“விஜய்யை கிண்டலடிக்க ‘கோட்’ படத்தில் இருந்து எடுக்கப்பட்ட தலைப்பா?”: ‘TN 2026’ இயக்குநர் விளக்கம்!
தமிழக அரசியலில் 2026 ஆம் ஆண்டு என்பது ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படும் நிலையில், அதே தலைப்பில் ஒரு பரபரப்பான அரசியல் காமெடி திரைப்படம் உருவாவது பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. கே.ஆர்.ஜி. கண்ணன் ரவி குரூப் தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்துள்ள “TN 2026” தங்க நட்சத்திரம் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ஒரு சாதாரண சினிமா விழா போலன்றி, ஒரு பிரம்மாண்ட அரசியல் மாநாட்டிற்கான மேடை அமைப்பில், தொண்டர்களின் உற்சாக முழக்கங்களுக்கு இடையே இந்த நிகழ்வு கோலாகலமாகத் தொடங்கியது. ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள இத்திரைப்படம், நிஜ அரசியல் களத்தைப் பிரதிபலிக்கும் ஒரு திரைப் கண்ணாடியாக இருக்குமா என்ற கேள்வியுடன் விழா களைகட்டியது.
ஒளிப்பதிவாளர் P. G. முத்தையா:
“நடுவில் நான் சில காலம் கேமராவைப் பிடிக்காமல் இருந்தபோது, தம்பி ராமையா சார் தான் என்னை அழைத்து இந்தப் படத்தில் கமிட் செய்தார். உமாபதி ஒரு ‘ஸ்மார்ட்’ டைரக்டர், அவருக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவு இருந்தது. நட்டி சார் ஒரு மிகப்பெரிய சினிமாடோகிராஃபர் என்பதால் அவரிடம் வேலை செய்ய முதலில் தயங்கினேன். ஆனால், ஒரு சீனியராக அவர் எனக்குப் பல நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்து, வழிகாட்டியாக இருந்தார்.”
படத்தொகுப்பாளர் அரள் R தங்கம்:
“இதுவே எனது முதல் மேடை என்பதால் பதட்டமாக இருக்கிறது. உமாபதி அண்ணன் கொடுத்த வாய்ப்பு மிகப்பெரியது. தம்பி ராமையா, எம்.எஸ். பாஸ்கர், இளவரசு போன்ற ஜாம்பவான்களின் நடிப்பை எடிட்டிங் டேபிளில் பார்த்தபோதே வியந்தேன். இந்தப் படம் கமர்ஷியல் ரீதியாகப் பெரிய வெற்றி பெறும்.”
நடிகை ஷிரித்தா:
“தம்பி ராமையா சார் என்னிடம் ‘நம்பிக்கையோடு வாருங்கள்’ என்று அழைத்தபோது எனக்குத் தயக்கம் இருந்தது. ஆனால், இன்று இந்தப் படத்தில் நடித்ததற்காகப் பெருமைப்படுகிறேன். உமாபதி மிகவும் ஜாலியான மனிதர், அதனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் அழுத்தமே தெரியவில்லை. குறிப்பாக நட்டி சாரின் ரசிகையாகிவிட்டேன்; தண்ணீரை எந்தப் பாத்திரத்தில் ஊற்றினாலும் அதன் வடிவம் எடுப்பதைப் போல, அவர் ஒவ்வொரு கெட்டப்பிற்கும் தன்னை மாற்றிக் கொள்கிறார்.”

நடிகர் இளவரசு:
“சினிமாவை நேசிக்கும் தயாரிப்பாளர் ரவி சார், இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு செல்ல எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. உமாபதி என் நண்பரின் மகன் என்பதால் புகழவில்லை, ஒரு படத்தை மேலாண்மை செய்யும் விதம் அவரிடம் அபாரமாக இருக்கிறது. நானும் பாஸ்கர் சாரும், ராமையா சாரும் போட்டி, பொறாமை கடந்து ஒரு குடும்பமாக இதில் நடித்துள்ளோம். இந்தப் வயதிலும் நான் ஒரு பாட்டுப் பாடி, டான்ஸ் ஆடி, ஃபைட் செய்திருக்கிறேன் என்றால் அதற்கு உமாபதியின் உழைப்புதான் காரணம்.”
