கொஞ்சம் ‘தள்ளி’ப்போகும் நிவர் புயல்!
தமிழகத்தை மிரட்டி வரும் நிவர் புயல், எதிர்பார்த்தற்கு மாறாக சிறிது நேரம் கடந்து இன்று இரவு முதல் நாளை அதிகாலைக்குள் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் இன்று மதியம், காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என முன்பு அறிவிக்கப்பட்டது. அப்போது, செங்கல்பட்டு, நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மணிக்கு 145 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழகம் 5 ஆண்டுகளில் வர்தா, கஜா என ஏற்கெனவே 2 புயல்களை சந்தித்துள்ள நிலையில் 3வதாக நிவர் புயலை எதிர்கொள்ளவேண்டி இருக்கிறது.
இந்நிலையில் தமிழக அரசும் புதுச்சேரி அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், சென்னை தென்மண்டல வானிலை ஆய்வு மையம், தமிழக பகுதியில் இருந்து 200 கிமீ தூரத்தில் மையம் கொண்டிருப்பதாக அறிவித்துள்ளனர்.
மேலும், “இது வடமேற்கு திசையில் நகர்ந்து, ஏற்கெனவே கணித்தது போல காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் இன்று மதியம் கரையை கடக்கும் என முன்பு இருந்த நிலையில் இன்று இரவு முதல் அதிகாலை இடையே கரையை கடக்கும்” என்று தெரிவித்தார்.

