டிசம்பர் 12: மனிதர்களை நேசிக்கும் சேரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
டி.வி.சோமு பக்கம்:
1999… குங்குமம் வார இதழுக்காக, இயக்குநர் சேரன் அவர்களை நான் எடுத்த பேட்டி பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தப் பேட்டிக்காக அவரது வீட்டுக்குச் சென்றிருந்தேன்.
சென்னை கோடம்பாக்கம் டெலிபோன் எக்ஸேஞ்ச் அருகே வீடு.
நான் சென்றபோது, சேரனும் இளைஞர் ஒருவரும் உணவருந்திக் கொண்டு இருந்தனர். சேரனின் மனைவியார் பறிமாறிக்கொண்டு இருந்தார்.
என்னையும் சாப்பிட அழைத்தார். “நான் இப்போதுதான் சாப்பிட்டு வந்தேன்” என்றேன். அருகில் இருந்த சோபாவில் என்னை அமரச் சொன்னார்.
அந்த இளைஞர் சேரன் அல்லது அவரது மனைவியின் தம்பியாக இருக்கும் என நினைத்தேன்.
அவர்கள் இருவரும் சாப்பிட்டு முடித்ததும் பேச ஆரம்பித்தோம். அப்போதுதான் தெரிந்தது… அந்த இளைஞர் சேரனின் உதவி இயக்குநர்.
பொதுவாக, திரைத்துறையில் உதவி இயக்குநர்களை அடிமையாகவே நடத்துவர். ஆனால் சேரன் விதிவிலக்கானவர்களில் ஒருவராக இருந்தார்.
( சேரனுடன் நான் பார்த்த அந்த உதவி இயக்குநர்தான் பின்னாட்களில் புதிய கீதை, ராமன் தேடிய சீதை உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜெகன்.)
திரைப்படங்களில் மட்டுமல்ல.. நிஜத்திலும் மனிதத்தை முக்கியமாக கருதினார்.
அவரது சில படங்களின் கருத்துக்களில் எனக்கு முரண்பாடு இருக்கலாம். ஆனால், சமுதாயத்துக்கு நல்லது என தான் நினைத்ததையே, தனது படைப்பு மூலமாக வெளிப்படுத்தினார். அந்த நேர்மையும், சமூக அக்கறையும்.துணிச்சலும் அவருக்கு உண்டு.
“பொது நோக்கம் இல்லாமல் என்னால் படம் இயக்க முடியாது.. அப்படியோர் சிந்தனையே எனக்கு வராது” என்று ஒரு முறை கூறினார்.
மக்கள் மீது அக்கறை கலைப்படைப்பாளர், இயக்குநர் சேரன் அவர்களுக்கு இன்று – டிசம்பர் 12 – பிறந்தநாள்.
அவர் உடல் நலத்துடனும் பொருளாதார வளத்துடனும் நீடு வாழ வேண்டும்! அது, சமுதாயத்துக்கு நல்லது!
-டி.வி.சோமு

