யாதும் அறியான்: திரைப்பட விமர்சனம்
காடு.. காட்டுக்குள்ளே வீடு.. வீட்டுக்குள்ளே நான்கு பேர்.. என வழக்கமான த்ரில்லர் படம்தான். ஆனால் சொன்ன விதத்தில் கவனிக்க வைத்து இருக்கிறார்கள்.
அறிமுக நாயகன் தினேஷ் அவரது காதலி பிரானா, நண்பர் ஆனந்த் பாண்டி, அவரது காதலி ஷியாமல் ஆகியோர் மலைக்காட்டில் தனியாக இருக்கும் பங்களாவுக்கு ஜாலி டூர் செல்கிறார்கள். இரவில் நாயகியை மெல்ல சீண்ட ஆரம்பிக்கிறார் நாயகன். ஆரம்பத்தில் ஒப்புக்கொள்ளாத நாயகி, பிறகு உடன்பட.. திளைக்கிறார்கள்.
அதன் பிறகு நடக்கும் அதிரடி சம்பவங்கள்தான் கதை.
ஆரம்ப காட்சிகளில் நாயகன் தினேஷின் நடிப்பு மனதில் ஒட்டவில்லை. போகப்போக ஓரளவு மனதில் பதிகிறார். குறிப்பாக, நாயகியை கொலை(?) செய்துவிட்டோமே என்று அதிர்ச்சியில் அவர் தவிப்பது சிறப்பு. அதே போல அடுத்தடுத்து அவரது செயல்கள் அதிரவைக்கின்றன. முதல் படம் என்கிற வகையில் ஓகேதான்.
அவரது இளமையான – அப்பாவியான முகமும், மெலிதான குரலும் காதல் திரைப்படங்களுக்கு சரியான நாயகன் என தோன்றுகிறது. அந்தக்கால மோகன் போல 2கே கிட்ஸ்களுக்கான காதல் நாயகனாக வலம் வரலாம்.
நாயகி பிரானா இயல்பாக நடித்து இருக்கிறார். காதலன் மீது கொண்ட நேசம், அவன் தன்னை வேறு நோக்கத்தில் அணுகும்போது வெளிப்படுத்தும் ஆவேசம் என சிறப்பான நடிப்பை அளித்து இருக்கிறார்.
நாயகனின் நண்பராக வரும் ஆனந்த் பாண்டி, அவர் காதலியாக வரும் ஷியாமல், விடுதி காவலாளியாக வரும் அப்பு்ககுட்டி, மனநல நிபுணராக வரும் தம்பி ராமையா உள்ளிட்ட அனைவருமே பாத்திரத்துக்குத் தேவையான அளவு நடிப்பை அளித்து இருக்கின்றனர்.
மலையின் இயற்கைக் காட்சிகளை கண் முன் நிறுத்துகிறது எல்.டி.யின் கேமரா. ஒரு த்ரில்லர் படத்துக்குத் தேவையான அதிரடி இசையை வழங்கி இருக்கிறார் தர்மபிரகாஷ்.
காதல் கதையாக ஆரம்பித்து, த்ரில்லருக்கு மாறி, டைம் டிராவல் போல முடிகிறது கதை. பாராட்டுகள்.
அதே நேரம், ஆனால், இடைவேளைக்குபிறகு சில காட்சிகள் மறுபடி மறுபடி வருவதைத் தவிர்த்து இருக்கலாம், அதே போல் அதீத ரத்தக் காட்சிகளையும் தவிர்த்து இருக்கலாம்.
மற்றபடி த்ரில்லர் பட விரும்பிகள் ரசித்துப் பார்க்கலாம்.