ஸ்டண்ட் இயக்குநர் மகேஷ் மேத்யூ:
“நானும் உமாவும் சின்ன வயசு நண்பர்கள். பொதுவாக ஹீரோக்கள் தான் சண்டை போடுவார்கள், ஆனால் இதில் நட்டி சாருடன் சேர்ந்து பாஸ்கர் சார், இளவரசு சார் என சீனியர் நடிகர்களும் வெயிலைப் பொருட்படுத்தாமல் சண்டைக் காட்சிகளில் கலக்கியிருக்கிறார்கள். அதன் பலன் திரையில் தெரியும்.”
நடன இயக்குநர் பிரவீன்:
“உமா ஒரு சிறந்த நடனக் கலைஞர். ஒரு பழைய கால ஸ்டைல் பாட்டு வேண்டும் என்று அவரே எனக்குப் பல மூவ்மெண்டுகளைச் செய்து காட்டினார். அவர் ஒரு இயக்குநராகவும் ஸ்டண்ட் மாஸ்டராகவும் உயர்ந்து நிற்பது மகிழ்ச்சி அளிக்கிறது.”
நடிகை விஜி சந்திரசேகர்:
“நான் நடித்த படங்களிலேயே மிக மகிழ்ச்சியாகப் பணியாற்றிய படம் இதுதான். ‘க்ளூக்கோஸ் மாமி’ என்ற சுவாரஸ்யமான கேரக்டரில் நடித்துள்ளேன். படத்தில் நல்ல மெசேஜ் இருக்கிறது, அதே சமயம் போரடிக்காத எண்டர்டெயின்மென்ட்டும் உண்டு. நட்டி சாரின் உழைப்பு அபாரமானது.”
நடிகர் ஆதித்யா கதிர்:
“அரசியல் கூட்டத்தில் இருப்பது போன்ற ஒரு வைப் இங்கே இருக்கிறது. ‘நாம்தான் ஜெயிப்போம்’ என்ற நம்பிக்கை படக்குழுவிடம் தெரிகிறது. தம்பி ராமையா சார் தான் என்னை ஒரு மகனைப் போலப் பார்த்துக்கொண்டு இந்த வாய்ப்பைப் பெற்றுத்தந்தார்.”
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா:
“மேடையில் இருக்கும் ஒவ்வொரு கலைஞரிடமிருந்தும் நிறையக் கற்றுக்கொண்டேன். உமாபதியின் சிரிப்பில் ஒரு வசியம் இருக்கிறது, அந்தச் சிரிப்புதான் அவரை இந்த உயரத்திற்கு அழைத்து வந்திருக்கிறது. இந்தப் படத்தில் உள்ள பாடல்கள் மக்கள் மனதைக் கவரும்.”
நடிகை இந்திரஜா ரோபோ சங்கர்:
“தம்பி ராமையா பெரியப்பா எங்கள் குடும்பத்தின் ஒரு அங்கமாகிவிட்டார். ‘இது உன் வீடு, எப்போது வேண்டுமானாலும் வா’ என்று எனக்குப் புகலிடம் கொடுத்தவர். உமா அண்ணன் எனக்கு உடன்பிறவா சகோதரராக இருந்து இந்த மேடை வரை கையைப் பிடித்து அழைத்து வந்துள்ளார்.”
நடிகர் சாம்ஸ்:
“அரசியலில் எனக்கு ஆர்வம் கிடையாது, ஆனால் இந்தப் படத்தில் காட்டப்படும் ‘கட்சி’ எனக்குப் பிடித்திருந்தது. தயாரிப்பாளர் ரவி சார் ஒரு நல்ல உழைப்பாளி. உமாபதி மல்டி-டேலண்ட் கலைஞர்; நடிப்பு, மார்ஷியல் ஆர்ட்ஸ் எனப் பல துறைகளில் விஸ்வரூபம் எடுப்பார்.”
பாடலாசிரியர் மோகன்ராஜ்:
“அரசியல் படத்திற்குப் பாட்டு எழுத வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. ஆத்திகம், நாத்திகம் எனப் பல முரண்பாடுகளைக் கலந்து ஒரு பாடலை எழுதியுள்ளேன். இது நிச்சயம் சமூகத்தில் விவாதத்தை ஏற்படுத்தும்.”
தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்:
“இந்தப் படத்தின் டீசர் ஒரு சிவகாசி பட்டாசு பேக்கேஜ் போல இருக்கிறது. எங்கு சென்றாலும் இதைப் பற்றியே கேட்கிறார்கள். தம்பி ராமையா எப்போதும் வெற்றிப் படங்களையே கொடுப்பவர், அந்த வரிசையில் உமாபதியும் இணைவார்.”
நடிகர் M. S. பாஸ்கர்:
“மக்களைச் சிரிக்க வைப்பது மட்டும் நோக்கமல்ல, சிந்திக்கவும் வைக்க வேண்டும். உமாபதி எனக்குப் படத்தில் முழு சுதந்திரம் கொடுத்தார். என் நீண்ட கால நண்பர்களான இளவரசு, ராமையாவுடன் நடித்தது பழைய நினைவுகளைத் தூண்டியது. இந்தப் படம் ஒரு கமர்ஷியல் ஹிட்டாக அமையும்.”
இயக்குநர் உமாபதி ராமையா:
“தயாரிப்பாளர் கண்ணன் ரவி சார் கொடுத்த முழு சுதந்திரம் தான் இந்தப் படம் இவ்வளவு பிரம்மாண்டமாக வரக் காரணம். நட்டி சார் பல கெட்டப்புகளில் கடுமையாக உழைத்துள்ளார். இது யாரையும் குறிவைத்து எடுக்கப்பட்ட படம் அல்ல; ஒரு ஜாலியான அரசியல் சினிமா மட்டுமே. சினிமா ரசிகனாகப் பார்த்தால் நிச்சயம் ரசிப்பீர்கள்.”
கதை ஆசிரியர் தம்பி ராமையா:
“நிஜ அரசியல் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி. இந்தப் படம் ஒரு குடும்ப அனுபவத்தின் வெளிப்பாடு. எத்தனையோ கட்சிகளில் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். யாரையும் சங்கடப்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை. குறிப்பாக தம்பி ஆதவ் அர்ஜுனா இதைப் புரிந்துகொள்ள வேண்டும். மேலோட்டமான தகவல்களை வைத்து எதையும் தவறாகக் கணிக்க வேண்டாம். திரையில் பார்த்தால் அதன் நேர்மை உங்களுக்குப் புரியும். என் மகன் தன் உழைப்பால் உயர்ந்திருப்பதைப் பார்க்கும்போது ஒரு தந்தையாகப் பெருமை கொள்கிறேன்.”

நடிகர் நட்டி நட்ராஜ்:
“உமாபதி ஒரு கடின உழைப்பாளி. இன்னும் சில ஆண்டுகளில் இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குநராக அவர் இருப்பார். இரண்டு தேசிய விருது பெற்ற நடிகர்களுடன் (தம்பி ராமையா, எம்.எஸ். பாஸ்கர்) நடித்தது எனக்குப் பெரிய பாடம். இது யாரையும் தாக்கும் படம் அல்ல, முதல் காட்சியிலிருந்து கடைசி வரை மக்களைச் சிரிக்க வைக்கும் ஒரு கமர்ஷியல் விருந்து.”
திரைக்கலைஞர்களின் உரைகளுக்குப் பிறகு, செய்தியாளர் சந்திப்பு தொடர்ந்தது. அப்போது tamilankura.com சார்பில், “ஏற்கெனவே இந்தத் திரைப்படம், நடிகர் விஜயின் அரசியல் குறித்து கேலி செய்வதாக இருக்கும் என் அவரது ரசிகர்களால் கூறப்படுகிறது. கடுமையாக படக்குழுவினரை விமர்சிக்கின்றனர். தவிர கோட் படத்தில் விஜய் வைத்திருக்கும் கார் எண் டி.என்.2026 என்பதுதான். அதைத்தான் தலைப்பாக வைத்து இருக்கிறீர்கள். ஆக விஜயை கிண்டலடிக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துவது போல உள்ளதே” என கேட்டோம்.
அதற்கு இயக்குநர், “நிச்சயமாக அப்படி இல்லை. நீங்கள் சொல்லித்தான் இந்தத் தகவலை கேள்விப்படுகிறோம். எங்கள் படத்துக்கு இப்படியோர் தலைப்பு தேவைப்பட்டது. அதனால் வைத்தோம். மற்றபடி வேறு காரணம் இல்லை” என்றார்.

