‘ஹபீபி’: தமிழ் சினிமாவின் அசல் இஸ்லாமிய வாழ்வியல்!

‘ஹபீபி’: தமிழ் சினிமாவின் அசல் இஸ்லாமிய வாழ்வியல்!

னதை மயிலிறகால் வருடும் ஓர் உன்னதக் காதலை, தமிழ் மண்ணின் அசல் வாழ்வியலைத் திரையில் கொண்டுவரவிருக்கும் ‘ஹபீபி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோலிவுட் பிரபலங்களின் முன்னிலையில் பிரம்மாண்டமாகக் கொண்டாப்பட்டது! நேசம் எண்டர்டெயின்மெண்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் ஒட்டுமொத்தத் திரைத்துறையையும் கட்டிப்போட்டுள்ளது.

விழாவில் கலந்துகொண்ட திரைப்பிரபலங்கள் தங்களின் நெகிழ்ச்சியான அனுபவங்களையும், வாழ்த்துகளையும் துள்ளலோடு பகிர்ந்துகொண்ட தருணங்கள்…

இயக்குநர் மீரா கதிரவன் “இஸ்லாமியர்கள் என்றாலே இப்படித்தான் இருப்பார்கள் என்று இங்கு கட்டமைக்கப்பட்டுள்ள பல பிம்பங்களை இந்தப் படம் உடைக்கும். சாதி, மதங்களைக் கடந்து அன்பும் மனிதமும் தான் எல்லாவற்றிற்கும் மேலானது என்பதை ‘ஹபீபி’ பேசும். கஸ்தூரி ராஜா சார் உள்ளிட்ட ஒட்டுமொத்தப் படக்குழுவும் கொடுத்த ஒத்துழைப்புக்கு நன்றி.”

நடிகர் பார்த்திபன் “‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்ற வசனமே இந்தப் படத்தின் ஆன்மா. இயக்குநர் ராம் தான் என்னை இந்தப் படத்தை கட்டாயம் பார்க்கச் சொன்னார். பணம் சம்பாதிப்பதையும் தாண்டி நல்ல கதைகளைத் தரும் வெகு சிலரில் மீரா கதிரவனும் ஒருவர். கஸ்தூரி ராஜா சார் இதில் மிக இயல்பாக நடித்திருக்கிறார். இதே மேடையில், தனிமனித நம்பிக்கையால் வென்று உயரிய பதவியில் அமர்ந்துள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்; அவர் சினிமாவுக்கு நல்லது செய்வார்.”

இயக்குநர் மகிழ் திருமேனி “வாழ்வாதாரத்திற்காக வெளிநாடு செல்லும் ஆண்கள், பிரிவால் தவிக்கும் குடும்பங்கள், கைத்தறி நெசவாளர்களின் கண்ணீர், கூட்டுக்குடும்பச் சிதைவு என தமிழ் சமூகத்தின் அசல் வாழ்வியலையும் பண்பாட்டையும் இந்தப் படம் ஆவணப்படுத்தியிருக்கிறது. தன் முடிவுகளைத் தானே எடுக்கும் ஹிஜாப் அணிந்த தற்சார்புப் பெண்ணின் கதாபாத்திரம் இதில் செமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.”

இயக்குநர் மிஷ்கின் “இது வெறும் இஸ்லாமியர்களுக்கான படம் அல்ல; நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல காதல் படம் பார்த்து நான் அழுதுவிட்டேன். யார் என்றே தெரியாத ஒருவனை நேசிப்பது தான் உண்மையான கருணை என்பதை இந்தப் படம் கற்றுக்கொடுக்கிறது. இதில் கஸ்தூரி ராஜா சார் தனுஷை விட மூன்று மடங்கு சிறப்பாக நடித்திருக்கிறார்.”

இயக்குநர் கஸ்தூரி ராஜா “நான் இதுவரை நடித்ததே இல்லை, ஆனால் என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை தந்தார் மீரா கதிரவன். நான் ஆயிரம் சதவீதம் இந்து, ஆனால் என்னை ஒரு இஸ்லாமியக் கதாபாத்திரமாக அவர் மாற்றிய விதம் எனக்குக் கிடைத்த மறுபிறவி! ‘ஹபீபி’ என் சினிமா கரியரில் ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.”

இயக்குநர் ராம் “பச்சைத் தாயத்து, கசாப்புக் கடை, பிரியாணி என இஸ்லாமியர்களைப் பற்றி சினிமாவில் காட்டும் வழக்கமான பிம்பங்களை முற்றிலும் மாற்றும் படம் இது. தமிழில் வெளியாகவிருக்கும் முதல் அசல் தமிழ் இஸ்லாமியக் கலைப்படைப்பு இதுதான்!”

இயக்குநர் வெற்றிமாறன் “இஸ்லாமிய சமூகத்தினரின் வாழ்வியல், கனவுகள், இழப்புகள் மற்றும் வலிகளைப் பேசும் மிக முக்கியமான படம் இது. பீரியட் படமாக இருந்தாலும், இன்றைய காலத்திற்கும் அப்படியே பொருந்திப் போகிறது.”

இயக்குநர் சேரன் “படம் பார்க்கும் போது நானும் அதில் ஒரு கதாபாத்திரமாகவே உணர்ந்தேன். ஒரு நாவலைப் படிப்பது போன்ற உணர்வைத் தரும் இந்தத் திரைப்படம், அடுத்த காட்சி என்ன என்பதை கணிக்க முடியாத அளவுக்கு விறுவிறுப்பாகவும், சமூக மாற்றத்தை உணர்த்துவதாகவும் செதுக்கப்பட்டுள்ளது.”

இயக்குநர் அமீர் “இஸ்லாமிய சமூகம் பொதுவாகத் திரைப்படங்களை ஒதுக்கி வைக்கும். ஆனால், அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களே இன்று இந்த விழாவில் பெருமளவில் கூடியிருக்கிறார்கள். ‘ஹபீபி’ என்றால் அன்பு என்று பொருள். தமிழ் சமூகம் எடுக்க மறந்த ஒரு முக்கியமான வாழ்வியலை இப்படம் பேசியிருக்கிறது.”

இயக்குநர் பா ரஞ்சித் “நம் சமூகத்திற்குப் பல முகங்கள் இருந்தாலும், நாம் யாரையும் சரியாகப் புரிந்துகொள்வதில்லை. இலக்கியங்கள் மற்றும் மலையாள சினிமா மூலம் அறிந்த இஸ்லாமியர்களின் வாழ்க்கையை, தமிழ் சினிமாவில் மிக முக்கியப் பதிவாகக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர்.”

நடிகர் சமுத்திரக்கனி “இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான அனைத்து உணர்வுபூர்வமான விஷயங்களும் இதில் கச்சிதமாக அமைந்திருக்கின்றன. மீரா கதிரவனின் இந்த உழைப்புக்குத் தியேட்டர்களில் நிச்சயம் பெரிய வெற்றி கிடைக்க வேண்டும்.”

இயக்குநர் சுசீந்திரன் “எனக்கு இஸ்லாமிய நண்பர்கள் அதிகம் இல்லை. ஆனால், இதில் காட்டியுள்ள அவர்களின் வாழ்வியலைப் பார்த்தபோது பிரம்மிப்பாக இருந்தது. அனைத்து சமூகத்தினரும் ரசிக்கும்படியாகப் படம் வந்துள்ளது.”

இயக்குநர் லீனா மணிமேகலை “இது வெறும் இஸ்லாமியப் படம் மட்டுமல்ல, மூன்று தலைமுறைப் பெண்களைப் பற்றிய ஆழமான கதை. மீரா கதிரவனின் பல வருட உழைப்பு வீரியமான ஒரு பண்பாட்டு அசைவாகத் தமிழ் சினிமாவில் மலர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.”

