மில்லியன் டாலர் பதிப்பகம்: எழுத்துலகில் ஒரு புதிய புரட்சி!

மில்லியன் டாலர் பதிப்பகம்: எழுத்துலகில் ஒரு புதிய புரட்சி!

திரைத்துறையில் புதுமைகளைப் புகுத்தி முத்திரை பதித்த கையோடு, இப்போது எழுத்துலகிலும் ஒரு ஆரோக்கியமான அதிர்வை ஏற்படுத்தக் களமிறங்கியிருக்கிறது மில்லியன் டாலர் பப்ளிகேஷன். வெறும் புத்தகங்களை அச்சிடுவது என்பதோடு நின்றுவிடாமல், திறமைமிக்க இளம் எழுத்தாளர்களின் கற்பனைக்கு உயிர்கொடுத்து, அவற்றை உலகத் தரத்திலான படைப்புகளாக மாற்றும் ஒரு கனவுத் தொழிற்சாலையாக இந்தப் பதிப்பகம் உதயமாகியுள்ளது. வாசிப்புப் பழக்கத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும், தரமான கதைகளைத் தேடிப் பிடித்து ஆவணப்படுத்தவும் இந்தப் புதிய முன்னெடுப்பு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் புதிய பயணம் குறித்து பதிப்பாளர்   யுவராஜ் கணேசன், “வெள்ளித்திரையில் புதிய திறமைகளை அடையாளப்படுத்தியது போலவே, எழுத்துலகிலும் ஒரு ஆரோக்கியமான மாற்றத்தை விதைக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். இளம் எழுத்தாளர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்துவதும், அவற்றை எதிர்காலக் காட்சி ஊடகங்களுக்கான வலுவான அடித்தளமாக மாற்றுவதுமே ‘மில்லியன் டாலர் பப்ளிகேஷன்’ தொடக்கத்தின் முதன்மை இலக்காகும்” என்றார்.

திப்பாளராக யுவராஜ் கணேசன் பொறுப்பேற்க, துறைத் தலைவராக திரு. புளியந்தோப்பு மோகனும், முதன்மைப் பொறுப்பாசிரியராக திரு. ஷாஜன் கவிதாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். புத்தகங்களின் முகப்பு மற்றும் உள் வடிவமைப்புகளைத் தலைமை ஏற்று நடத்த   ரேவதி பொறுப்பேற்றுள்ளார்.

வார்த்தைகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் வலிமையான திரைக்கதைகளையும், வசீகரமான இலக்கியங்களையும் கண்டறிந்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் இந்த முயற்சிக்கு, கலை மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் தங்களின் மேலான அன்பையும் பேராதரவையும் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். மில்லியன் டாலர் ஸ்டூடியோஸின் இந்த புதிய பரிமாணம், தமிழ் எழுத்துலகில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts