சீனு ராமசாமி, தனது மனமார்ந்த நன்றியையும் பேரன்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.
கலை, சமூகம் மற்றும் இலக்கியத் தளங்களில் இயக்குநர் சீனு ராமசாமி ஆற்றி வரும் பன்முகப் பங்களிப்பைத் துணைத் குடியரசுத் தலைவர் தனது கடிதத்தில் வெகுவாகப் போற்றியுள்ளார். குறிப்பாக, அவரது காத்திரமான படைப்புகளில் ஒன்றான, ‘நதி அழகி’ கவிதைத் தொகுப்பில் உள்ள, ‘சில பூக்கள்’ கவிதையைத் தனித்துக் குறிப்பிட்டுப் பாராட்டி உள்ளார்.
எவ்விதப் புகழையோ, பிரதிபலனையோ எதிர்பாராமல் தங்களின் நற்செயல்களால் உலகிற்கு நறுமணம் பரப்பி, அமைதியான தார்மீகக் குணத்துடனும் சுயநலமின்றியும் வாழும் உன்னத மனிதர்களை இக்கவிதை மிக அழகிய அழகியலோடு கொண்டாடுகிறது என நெகிழ்ந்து பாராட்டி இருக்கிறார்.
மிக முக்கியமாக, நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில், திரைப்பட ரசனைக் கல்வி யை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற இயக்குநர் சீனு ராமசாமியின் தேசிய அளவிலான முன்மொழிவையும் துணைத் குடியரசுத் தலைவர் கவனத்தில் கொண்டுள்ளார். இத்திட்டம், நாடு முழுவதும் உள்ள இளம் மாணவர்களிடையே காட்சி சார்ந்த அறிவு, பிறர் நிலை உணரும் பண்புமற்றும் சமூக விழிப்புணர்வை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு உன்னதமான தொலைநோக்குப் பார்வையாகும்.
இளம் பருவத்திலேயே மாணவர்களிடம் சினிமா ரசனையை வளர்க்க, பள்ளிகளில் இது குறித்த பாடம் வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் சீனு ராமசாமி. மேலும் இவரது ‘சினிமாவின் ஆன்மா (திரைப்பட ரசனைக் கல்வியும் இன்னும் சில கட்டுரைகளும்’ புத்தகத்தை பள்ளிப் பாடமாக வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருவதும் குறிப்பிடத் தக்கது.
இயக்குநரின் நெகிழ்ச்சி
இந்த உயரிய அங்கீகாரம் குறித்து இயக்குநர் சீனு ராமசாமி விடுத்துள்ள அறிக்கையில்:”மாண்புமிகு இந்தியத் துணைத் குடியரசுத் தலைவர் அவர்களின் கனிவான நல்வார்த்தைகள் என்னை ஆரா துயரற்ற பெரும் நெகிழ்ச்சியிலும் பெருமிதத்திலும் ஆழ்த்தியுள்ளன. தேசத்தின் மிக உயர்ந்த ஆளுமையாகத் திகழும் ஒரு தலைவர், தனது பொன்னான நேரத்தைச் செலவழித்து எனது கவிதைகளையும் புத்தகங்களையும் வாசித்துப் பாராட்டியிருப்பது, ஒரு சாமானியக் கலைஞனாக எனக்குக் கிடைத்த ஆகச்சிறந்த பேறாகும்.
‘சில பூக்கள்’ கவிதையின் ஆழமான சாராம்சத்தை அவர் அணுஅணுவாகப் புரிந்து கொண்டு வாழ்த்தியிருப்பது எனது இதயத்தைத் தொட்டது. மேலும், விளிம்பு நிலை அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் திரைப்பட ரசனைக் கல்வியைக் கொண்டு சேர்க்கும் எனது பெருங்கனவு சார்ந்த முன்மொழிவை அவர்
ஏற்றுக்கொண்டு இருப்பது, நம் தேசத்தில் படைப்பாற்றல் மிக்கக் கல்வியின் எதிர்காலம் குறித்த பேரொளியையும் பெரு நம்பிக்கையையும் எனக்குள் பாய்ச்சி உள்ளது. அவருடைய வாழ்த்துகளையும் ஆசிகளையும் தலைவணங்கி, மிகுந்த மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறேன்” என்று உளம் உருகக் குறிப்பிட்டுள்ளார்.
யதார்த்தமான தமிழ்த் திரைப்படங்களின் ஆகச்சிறந்த ஆன்மாவாகவும், நவீன கவிதைகளின் வழி மானுடம் பேசுபவருமான இயக்குநர் சீனு ராமசாமி, அண்மையில் தனது இலக்கியப் படைப்புகளைத் துணைத் குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கு அன்பளிப்பாக அனுப்பியிருந்தார். அதனை முழுமையாக வாசித்து நேசித்து, தேசத்தின் இரண்டாம் குடிமகன் இந்த உயரிய பாராட்டைத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

