பங்களாதேஷிலும் ‘மகளிர் உரிமைத் தொகை’! ஆட்சியைப் பிடித்த பி.என்.பி.! ஆபத்து என்ன?

பங்களாதேஷிலும் ‘மகளிர் உரிமைத் தொகை’! ஆட்சியைப் பிடித்த பி.என்.பி.! ஆபத்து என்ன?

கட்டுரை: பத்திரிகையாளர் டி.வி.சோமு

ங்களாதேஷில் தேர்தல் திருவிழா முடிந்து, முடிவுகள் வெளியாகிவிட்டன. மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 212 இடங்களை வாரிச் சுருட்டி இமாலய வெற்றி பெற்றுள்ளது பங்களாதேஷ் தேசிய கட்சி (பி.என்.பி.).

இந்தியாவுடனான உறவு, சிறுபான்மையினர் நிலை, பொருளாதார மீட்பு என ஏகப்பட்ட கேள்விகள் ஒரு பக்கம் வரிசை கட்டி நின்றாலும், பி.என்.பி. கட்சியின் இந்த பெரு வெற்றிக்கு பின்னால் இருப்பது ‘மகளிர் உரிமைத் தொகை’ எனும் துருப்புச்சீட்டுதான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

அதிரடி வாக்குறுதிகள்!

தேர்தல் களத்தில் பி.என்.பி. கட்சி அள்ளி வீசிய வாக்குறுதிகள் சாதாரணமானவை அல்ல. அக்கட்சியின் தலைவர், தாரிக் ரஹ்மான் ஏராளமான அறிவிப்புகளை கொட்டினார்.

ஃபேமிலி கார்டு

மாணவிகளுக்கு முதுகலை வரை இலவசக் கல்வி, மாணவர்களுக்கு இலவச சீருடை, ஆசிரியர்களுக்கு இலவச டேப்லெட், கல்வி நிறுவனங்களில் இலவச வைஃபை என அதிரடி காட்டினார்கள். விவசாயிகளின் 10,000 டாக்கா வரையிலான கடன்களையும் வட்டியையும் முழுமையாகத் தள்ளுபடி செய்வதாகவும் அறிவித்தனர். 

இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல் அமைந்ததுதான் அந்த ‘ஃபேமிலி கார்டு’ (Family Card) வாக்குறுதி. “இனி குடும்ப அட்டைகள் அனைத்தும் பெண்கள் பெயரிலேயே வழங்கப்படும், அவர்களின் வங்கிக் கணக்கில் மாதம் 2,500 டாக்கா செலுத்தப்படும்” என்ற அந்த அறிவிப்புதான் வெற்றிக் கனியைப் பறிக்க உதவியிருக்கிறது. இதைக் கேட்கும்போது நமக்குத் தமிழ்நாட்டின் மகளிர் உரிமைத் தொகை நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

உரிமைத் தொகையின் வேர் எங்கே?

இந்தக் கருத்தாக்கம் முதன்முதலில் ஒலித்தது 1972-ல். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான  இத்தாலியின் படுவா நகரில் நடந்த பன்னாட்டுப் பெண்கள் மாநாடு நடந்தது.

1972 இத்தாலி மகளிர் மாநாடு

அதில்  செல்மா ஜேம்ஸ் என்ற பெண்ணியவாதிதான் “குடும்பத் தலைவிகளுக்கு ஊதியம்” என்ற முழக்கத்தை முன்வைத்தார். அதே ஆண்டு மான்செஸ்டர் மாநாட்டிலும் இதற்கான ஆய்வறிக்கையை அவர் சமர்ப்பித்தார். ஐரோப்பிய நாடுகள் இதைக் கண்டு கொள்ளவில்லை.

ஹ்யூகோ சாவேஸ்

ஆனால் தென்னமெரிக்க  நாடான வெனிசுவேலா அதிபர் ஹ்யூகோ சாவேஸ் 2006ல்  இதைச் செயல்படுத்திக் காட்டினார். ஏழ்மையில் இருந்த சுமார் 1 லட்சம் இல்லத்தரசிகளுக்கு, அந்த நாட்டின் குறைந்தபட்ச ஊதியத்தில் 80 சதவீதத் தொகையை (அப்போது சுமார் 180 டாலர்கள்) மாதாந்திர ஊதியமாக வழங்கினார்.

இந்தியாவில்…!

