அக்யூஸ்டு: திரைப்பட விமர்சனம்
நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த, குற்றவாளி உதயாவை சிறைச்சாலையில் இருந்து கொண்டு செல்கிறது காவல்துறை. உதயாவை கொல்வதற்குத் துரத்துகிறது ஒரு கும்பல்.. அதே நேரம் போலீஸும் போட்டுத்தள்ள திட்டமிடுகிறது.
ஆனால், போலீஸ் குழுவில் இருக்கும் அஜ்மல் மட்டும், உதயாவை காப்பாற்றி நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நினைக்கிறார்.
ஆனால் போலீஸ் மற்றும் துரத்தும் கும்பல் இருவரையும் கொல்ல முயல்கிறது.
இந்த ரணகளத்தில் உதயாவும் அஜ்மலும் கோர்ட்டுக்கு போனார்களா.. அதன் பிறகு என்ன நடந்தது என்பதை பரபரப்பாக – சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார்கள்.
ஆரம்ப காட்சிகளில் காமெடியாக பேசிச் சிரிக்கும் உதயா, போகப்போக சீரியஸ் காட்சிகளில் அசத்துகிறார். அதுவும் அவர் தன் பிளாஷ்பேக் சொல்லும்போதும், இறுதிக் காட்சிகளின் போதும் நெகிழ வைத்து விடுகிறார். அதோடு, சண்டைக் காட்சிகளிலும் தூள் பறத்துகிறார். மொத்தத்தில் காமெடி, காதல், மோதல், பாசம், சோகம் என பலவித உணர்ச்சிகளை சிறப்பாக வெளிப்படுத்தி ஈர்க்கிறார்.
அவரது காதலியாக வரும் ஜான்விகா கலக்கேரி, அழகாக இருக்கிறார். அழகாக நடிக்கவும் செய்கிறார். ஒரு கட்டத்தில் நாயகனிடம் “கண்ணிலேயே படாதே” என சொல்லும் காட்சியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
எஸ்கார்டு காவலராக வரும் அஜ்மல் வழக்கம் போல சிறப்பான நடிப்பை அளித்து இருக்கிறார். கைதிக்கு பிரச்சினை என்றவுடன் பதறுவது, கைதியை காப்பாற்றி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவது என ஒரு காவலரை கண் முன் நிறுத்துகிறார்.
சில காட்சிகளே வந்தாலும் ரசிக்கவைக்கிறார் யோகிபாபு. மற்ற திரைப்படங்கள் போல இல்லாமல், கதையுடனே பயணிக்கும் கதாபாத்திரம் என்பதால் துருத்தல் இன்றி ரசிக்க வைக்கிறது அவரது நடிப்பு.
இதர வேடங்களில் நடித்திருக்கும் பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்டோர் பாத்திரம் அறிந்து நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.
மருதநாயகம். ஐ. சிறப்பாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். அதிலும் பேருந்தில் நடக்கும் சண்டை, பிரம்மாண்டமான குப்பை மேட்டில் நடக்கும் சண்டை ஆகியவற்றில் அவரது கேமரா விளையாண்டு இருக்கிறது.
நேரேன் பாலகுமாரின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. அதே போல பின்னணி இசையும் சிறப்பாக உள்ளது.
கே.எல்.ப்ரவீனின் எடிட்டிங் கச்சிதம்.
கலை இயக்குநர் ஆனந்தமணி கவனத்தை ஈர்க்கிறார்… குறிப்பாக பேருந்து காட்சியில்.
ஸ்டண்ட் சில்வாவின் சண்டைக் காட்சிகள் தூள் பறக்கின்றன.
நகைச்சுவையாக துவங்கி, த்ரில்லர் பாணியில் சென்று, காதல் எபிசோட் வந்து, நெகிழ்ச்சியாக முடித்திருக்கிறார் இயக்குநர் பிரபு சீனிவாஸ்.
அனைவரும் பார்த்து ரசிக்கலாம்.
ரேட்டிங்: 3.1/5
