ஆண்களுக்கு ஹெல்ப் லைன்! முதலமைச்சருக்கு ‘ஆண்கள் பாதுகாப்பு சங்கம்’ கோரிக்கை!

ஆண்களுக்கு ஹெல்ப் லைன்! முதலமைச்சருக்கு ‘ஆண்கள் பாதுகாப்பு சங்கம்’ கோரிக்கை!

“மனைவி மற்றும் மனைவியின் குடும்பத்தால் பாதிக்கப்பட்டு கதறும் நடிகர் ரவி மோகனுக்கு அனைத்து விதத்திலும் துணை நிற்போம்;  மனைவி மற்றும் மனைவியின் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் ஆண்களின் உதவிக்காக தமிழ்நாடு அரசு, ஹெல்ப் லைன் துவங்க வேண்டும்” என்று தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்க தலைவர், வழக்கறிஞர் டி.அருள்துமிலன் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கை:

அருள்துமிலன்

“மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு,

நடிகர் ரவி மோகன் அவர்களின் கண்ணீர் பேட்டி தமிழ்நாட்டையே அதிரவைத்து இருக்கிறது. அவருக்கும் அவரைப் போன்ற பாதிக்கப்படும் ஆண்களுக்கும் அனைத்து விதத்திலும், ‘தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம்’ உறுதியாகத் துணை நிற்கும்.

இவரைப் போல மனைவி மற்றும் மனைவியின் குடும்பத்தினரால் குடும்ப வன்முறைக்கு ஆளாகும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உடல் ரீதியான வன்முறை மட்டுமின்றி, மன ரீதியான துன்புறுத்தல், பொருளாதாரக் கட்டுப்பாடு, சமூகத்திலிருந்து தனிமைப்படுத்துதல், பெற்ற குழந்தையைப் பார்க்கக்கூடத் தடை விதிப்பது போன்ற வழிகளில் ஆண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

நடிகர் ரவிமோகனும், தனது குழந்தைகளைப் பார்க்கக்கூட விடவில்லை என்று கண்ணீருடன் கூறியபோது, அதற்குப் பதிலளித்த மனைவி தரப்பு, “குழந்தைகளைப் பொருளாதார ரீதியாகப் பராமரிப்பது மட்டுமே தந்தையின் பொறுப்பு” எனக் கூறியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இதுபோன்று மனைவி மற்றும் மனைவி குடும்பத்தாரால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, தற்கொலை செய்துகொள்ளும் ஆண்களின் எண்ணிக்கையும் கவலை அளிக்கும் விதத்தில் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 2024ஆம் ஆண்டில்கூட தமிழ்நாட்டில் சுமார் 10 ஆயிரம் குடும்பத் தலைவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

சித்தரிக்கப்பட்ட ஓவியம் ( நன்றி ஏ.ஐ.)

இதில் 38.4 விழுக்காட்டுடன், குடும்பப் பிரச்சினை முதலிடத்தில் உள்ளது. இதர தற்கொலைகள் கடன், உடல் உபாதை, தொழிலில் பின்னடைவு எனத் திசைதிருப்பப்படுகின்றன.

ஆனால் குடும்ப வன்கொடுமையால் தற்கொலை செய்துகொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை இதைவிட மிக அதிகம்.

 ஒரு சில சம்பவங்களிலேயே உண்மை வெளிப்படுகிறது. கன்னியாகுமரி அகஸ்டின் ஜோசப், சென்னை நெற்குன்றம் மணிகண்டன், நெல்லை சுதாகர், தருமபுரி தினேஷ் ஆகியோர் சமீபகால உதாரணங்கள். மனைவி மற்றும் அவரது குடும்பத்தார் வன்கொடுமை தாளவில்லை என வெளிப்படுத்திவிட்டுத் தற்கொலை செய்துகொண்டவர்கள் இவர்கள். இதை வெளிப்படுத்தாமல் தற்கொலை செய்துகொள்பவர்கள் பல்லாயிரம் பேர்.

தற்கொலை செய்துகொள்ளும் ஆண்களின் வயது முதிர்ந்த  தாய், தந்தை, உடன் பிறந்தோர், பிள்ளைகள் என இதனால் ஆண்/ அனைவருமே பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.

ஆண்களின பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தி, ஆண்கள்பாதுகாப்பு சங்கம் நடத்திய போராட்டங்களில் ஒன்று ( 20210)

மனைவியின் வெளித்தொடர்பு காரணமாக கணவன் அனுபவிக்கும் கொடுமைகள், பொய்ப்புகார்கள், சட்ட அலைக்கழிப்புகள் பற்றி தினமும் செய்திகள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரை கொலை செய்த பெண்கள் குறித்தும் செய்திகளில் படிக்கிறோம்.

ஆகவேதான் மனைவி மற்றும் அவரது குடும்பத்தாரால் குடும்ப வன்கொடுமைக்கு ஆளாகும் ஆண்களுக்கு உதவி செய்ய ஹெல்ப்லைன் தொலைபேசியை மாநில அரசு அமைக்க வேண்டும் என, எமது “தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம்” பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.

ஆஸ்திரேலியா, பிரிட்டன் நாடுகளில் ஆண்களுக்கான ஹெல்ப் லைன் சேவை

பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இதுபோல பெண்களால் வன்முறைக்கு ஆளாகும் ஆண்களுக்கான ஹெல்ப்லைன் தொலைபேசி வசதி உண்டு.

இந்தியாவிலேயே முன்னோடியாகத் தமிழ்நாட்டில் அதுபோன்ற ஹெல்ப்லைன் வசதியைத் தாங்கள் கொண்டுவந்து, பெண்களால் – குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் ஆண்களை – அவர்களது உயிரைக் காப்பாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்”  – இவ்வாறு தனது அறிக்கையில், தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்க தலைவர் அருள்துமிலன் தெரிவித்து உள்ளார்.