குபேரா: திரை விமர்சனம்: மிரட்டல்!

குபேரா: திரை விமர்சனம்: மிரட்டல்!

ஒரு பக்கம் கோடி கோடியாகப் புரளும் பணம், இன்னொரு பக்கம் ஒரு வேளை சோற்றுக்கே அல்லாடும் மனிதர்கள்… நாட்டின் இந்த நிலையை சரியான அளவில் மசாலா கலந்து சுவாரஸ்யமாக அளித்திருக்கிறார்கள்.

மத்திய அரசின் எரிவாயு திட்ட ஒப்பந்தத்தை பெறுவதற்காக ரூ.1 லட்சம் கோடியை, அரசியல் தலைவர்களுக்கு லஞ்சமாக கொடுக்க திட்டமிடுகிறார் தொழில் அதிபர் ஜிம் சர்ப். இந்த சட்டவிரோத காரியத்தை செய்ய சிறையில் இருக்கும் முன்னாள் சிபிஐ அதிகாரியான நாகார்ஜுனாவின் உதவியை நாடுகிறார்.

இந்த சட்டவிரோத பரிவர்த்தனைக்காக கல்வி அறிவு இல்லாத தனுஷ் உள்ளிட்ட 4 அப்பாவி பிச்சைக்காரர்களை நாகார்ஜுனா தேர்வு செய்கிறார். அவர்கள் பெயரில் தொழில் நிறுவனங்களை தொடங்கப்படுகிறது. கருப்பு பணம் வெள்ளையாக மாற்றப்படுகிறது. அந்த நான்கு பேர் மீதும் தலா பத்தாயிரம் கோடி முதலீடு செய்யப்படுகிறது. அவரவர் பணப்பறிமாற்றம் நடந்த பிறகு அந்தந்த பிச்சைக்காரர் கொல்லப்படுகிறார்.

இறுதியாக தனுசை கொலை செய்வதற்காக அழைத்துச் செல்கிறார்கள்… அவரோ, தப்பித்து விடுகிறார்.

தவிர, எதிர்பாராத விதமாக பண பரிவர்த்தனையும் தடைபடுகிறது.

தனுஷ் உயிரோடு கிடைத்தால்தான் பணப்பரிவர்த்தனை முழுமை அடையும் என்பதால் அவரைத் தேடி நாகார்ஜுனா தலைமையில் குழுக்கள் அலைகின்றன.

இதற்கிடையில் ரயில் நிலையத்தில் காதலனால் ஏமாற்றப்பட்டு அழுது கொண்டிருக்கும் ராஷ்மிகாவை, தனுஷ் சந்திக்கிறார். அதன் பிறகு தனுசுடன் சேர்ந்து அலைய வேண்டிய கட்டாயம் ராஸ்மிகாவுக்கு ஏற்படுகிறது.  இவர்களையும் தேடி அலையும் கொலைக் கும்பல் என்ன செய்தது என்பதுதான மீதிக்கதை.

முதல் பாராட்டு தனுசுக்குத்தான்.

வேறு எந்த ஹீரோவாவது இப்படி அழுக்கு உடை, பரட்டை தலை, ஒரு கை விளங்காத நிலை.. பிச்சைக்காரன் கதாபாத்திரத்துக்கு ஒப்புக்கொள்வார்களா என்பது சந்தேகமே.

அதோடு, ஒரு ரூபாய் பணத்துக்காக “அம்மா.. தாயே” என கையேந்தும் பிச்சைக்காரராகவே வாழ்ந்து இருக்கிறார் தனுஸ். பல ஆயிரம் கோடி ரூபாய் தன் பெயரில் இருந்தும் அது குறித்து அறியாமல் அவர் அலைவது.. முகத்தில் தெரியும் அப்பாவித்தனம்… ஒரு கட்டத்தில் உண்மை தெரிந்து சீறுவது.. சிறப்பான நடிப்பு.
பிரியாணியில் கை வைக்கும் நேரம் வில்லன்கள் வந்துவிட, ஆற்றில் குதிக்க முற்படும் தனுஸ்.. சட்டென்று ஒருவாய் பிரியாணியை உள்ளே போட்டுக்கொண்டு குதிக்கும் காட்சி ஒரு உதாரணம்.

ராஷ்மிகாவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்க்கிறார். ரயில் நிலையத்தில் கண்ணீரும் கம்பலையுமாக அமர்ந்திருக்கும் முதல் காட்சியிலேயே மனதில் வந்து அமர்ந்துவிடுகிறார். பிறகு சம்பந்தமே இல்லாமல் தனுசால் பிரச்சினைகள் ஏற்பட அவர் ஆத்திரப்படுவதும், பிறகு தனுஸ் மனதை அறிந்து நெகிழ்வதும் சிறப்பான நடிப்பு.நேர்மையான சிபிஐ அதிகாரியாக இருந்தும், சூழ்ச்சியால் சிறைப்பட்டு… அதன் பிறகு வேற வழியின்றி கார்ப்பரேட் கொள்ளையனுடன் கைகோர்க்கும் பாத்திரம் நாகார்ஜூனாவுக்கு. இயல்பான, அற்புதமான நடிப்பு.

ஜிம் சர்ப்பின், கொடூர பெரு முதலாளியாக மிரட்டி இருக்கிறார். அட பாக்யராஜா இது.. அடையாளமே தெரியவில்லை. தவிர சுனைனா, நாசர், தலிப்தஹில் என அனைவருமே தங்கள் கதாபாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.

நிகேத் பொம்மிரெட்டியின் ஒளிப்பதிவு படத்துக்குப் பெரிய பலம். குறிப்பாக இரவு நேர நகரக் காட்சி அசத்தல். அதே போல சண்டைக் காட்சியிலும் தூள் பறத்தி இருக்கிறது கேமரா.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை படத்தில் ஒரு கதாபாத்திரமாகவே வந்து கவர்கிறது. பின்னணி இசையும் படத்துக்கு பலம்.

வழக்கமான நாயகன் நாயகி, மசாலா என்று இல்லாமல் வித்தியமாசமான படத்தை அளித்து இருக்கிறார் இயக்குநர் சேகர் கம்முலா. நாட்டில் நிலவும் ஏற்றத்தாழ்வை மிக அழகான கதை மூலம் ரசிக்கும்படி சொல்லி இருக்கிறார்.

அனைவரும் ரசித்துப் பார்க்கலாம்.

ரேட்டிங்: 3.8/5

Related Posts