“பட்ஜெட்ல முக்காவாசி ஹீரோ வாங்குறாரு!”: ‘ரூம் பாய்’ பட விழாவில் தயாரிப்பாளர் ஆவேசம்!

“பட்ஜெட்ல முக்காவாசி ஹீரோ வாங்குறாரு!”: ‘ரூம் பாய்’ பட விழாவில் தயாரிப்பாளர் ஆவேசம்!

திரைப்படக் கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரூம் பாய்’. ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரித்துள்ள இத்திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் திரை பிரபலங்கள் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றது.

கதைக்களம்: சஸ்பென்ஸ் கலந்த ஃபேமிலி சென்டிமென்ட்

ஏலகிரியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் ‘ரூம் பாயாக’ வேலை செய்கிறார் படத்தின் நாயகன் நிகில். அமைதியாகச் செல்லும் அவர் வாழ்க்கையில், அந்த ஹோட்டல் மேனேஜர் மர்மமான முறையில் இறந்து போகிறார். அதே நேரத்தில், சிறுவர் சீர்திருத்தப் பள்ளி கண்காணிப்பாளர் ஒருவரும் காணாமல் போகிறார். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் நாயகனுக்கும் என்ன சம்பந்தம்? பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? என்பதை விறுவிறுப்பான திரைக்கதையாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.


“தயாரிப்பாளர்கள் நலனே முக்கியம்” – ஜி.கே.எம். தமிழ்குமரன்  

“சினிமா இன்று ஒரு முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறது. இன்று காலை தான் தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ஒன்றுகூடி ஆலோசனையில் ஈடுபட்டோம். தியேட்டர்களில் சின்ன படங்களுக்கு முறையான முன்னுரிமையும், காட்சிகளும் கிடைப்பதில் இருக்கும் சிக்கல்களைத் தீர்ப்பது குறித்துத் தீவிரமாக விவாதித்தோம். இதற்காகச் சில புதிய வழிகாட்டுதல்களை உருவாக்கி இருக்கிறோம்.

அடுத்த சில ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் பெரிய ஆக்கபூர்வமான மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக, புதிதாக வரும் தயாரிப்பாளர்களுக்கும், இளம் இயக்குநர்களுக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது எங்கள் கடமை. ‘ரூம் பாய்’ போன்ற சிறு முதலீட்டுப் படங்கள் ஜெயித்தால்தான் சினிமா ஆரோக்கியமாக இருக்கும். இந்த டிரெய்லர் காட்சிகள் அந்த நம்பிக்கையைத் தருகிறது.”


தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் ஆதங்கமும் அறிவுரையும்

ஃபைவ் ஸ்டார் கதிரேசன் (செயலாளர்): “இன்று சினிமா பட்ஜெட்டில் 70 சதவீதம் ஹீரோக்களின் சம்பளமாகவே இருக்கிறது. மீதமுள்ள 30 சதவீதத்தில் தான் தரமான படத்தை எடுக்கத் தயாரிப்பாளர் போராடுகிறார். படம் தோல்வியடைந்தால் அந்தத் தயாரிப்பாளர் தெருவில் நிற்கும் சூழல் தான் இங்குள்ளது. ஆந்திராவில் நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். ஆனால் இங்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரை தவிர வேறு யாரும் நஷ்டமடைந்த தயாரிப்பாளர்களுக்கு உதவுவதில்லை. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்தப் படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’ வெளியிட்டு ஆதரவு தந்தது பாராட்டுக்குரியது.”

ராதாகிருஷ்ணன் (செயலாளர்): “பெரிய ஹீரோவோ, தொழில்நுட்பக் கலைஞரோ யாராக இருந்தாலும், ஒரு தயாரிப்பாளரிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டால் அவர்களுக்கே முன்னுரிமை தர வேண்டும். தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே சினிமாவைச் சீர்படுத்த முடியும். தயாரிப்பாளர் சங்கம் விரைவில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது.”


25 ஆண்டு கனவு: இயக்குநர் ஜெகன் ராயன் நெகிழ்ச்சி

“2004-லேயே சவுண்ட் இன்ஜினியரிங்கில் மாநில விருது பெற்றாலும், ஒரு இயக்குநராக மேடை ஏற எனக்கு 25 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. என் தந்தை என் மீது வைத்த நம்பிக்கையே என்னை இத்தனை காலம் ஓட வைத்தது. தயாரிப்பாளர் சூரியகலா அவர்கள் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். இந்தப் படம் ஒரு எமோஷனல் திரில்லராக உங்கள் அனைவரையும் கவரும்,” என நெகிழ்ச்சியுடன் பேசினார் இயக்குநர்.

படக்குழு விபரம்: அறிமுக நடிகர் C.நிகில் நாயகனாக நடிக்க, இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், ஹர்ஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

Related Posts