பிளாக் மெயில்: திரை விமர்சனம்
ஜி.வி. பிரகாஷ் – மு.மாறன் கூட்டணியில் பரபரப்பான க்ரைம் த்ரில்லர், பிளாக் மெயில்.
கோவையில், மருந்து சப்ளை செய்யும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறான் இளைஞன் மணி. ஒரு முறை, குறிப்பிட்ட (மருந்து) பார்சலை தவறவிட்டு விடுகிறான். அவன் காதலியை கடத்தி வைத்துக்கொண்டு, “அந்த பார்சல் வேண்டும்.. இல்லாவிட்டால் ஐம்பது லட்சம் பணம் வேண்டும்” என மிரட்டுகிறார்.
இன்னொரு பக்கம், பெண்களைக் காதலித்து கழற்றி விட்டு அவர்களுக்கு திருமணமானவுடன் அவர்களின் நெருக்கமான படங்களை வைத்து பிளாக்மெயில் செய்வதையே பழக்கமாக வைத்திருக்கிறான ஒருவன். அப்படி ஒரு பெண்ணை டார்ச்சர் செய்கிறான்.
இதற்கிடையேதான குழந்தை கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகிறது..
அந்த பார்சலில் இருந்தது என்ன.. குழந்தை கடத்தப்பட்டதா… முன்னாள் காதலனிடம் சிக்கிய பெண்ணுக்கு விடுதலை கிடைத்ததா.. எல்லாவற்றையும் ஒரு முடிச்சில் கொண்டு வந்திருக்கிறது இந்த சஸ்பன்ஸ் த்ரில்லர் கதை.
குடும்பம் இல்லாத இளைஞனாக, அப்பாவித் தோற்றத்தில் மனதில் பதிகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். காதிலியிடம் வெளிப்படுத்தும் நேசம், கர்ப்பமான காதலியிடம், “நமக்குக்குன்னு யாருமில்ல.. ஒரு உறவு வரட்டும்” என வெளிப்படுத்தும் உணர்வு, மிரட்டும் முதலாளியிடம் கெஞ்சும் விதம் என நடிப்பில் மிளிர்கிறார்.
அதே போல சண்டைக் காட்சிகளிலும் தூள் பறத்துகிறார்.
அவரது காதலி ரேகாவாக வரும் தேஜு அஸ்வினி, தன் பாத்திரத்துக்குத் தேவையான அளவு நடிப்பைக் கொடுத்து இருக்கிறார்.
தொழிலதிபராக ஸ்ரீகாந்த், அவரது மனைவியாக பிந்து மாதவி, போதை மருந்து கடத்தும் வேட்டை முத்துக்குமார், காதலித்து ஏமாற்றும் லிங்கா, ஷாஜி, ஹரி பிரியா என அனைவருமே சிறப்பாக நடித்து உள்ளனர். அதுவும் பிந்து மாதவி அற்புதமாக நடித்து இருக்கிறார். தனது முன்னாள் காதலினின் மிரட்டலுக்கு பயந்து நடுங்குவது, கணவனுக்கு துரோகம் செய்கிறோமே என்று குமைவது, குழந்தை காணாமல் தவிப்பது என சிறப்பான நடிப்பை அளித்து இருக்கிறார்.
ரெடின் கிங்ஸ்லி சிரிக்கவைக்கிறார். ரமேஷ் திலக் வழக்கம்போல, நல்ல துணை கதாபாத்திரத்தில் வருகிறார்.
டி.இமான் ஒரு பாடலுக்கு இசைமைத்து உள்ளார். சாம் சி.எஸ். மூன்று பாடல்களுக்கு இசையமைத்து, பின்னணி இசை அமைத்து உள்ளார். த்ரில்லர் படத்துக்கு பலம் சேர்க்கும் அதிரடி பின்னணி இசை.
கோகுல் பெனாயின் ஒளிப்பதிவு, கூடுதல் த்ரில்லை ஏற்படுத்துகிறது.
பெண்ணை மிரட்டுவது, குழந்தை கடத்தல் என இரு விசயங்களை வைத்து ஏகப்பட்ட முடிச்சுக்கள் போட்டிருக்கிறார் இயக்குநர் மு.மாறன். ஆச்சரியம் என்னவென்றால், அத்தனையும் சுவாரஸ்ய முடிச்சுகள்.
“ஓ.. இப்படித்தான் படம் போகுதோ” என நினைக்கும் முன்பே, அதிரடியாக ஒரு திருப்பம். படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் இருந்தே, கிளைமாக்ஸ்(கள்)தான்.
அதே நேரம், ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்..’, ‘கண்ணை நம்பாதே’ என அழகு தமிழில் க்ரைம் த்ரில்லர்களை அளித்த, தூய தமிழ்ப்பயெர்.. முன்னெழுத்தும் தமிழில் என தமிழ்ப் பற்றுகொண்ட மு.மாறன், எதற்காக “பிளாக்மெயில்” என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்தார் என தெரியவில்லை.
தவிர திருமணத்துக்கு முந்தைய உறவு.. முன்னாள் காதலன் மிரட்டல் என்பது படத்தின் முக்கிய புள்ளியாக வருகிறது. “பொதுவாக பெண்களின் மனநிலை – பலவீனம்” என்று கடந்து போக முடியவில்லை. இந்த நவீன காலத்திலாவது, “ஆமாம்…. திருமணத்துக்கு முன் காதல் இருந்தது.. அவன் சரியில்லை.. பிரிந்துவிட்டேன்”என்று சொல்லி, புதிய உறவில் பெண்கள் நுழையலாமே! அதுபோன்ற பெண்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். இதைத் தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.
ஆனாலும், அந்தப் பெண்ணின் கணவன் இந்த விசயத்தை கையாளும் விதம், கைதட்ட வைக்கிறது.
மற்றபடி ரசிக்க, மிரள – க்ரைம் த்ரில்லர் ப்ரியர்களுக்கு அருமையான திரைப்படம் பிளாக் மெயில்.
ரேட்டிங்: 3.6/5

