தனுஷின் ‘இட்லி கடை’ டிரெய்லர்! ஒரு கோடியே முப்பது லட்சம் வியூவர்ஸ் கடந்து சாதனை!
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் இட்லி கடை. இவரது இயக்கத்தில் உருவாகி உள்ள நான்காவது படம் இது. இந்த படத்தை டான் பிக்சர்ஸ் உடன் இணைந்து தனுஷின் வொண்டர்பார் நிறுவனமும் தயாரித்துள்ளது. படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அருண் விஜய், நித்யா மேனன், சத்யராஜ், ஷாலினி பாண்டே என பலரும் நடித்துள்ளார்கள். படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெற்ற நிலையில், இன்று அதாவது செப்டம்பர் 20ஆம் தேதி படத்தின் டிரைலர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசியது பலரது கவனத்தை ஈர்த்தது. அதேபோல் தனுஷின் மேனேஜரான ரியாஸ் பேசியது ரசிகர்கள் மத்தியில் டிரெண்டிங் கண்டெண்ட்டாக மாறியது. அதாவது அவர் பேசும்போது, தனுஷால் முன்னேறியவர்கள், வளர்ந்தவர்கள் எல்லாம் அவரது முதுகில் குத்திவிட்டுச் சென்றுவிட்டார்கள். நல்லவனாக இருங்கள், ரொம்ப நல்லவனாக இருக்காதீர்கள் என்று பேசினார். அதேபோல் தனுஷ் பேசும்போது, ” இங்கு ஹேட்டர்ஸ் என்று ஒரு கான்செப்ட்டே இல்லை. எல்லார் படங்களையும் எல்லாரும் பார்ப்பார்கள்.
ஹேட்டர்ஸ்: யாரோ ஒரு முப்பது பேர், முன்னூறு ஐ.டி வெச்சுக்கிட்டு வெறுப்பை பரப்பிக்கிட்டு இருக்காங்க. அவங்களும் என்னோட படத்தைப் பார்ப்பார்கள்” என்று பேசினார். மேலும் இசை வெளியீட்டு விழா முடிந்த பின்னர், இசை வெளியீட்டு விழாவுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்தும் வந்திருந்த ரசிகர்களுக்கு நன்றி என்றும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
டிரைலர்: இந்நிலையில் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இது மட்டும் இல்லாமல், டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சியை கோவையில் பிரமாண்டமாக படக்குழு நடத்தியுள்ளது. டிரைலரைப் பார்க்கும்போது, இட்லி கடை வியாபாரம் செய்யும் ராஜ் கிரனின் மகனாக தனுஷ், சமையல் கலையில் நிபுணத்துவம் பெற்று, உலக அளவில் பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து, அங்கு சந்திக்கும் பிரச்னைகளால் மீண்டும் தனது அப்பாவின் இட்லி கடையை நடத்த வருகிறார் என்பது போலத் தோன்றுகிறது. மொத்தத்தில் இட்லி கடை டிரைலர் சொன்னதை விட காலதாமதமாக ரிலீஸ் செய்யப்பட்டாலும் கமகமனுதான் பரிமாரியுள்ளார் தனுஷ்.
இந்த டிரெய்லர் தற்போது ஒரு கோடியே முப்பது லட்சம் வியூவர்ஸ்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.

