ஜப்பான் டூ சினிமா: . ‘சிறை’ படத்தின் மிரட்டல் வில்லன் ரகு இசக்கி!

ஜப்பான் டூ சினிமா: . ‘சிறை’ படத்தின் மிரட்டல் வில்லன் ரகு இசக்கி!

தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்களுக்கு எப்போதும் ஒரு தனி மாஸ், உண்டு. அந்த வரிசையில், இன்று வெளியாகியிருக்கும் ‘சிறை’ திரைப்படத்தில் தனது மிரட்டலான நடிப்பால் ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்திருப்பவர் நடிகர் ரகு இசக்கி.

திமிர் பிடித்த குடிகாரனாக, மனைவியை டார்ச்சர் செய்பவனாக வந்து அனைவரின் கோபத்துக்கும் ஆளாகி இருக்கிறார். இதுதான் அவரது நடிப்பின் வெற்றி.

ஏற்கெனவே பூஜை, தர்மதுரை, யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்ளிட்ட படங்களில் முத்திரை பதித்தவர், ரகு இசக்கி.

தென்காசியை பூர்வீகமாகக் கொண்ட ரகு இசக்கி, சென்னையில்தான் பிறந்த வளர்ந்தார். பி.இ. (Production Engineering) பட்டதாரி. படிப்பை முடித்த கையோடு ஜப்பானில் ஒரு நல்ல வேலையில் சேர்ந்தார். ஆனால், ரத்தத்தில் ஊறியிருந்த சினிமா கனவு அவரை சும்மா விடவில்லை. கைநிறைய சம்பளம் தந்த ஜப்பான் வேலையை உதறிவிட்டு சென்னைக்கு வந்தவர், சினிமா மேதை பாலு மகேந்திராவின் சினிமா பட்டறையில் இணைந்து நடிப்புப் பயிற்சியை முறையாகக் கற்றார்.

‘நான் தான் பாலா’ படத்தில் ஒரு இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் அறிமுகமானாலும், இவரது நடிப்புத் திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டியது, பூஜை திரைப்படம்.

தொடர்ந்து தர்மதுரை, பரியேறும் பெருமாள் என பயணம் தொடர்ந்தது. இப்போது, சிறை படத்தில் கூடுதலாக கவனம் ஈர்த்து இருக்கிறார்.

“நிஜ குடிகாரர் போலவே நடித்து இருக்கிறீர்கள்.. பழக்கம் உண்டா” என கே்டடதும், “அய்யய்யோ.. நான் டீ டோட்டலர். இயக்குநர் சொன்னதை அப்படியே செய்தேன்” என்கிறார்.

“படம் பார்த்துவிட்டு வெங்கட் பிரபு, ரஞ்சித் போன்ற முன்னணி இயக்குநர்கள் பாராட்டியது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிற இவர், பிஸியான வில்லன் ஆகிவிட்டார்.

நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில் மணிகண்டன் நடிக்கும் படம், லட்சுமி சரவணகுமார் இயக்கத்தில் ‘லிங்கம்’ ஓ.டி.டி. தொடர் என கைவசம் படங்கள் ஏராளம்.

“காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம்.. விரைவில் அதுவும் நடக்கும் என நினைக்கறேன்” என்கிறார் உற்சாகமாக.

நாமும் ரகு இசக்கியை வாழ்த்துவோம்!

Related Posts