ஒரே தொகுதியில் 1,00,250 போலி வாக்குகள்! ராகுல் காந்தி ஆதாரம்!
டில்லி: கர்நாடகாவின் மகாதேவபுரா சட்டமன்ற தொகுதியில்,பல்வேறு விதங்களில் 1,00,250 போலிவாக்குகள் சேர்க்கப்பட்டதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பகிரங்கமாக – ஆதாரத்துடன் – குற்றம் சாட்டி இருக்கிறார்.
டில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, ” பொதுவாக ஜனநாயக நாட்டில் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை தோன்றுவது வழக்கம். ஆனால், விதிவிலக்காக பாஜக மட்டும் இதில் பாதிக்கப்படாத கட்சியாக உள்ளது. ஒவ்வொரு முறையும் தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்து கணிப்புகளின் முடிவுகள் வாக்கு எண்ணிக்கையின்போது அப்படியே மாறிவிடுகின்றன.
ஹரியானா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் நடந்த தேர்தல் முடிவுகளும் அப்படிதான் இருந்தன. கர்நாடகாவின் மகாதேவபுரா சட்டமன்ற தொகுதியில் மட்டும் 1,00,250 வாக்குகளில் மோசடி நடைபெற்றுள்ளன” என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, ” உதாரணமாக, குர்கிராத் சிங் டாங் என்ற பெயரில் ஒரு போலி வாக்காளர் உள்ளார். அவரது தொகுதியில் உள்ள நான்கு வெவ்வேறு வாக்குச்சாவடிகளிலும் அவரது பெயர் உள்ளது. ஒரே பெயர், ஒரே முகவரி ஆனால், வெவ்வேறு வாக்குச் சாவடிகளில் இடம்பெற்றுள்ளார் என்பதை நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடித்துள்ளோம். இந்த வகை வாக்காளர்கள் 11,965 பேர் உள்ளனர். இதேபோல ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஆயிரக்கணக்கான போலி வாக்காளர்கள் உள்ளனர். ஐந்து வகைகளில் இதுபோல வாக்கு மோசடிகள் நடக்கின்றன.
இதையும் படிங்க: விவசாயிகளின் நலனுக்கே முன்னுரிமை… அதற்காக எந்த விலையும் கொடுக்க தயார்! டிரம்ப்பின் வரி விதிப்புக்கு மோடி பதிலடி!
கர்நாடகாவில் நாங்கள் ஆட்சி அமைத்தோம். ஆனால், நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்தோம். எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. மத்திய பெங்களூரு தொகுதியில் காங்கிரசுக்கு 6.26 லட்சம் வாக்குகள் கிடைத்தன. பாஜக பெற்ற வாக்குகள் 6,58,915. வெறும் 32,707 வாக்குகள் தான் வித்தியாசம்.
சட்டமன்ற தேர்தலில் மத்திய பெங்களூருவில் அனைத்து தொகுதிகளிலும் வென்ற நாங்கள் மகாதேவபுரா தொகுதியில் மட்டும் தோல்வி அடைந்தோம். அங்கு காங்கிரஸ் 1,15,586 வாக்குகளும், பாஜக 2,29,632 வாக்குகளும் பெற்றன. 114,046 வாக்குகள் வித்தியாசம் உள்ளது. இங்கு 1,00,250 வாக்குகள் திருடப்பட்டிருப்பதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்.
குறிப்பாக, மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கு 5 மாதங்களுக்கு முன்பு சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் சேர்க்கப்பட்டவர்களை விட அதிகம் எனவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