வெனிசுவாலாவில் நடந்த அதிசயம், இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. இங்கே, 2010-ல் ‘தேசிய இல்லத்தரசிகள் சங்கம்’ தங்களை ஒரு தொழிற்சங்கமாக அங்கீகரிக்கக் கோரி விண்ணப்பித்தது. ஆனால், “வீட்டு வேலை என்பது ஒரு வணிகம் அல்ல” என்று கூறி அனுமதி மறுக்கப்பட்டது.

2020ம் ஆண்டு, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன், இந்த “பெண்களின் வீட்டு வேலைகளுக்கு ஊதியம்” என்ற கருத்தைப் பேசி கவனிக்க வைத்தார்.

இதற்கிடையே, ரஜினிகாந்த் கட்சி துவக்க களம் இறங்கியபோது, கொள்கைகளை வகுக்க நியமிக்கப்பட்ட, தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜூன மூர்த்தி, “ரஜினிக்காக நான் உருவாக்கிய திட்டமே, மகளிர் உரிமைத் தொகை” என்று பின்னாட்களில் கூறினார்.

அறிவிப்பில் முந்தியது யார்?

2021 மே மாதம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடந்தது. அப்போது மார்ச் 11ம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிட தயாராக இருந்தார், மேற்கு வங்க – திரிணமூல் காங்கிரஸ் தலைவர்- மம்தா பானர்ஜி. ஆனால் அவர் விபத்தில் சிக்கவே, தேர்தல் அறிக்கை வெளியிடுவது 17ம் தேதிக்கு தள்ளிப்போனது.

இதற்கிடையே தமிழ்நாட்டில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., மார்ச் 13ம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிட்டது.

மம்தா – மு.க. ஸ்டாலின்

இரண்டு தேர்தல் அறிக்கையிலும், மகளிர் உரிமைத்திட்டம் இருந்தது. இதில் இன்னொரு விசயம், திமுக அறிக்கை வெளியிட்ட மறுநாள், மகளிருக்கான மாதத் தொகை ரூ.1500 அளிக்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் அறிவித்தார். 

செயலில் முந்தியது யார்?

மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்தவுடன், இத் திட்டத்துக்கான முன்னேற்பாடுகளை ஆரம்பித்தார் மம்தா பானர்ஜி. ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நிதி வழங்கப்பட்டது. பொதுப்பிரிவு பெண்களுக்கு மாதம் ரூ.1200. பட்டியல் இன பெண்களுக்கு, ரூ.1200.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 28 மாதங்கள் கழித்து – 2023 செப்டம்பர் 15-ல் -₹1,000 வழங்கும் திட்டம் துவங்கியது.

இந்த வரிசையில் மூன்றாவதாக இணைந்தது மகாராஷ்டிரா. 2024 ஜூன் மாதம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்த ‘லட்கி பஹின்’ (செல்லத் தங்கை) திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ₹1,500 வழங்கப்படுகிறது.

தொடர்ந்து கர்நாடகா, ம.பி. என பல மாநிலங்களில் இந்தத் தொகை தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

கஜானா தாங்குமா?

இந்நிலையில்தான் சமீபத்திய தேர்தலில் பங்களாதேசில், பி.என்.பி. கட்சி, பெண்களுக்கு மாதம் 2,500 டாக்கா உதவித்தொகை அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் இந்தியாவின் ஒரு பகுதிதான். மத்திய அரசுதான் பணத்தை அச்சிடுகிறது. மத்திய அரசின் நிதிப் பகிர்வு மற்றும் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் (GST, மது விற்பனை) போன்றவை நிதிக்கு கைகொடுக்கின்றன. ஆனாலும்கூட, “உழைப்பின்றி அளிக்கப்படும் பணம், பொருளாதாரத்துக்கு ஆபத்து” என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

பங்களாதேஷோ தனி நாடு. அங்கே 2,500 டாக்கா என்பது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 1,900 பங்களாதேஸ் பணத்துக்குச் சமம். ஆரம்பத்தில் சுமார் 40 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்கள். நாட்டின் பட்ஜெட்டில் பெரும் பகுதியை இதற்கே ஒதுக்க வேண்டியிருக்கும்.

அந்நாட்டின் கஜானாவில், அந்நிய செலாவணி கையிருப்பு இல்லை, பண வீக்கம், 9% முதல் 10% வரை எகிறிக் கிடக்கிறது. அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளது. இந்த நிலையில், மாதம் 2,500 டாக்கா வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முடியுமா என்பது கேள்விதான்.

அமர்த்தியா சென் எச்சரிக்கை!

உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர், நோபல் பரிசு பெற்ற அமெர்த்தியா சென் ‘பொருளாதாரத்தின் மனசாட்சி’ என்று போற்றப்படுபவர்.

அமர்த்தியா சென்

அவர் ஏற்கெனவே, “மக்களுக்கு கட்டணம் இல்லா கல்வி, மருத்துவம் ஆகியவற்றை கொடுப்பது சிறந்தது. அதே நேரம், உழைப்பில்லாமல் பணம் கொடுப்பது சரியல்ல. பொருள் உற்பத்திதான் செல்வம். நோட்டு அல்ல” என்கிறார்.  அவர் கூறியது பங்களாதேசுக்கு மட்டுமல்ல  மேற்குவங்காளம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கும்  பொருந்தும்.

பண நோட்டை எரித்த மக்கள்!
ஆம்.. பொருள் உற்பத்தி இல்லாமல், பணம் மட்டும் புழங்க ஆரம்பித்தால், ரூபாய் நோட்டு குப்பையாகத்தான் போகும் என்பதற்கு வரலாற்று சாட்டிகள் உண்டு.

முதல் உலகப் போருக்குப் பிறகு 1923ல் ஜெர்மனியின் பொருளாதாரம் அதள பாதாளத்திற்குச் சென்றது. பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் தவித்தனர். “பணம்தானே இல்லை.. அச்சிட்டு தள்ளு” என அரசு முடிவெடுத்தது. பணத்தை மக்களுக்கு வாரி வழங்கியது..

பொருட்கள் இல்லையே…

ஆகவே அவற்றின் விலை இன்னும் உயர்ந்தது. பணத்துக்கு மதிப்பில்லாமல் போனது.

ஒரு ரொட்டி வாங்க, ஒரூ மூட்டை நிறைய நோட்டுகளை எடுத்துச் செல்ல வேண்டிய நிலை.இரவு குளிரைப்போக்க, பண நோட்டுகளை எரித்து குளிர் காய்ந்தார்கள் மக்கள்.

1946ல் ஹங்கேரியில் இதே நிலை. ஒரு நாளைக்கு இரு முறை, பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்தது. அந்நாட்டு அரசு, 100 100 மில்லியன் ட்ரில்லியன் (100,000,000,000,000,000,000) பண நோட்டை அச்சடித்தது.

2000ல் ஜிம்பாவே நாட்டில் இதே நிலை. மிகச் சமீபத்தில் என்றால், வெனிசுலாவை சொல்லலாம்.

பணத்துக்கு மதிப்பு இல்லாததால், அந்நாட்டு மக்கள் ரூபாய் நோட்டுகளை மடித்து பைகள் , தொப்பிகள் மற்றும் கைவினைப் பொருட்களைச் செய்து சுற்றுலாப் பயணிகளுக்கு விற்றுப் பிழைத்தனர். பண நோட்டுகளை வைத்து வித்தை காட்டி வயிறு நிரப்பினர்.கடைகளில் பணத்தை எண்ணுவதை நிறுத்திவிட்டு, துல்லியமான தராசில் வைத்து எடை போட்டு வாங்க ஆரம்பித்தனர். அந்த அளவுக்கு நோட்டுகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

பங்களாதேஷுக்கு இது பாடமா?

பி.என்.பி. கட்சித் தலைவர் தாரிக்,  பணத்திட்டங்களை அறிவித்தபோது, மக்கள் உற்சாகமாய் கொண்டாடினர். அவரது கட்சிக்கு பெருவாரியாக வாக்களித்தனர். இப்போது அவர்தான் பிரதமர்.  இப்போதும்கூட,  தற்போது அறிவித்துள்ள ‘உரிமைத் தொகை’ திட்டங்களை அவர் நிறைவேற்றுவர் என மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கிறார்கள். ஆனால் அரசு போதிய வருவாய் இல்லாமல் பணத்தை அச்சிட்டால்  2,500 டாக்கா என்பது ஒரு வாரச் செலவுக்குக் கூடப் பத்தாமல் போகும் நிலை வரும்.

மக்கள் வங்கியில் வைத்திருக்கும் சேமிப்புப் பணம் வெறும் காகிதமாக மாறும்.

இந்த எச்சரிக்கை, பங்களாதேஸ் நாட்டுக்கு மட்டுமல்ல.. உழைப்பின்றி மக்களுக்கு பணத்தைத் தரும் எந்த அரசுக்கும் பொருந்தும்!

Related Posts