‘சாருகேசி’யை படமாக்கச் சொன்னது ரஜினியா, கமலா?
ஒய்.ஜி.மகேந்திரன் நடிக்க, மகேந்திரன் இயக்கத்தில், வெங்கட் எழுதிய ‘சாருகேசி’ நாடகம், கடந்த 2021ம் ஆண்டு சென்னையில் அரங்கேற்றப்பட்டது. இந்நாடகம், ஒய்.ஜி.மகேந்திரனின், 60ம் ஆண்டு மற்றும் சுப்புனியின், 50ம் ஆண்டு நாடக பயணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இசை வித்வான் சாருகேசியாக, பிறருக்கு உதவும் குணம் கொண்டவராக ஒய்.ஜி.மகேந்திரன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். உடல்நிலை பாதித்து, தன்னை மறந்தவராக நடித்த போது, மறைந்த நடிகர் சிவாஜியை பார்த்த திருப்தியை ரசிகர்கள் பெற்றதாக தெரிவித்தனர்.
ராஜேஷ் வைத்யாவின் இசையும், அவ்வபோது அரங்கேறிய அனல் பறக்கும் அரசியல் விமர்சனங்களும், ரசிகர்களை ஈர்த்தது.
இந்த நாடகத்தை நேரில் பார்த்து நடிகர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்தார். அப்போது அவர், “இந்த நாடகத்தை திரைப்படமாக ஆக்க வேண்டும்” என தெரிவித்ததாக ஒய்.ஜி. மகேந்திரன் தெரிவித்து இருந்தார்.
அதே போல நடிகர் ரஜினிகாந்தும், இந்நாடகத்தைப் பார்த்து பாராட்டினார். நாடகக் குழுவினரை தனது வீட்டுக்கு அழைத்து விருந்து அளித்தார்.
இந்நிலையில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் சாருகேசி திரைப்படமாக உருவாகிறது.
இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சுரேஷ் கிருஷ்ணா பேசுகையில், “‘சாருகேசி’ ஒரு மியூசிகல் பெயர். இங்கே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நன்றி சொல்லிக்கிறேன். அவருக்கு நன்றி சொல்றதுக்கு ஒரு காரணமும் இருக்கு.
இந்தப் படத்தின் கதையை முதல்ல நாடக வடிவத்துல பார்த்து, அவர்தான் அந்தக் கதையைப் படமாகப் பண்ணச் சொன்னார்.
ரஜினி சார் அப்படிச் சொன்னது எனக்குத் தெரியாது. ஆனா, நான் அந்த நாடகத்தைப் பார்த்துட்டு, ‘இது சினிமாவுக்கு அற்புதமான கதையாச்சே’ன்னு சொன்னேன். ஒய்.ஜி. மகேந்திரன் சார் உடனடியாக ஒரு தயாரிப்பாளரை அறிமுகப்படுத்தி, ‘நீங்க டைரக்ட் பண்ணுங்க சார். நான் நடிக்கிறேன்’னு சொன்னார்” என்று பேசினார்.
ஏற்கெனவே, இந்த நாடகத்தை திரைப்படமாக உருவாக்க வேண்டும் என கமல் கூறியதாக ஒய்.ஜி. மகேந்திரன் தெரிவித்து இருந்தார். தற்போது, அந்த கருத்தைத் தெரிவித்தவர் ரஜினி என சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்து உள்ளார்.
ஆக, இருவரும் அப்படி கூறினார்களா என்ற சுவாரஸ்யமான கேள்வி எழுந்துள்ளது.

