3 BHK: திரை விமர்சனம்
சொந்த வீடு என்கிற கனவோடு ஓடும் ஒரு நடுத்தர குடும்பம், தனது இலக்கை அடைந்ததா என்பதைச் சொல்கிறது 3 BHK.
மனைவி, பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மகன், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகள் என நடுத்தர குடும்பத்தின் தலைவர் வாசுதேவன்.
வாடகை வீட்டில் வசித்து பலவித தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள். சொந்த வீடு கனவாகிறது.
மனைவி சாந்தி முறுக்கு சுட்டு கணவனுக்கு உதவுகிறார். வாழ்க்கையில் தான் நினைத்தது எதுவுமே நடக்காத நிலையில் துயரத்தில் ஓடிக்கொண்டு இருக்கிறார் மகன் பிரபு. ண்ணனை பெரிய பள்ளி, கல்லூரியில் படிக்க வைப்பதற்காக அரசு பள்ளியில் படிக்கிறார் தங்கை ஆர்த்தி.
சொந்த வீடு வாங்க பணம் சேமிக்கிறது குடும்பம். அது நிறைவேறியதா என்பதே கதை.
நெருக்கடியான பொருளாதார சூழ்நிலையில், குடும்பத்தை நடத்தும் தலைவனாக சரத்குமார். எப்போதுமே சிறப்பாக நடிப்பவர்தான். இதில் கூடுதல் சிறப்பாக நடித்துவிட்டார். கண்களின் சோகம், மிக மெதுவாக பேசுவது என செயற்கையாக இருக்கிறது.
அவரது மனைவியாக நடித்திருக்கும் தேவயானி வழக்கம்போல் சிறப்பான நடிப்பை அளித்து இருக்கிறார். கணவனின் பாரத்தைத் தாங்கும் மனைவியாக, பிள்ளைகள் மீது அளவற்ற பாசத்தைக் கொட்டும் தாயாக அற்புதமாக நடித்து இருக்கிறார்.
மகனாக வரும் சித்தார்த், அரம்ப காட்சிகளில் பள்ளி மாணவனாக வருவதைத்தான் தாங்க முடியவில்லை. நல்லவேளை கிடுகிடுவென வளர்ந்து கல்லூரி, வேலை என போய்விடுகறார்.
அவரது தங்கையாக நடிக்கும் மீதா ரகுநாத் சிறப்பாக நடித்து உள்ளார். குடும்பத்தின் நிலை அறிந்து நடந்துகொள்ளும் பெரிய மனது.. அதே நேரம் அண்ணனுடன் ஜாலியாக கேலி கிண்டல், திருமண வாழ்வு தரும் அதிர்ச்சி… என எல்லா காட்சிகளிலுமே சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்.
அம்ரித் ராம்நாத்தின் பின்னணி இசை படத்துக்கு பலம். தினேஷ் கிருஷ்ணன் மற்றும் ஜித்தின் ஸ்டானிஸ்லாஸின் ஒளிப்பதிவு சிறப்பு.
நடுத்தர குடும்பத்தினரின் சொந்த வீட்டுக் கனவை அதற்கான அவர்களின் ஓட்டத்தை சிறப்பாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் ஸ்ரீகணேஷ்.