இசையமைப்பாளர் சாம் சி எஸ் “வன்முறை நிறைந்த படங்களுக்கு மத்தியில், மனதை மயிலிறகால் வருடும் ஒரு கதைக்கு இசையமைத்தது அற்புதம். கஸ்தூரி ராஜா স্যாரின் அசாத்திய நடிப்புக்கு நிச்சயம் ஒரு பெரிய விருது காத்திருக்கிறது!”

நடிகர் நாசர் “ஹபீபி படம் பார்த்த அந்தப் பாதிப்பில் இருந்து என்னால் இன்னும் வெளியே வர முடியவில்லை. எல்லோர் மனதையும் தொடும் கதையாக இது இருக்கும்.”

இயக்குநர் துரை “இஸ்லாமியர்களின் வாழ்க்கையை இத்தனை நுணுக்கமாக எந்தப் படமும் காட்டியதில்லை. சாம் சி எஸ் அவர்களின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.”

தவெக எம்எல்ஏ முஸ்தபா “நீண்ட வருடங்களாக நான் படம் பார்ப்பதே இல்லை. ஆனால், இந்த ‘ஹபீபி’ திரைப்படத்தை நான் நிச்சயம் பார்ப்பேன்; நமது முதல்வர் விஜய்யும் இந்தப் படத்தை நிச்சயம் பார்ப்பார்.”

இயக்குநர் கணேஷ் கே பாபு “இன்றைய சூழலில் ‘ஹபீபி’ போன்ற திரைப்படங்கள் வெளியாக வேண்டியது மிக மிக அவசியம். ட்ரெய்லர் பார்க்கும் போதே படம் நம்மை அப்படியே ஈர்க்கிறது.”

இயக்குநர் தினகரன் சிவலிங்கம் “என் குடும்பமும் கைத்தறி நெசவு சார்ந்ததுதான். அந்த வாழ்க்கையை இதில் மிக நுணுக்கமாகக் காட்டியுள்ளனர். புதிய இயக்குநர்கள் தங்களின் பின்புலத்தைப் பயமின்றிப் படமாக்க இது ஒரு பெரிய உத்வேகம்.”

இயக்குநர் அவிநாஷ் “ஸ்பெஷல் ஷோவில் படத்தைப் பார்த்தபோது, ஒரு தரமான ஈரானியப் படம் தமிழில் பேசுவது போன்ற உலகத்தரமான உணர்வு எனக்கு ஏற்பட்டது.”

இயக்குநர் ஜகாரியா முகமது “கேரளத் திரையரங்குகளிலும் இந்தப் படம் வெளியாக வேண்டும், நிச்சயமாக எங்கள் மலையாள சினிமா ரசிகர்களின் முழு ஆதரவு இந்த நல்ல படத்திற்கு உண்டு.”

இயக்குநர் பாண்டிராஜ் “நானும் மீராவும் தங்கர்பச்சான் சாரிடம் ஒன்றாக வேலை பார்த்த நெருங்கிய நண்பர்கள். இந்தப் படம் கமர்ஷியலாகவும் மிகப்பெரிய ஹிட் அடிக்க வாழ்த்துகள்.”

இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி & தயாரிப்பாளர் தேனப்பன் “படம் பார்த்த அனைவருமே மிகச் சிறப்பாக வந்திருப்பதாகக் கொண்டாடுகிறார்கள். திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற வாழ்த்துகள்.”

இயக்குநர் ஹரிஹரன் ராம், பாடகர் சத்யன் & நடிகர் ஈஷா, நடிகை மாளவிகா மனோஜ் “தமிழில் மாளவிகாவுக்கு இதுதான் அறிமுகப் படம். உன்னதமான இந்தக் கலைப்படைப்பிற்குத் தமிழ் சினிமா ரசிகர்கள் தங்களின் பேராதரவைத் தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.”

Related Posts