பல்டி: திரை விமர்சனம்
பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் புரொடக்ஷன்ஸ் சார்பில் சந்தோஷ் டி.குருவில்லா – பினு ஜார்ஜ்அலெக்ஸாண்டர் ஆகியோர் தயாரிப்பில் உன்னி சிவலிங்கம் இயக்க, ஷான் நிகம் – சாந்தனு இரட்டை நாயகர்களாக நடித்துள்ள திரைப்படம், ரைட்.
ஒரு கொலைக் காட்சியில்தான் அதிரடியாக படம் துவங்குகிறது.
ஷான் நிகம், சாந்தனு அவருடைய நண்பர்கள் சேர்ந்து பஞ்சமி என்கிற பெயரில் கபடி குழு வைத்துள்ளனர். பல போட்டிகளில் வெற்றி பெறுகின்றனர்.
அதே ஊரில் பொற்றாமரை என்கிற கபடி குழுவை நடத்துகிறார் செல்வராகவன். அநியாய வட்டிக்கு விட்டு சம்பாதிக்கும் இவர், வங்கி ஒன்றை துவங்கமும் திட்டமிட்டு வருகிறார்.
பஞ்சமி டீமை சேர்ந்த சாந்தனுவிடம், அவரது நண்பர்களை தனது கபடி குழுவுக்காக விளையாட அழைக்கிறார். சாந்தனுவும் பணத்திற்காக ஒப்புக்கொள்கிறார். ஆனால் அவரது குழுவினர், சோடா பேக்டரி அதிபரான அல்போன்ஸ் புத்திரன் குழுவில் விளையாட ஒப்புக்கொண்டு இருந்தனர்.
இதைத் தொடர்ந்து மோதல் துவங்குகிறது. விளையாட்டு குழுவினராய் இணைந்த நண்பர்கள், டான்களின் உலகில் நுழைகின்றனர். அதன் பிறகு என்ன ஆனது என்பதே அதிரடி திரைப்படம்.
நாயகன் ஷான் நிகம் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நண்பர்களிடம் காட்டும் பாசம், நண்பனை தவறாக நினைத்தாலும் அவனை ஏதும் செய்துவிடக் கூடாது என நினைப்பது, காதலியிடம் வெளிப்படுத்தும் நேசம், அவளுக்கு பிரச்சினை என்றதும் துடிப்பது… அதை வெளிக்காட்டாமல் அடக்கிக் கொள்வது என சிறப்பான நடிப்பு.
இன்னொரு நாயகனான சாந்தனு அட்டகாசமாக நடித்து இருக்கிறார். ப்ளூ ஸ்டாரில் துவங்கி அவரது கிராஃப் உயர்ந்துகொண்டே போகிறது. அதுவும் இந்தப் படத்தில் முழு ஆக்க்ஷன் ஹீரோ ஆகி இருக்கிறார். சண்டைக் காட்சிகளில் மிரட்டுகிறார். தவிர.. நண்பர்களிடம் அன்புடன் பழகுவது, தன்னை நண்பன் தவறாக நினைத்துவிட்டான் என்றதும் அதிர்ச்சியை முகபாவத்திலேயே வெளிப்படுத்துவது என்று நடிப்பிலும் முத்திரை பதித்து இருக்கிறார்.
நாயகி ப்ரீதி அஸ்ரானியும் இயல்பான நடிப்பை அளித்து இருக்கிறார். அவர் தனது காதலை வெளிப்படுத்தும் காட்சி – முகபாவம் ரசிக்க வைக்கிறது. தனது அண்ணன் பாதிக்கப்பட்டதை அறிந்து துடிப்பது, கந்து வட்டிக்காரனை எதிர்த்து நிற்பது என பல உணர்ச்சிகளை வெளிப்படுத்தி உள்ளார்.
அதிரடி வட்டி வாங்கி கொழுக்கும் தாதாவாக வருகிறார் செல்வராகவன். பொதுவாக இவரது நடிப்பில் செயற்கைத் தனம் இருக்கும். ஆனால் இந்தப் படத்தில், சிரித்தபடியே பிறரை டார்ச்சர் செய்ய உத்தரவிட்டு வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இவரது போட்டியாளராக வரும் அல்போன்ஸ் புத்திரனும் வில்லத்தனத்தை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் பாத்திரம் அறிந்து நடிப்பை அளித்து உள்ளனர்.
சாய் அபயங்கர் இசையில் பாடல்கள் ஓ.கே. ரகம். அதே நேரம், பின்னணி இசை படத்துக்கு பலம்.
அலெக்ஸ் சே.புலிகாட்டின் ஒளிப்பதிவு சிறப்பு. வித்தியாசமான கோணங்களில் கவர்கிறார். சண்டைக் காட்சிகளில் கூடுதலாக கவனம் ஈர்க்கிறார்.
அப்பாவித்தனமாக பழகும் நண்பர்கள், எதிர்பாராத விதமாக திசை மாறி சந்திக்கும் பிரச்சினைகள்.. தவறான புரிதல்கள், நிழல் உலக விசயங்கள் என சுவாரஸ்யமாக படத்தை அளித்து இருக்கிறார், இயக்குநர் உன்னி சிவலிங்கம்.
ரேட்டிங்: 3.2/5
.
.

