சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி இன்று திறப்பு!
தென் மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக உருவெடுத்திருக்கிறது. இந்தப் புயலுக்கு நிவர் என பெயரிடப்பட்டிருக்கிறது. நிவர் என்றால், வருமுன் காப்பது என அர்த்தம். இந்தப் புயல் காரைக்காலுக்கும் தமிழகத்தின் மாமல்லபுரத்திற்கும் இடையே இன்று இரவு கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 67 மில்லியன் கனஅடி நீ்ர் அதிகரித்துள்ளது.
குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் அளவு அதிகரிப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. காரணம், 2015ல் இந்த ஏரி திறக்கப்பட்டதால்தான் சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று மதியம் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் அசோகன் தெரிவித்துள்ளதாவது:
“செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 3,645 மில்லியன் கனஅடி. ஏரியின் நீர்மட்டம் 24 அடி. கனமழை காரணமாக ஏரி நிரம்பி வருவதால், இன்று பகல் 12 மணி விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட உள்ளது.
ஆனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை. ஏற்கெனவே நீர்வழிப் பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. தவிர, இந்த நீர் வழிகளில் விநாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் செல்லலாம். ஆகவே மக்கள் வீணாக பதட்டப்பட வேண்டாம்!” என தெரிவித்துள்ளார்.

