பெங்களூரு பலிகள்.. காரணம் யார்? : டி.வி.சோமு
கடந்த மூன்றாம் தேதி அகமதாபாத்தில் ஐ.பி.எல். இறுதிப்போட்டி நடந்தது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியைத் தோற்கடித்து ராயல் சேஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணி வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.
பெங்களூரு அணி ஆதரவாளர்களுக்கு தாங்க முடியாத மகிழ்ச்சி. அணி தலைவர் வீராட் கோலி வேறு, “நாங்கள் பெங்களூரு வரும்போது கொண்டாட்டத்தின் உச்சியில் இருக்க வேண்டும்” என்று ட்விட் வெளியிட்டார்.
தவிர, கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா, “இந்த வெற்றியை அரசு விழாவாகக் கொண்டாடுவோம்” என்றார்.
எங்கும் உற்சாக வெள்ளம் கரை புரண்டது.
மறு நாள் நான்காம் தேதி… பெங்களூரு விதானசவுதாவில் விராட் கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் பாராட்டு விழா நடந்தது. முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தவிர சின்னசாமி ஸ்டேடியத்தில் வெற்றிக் கொண்டாட்டம் நடந்தது. லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்த நெரிசலில்தான், 56 பேருக்கு படுகாயம் ஏற்பட.. 11 பேர் உயிரே போய்விட்டது.
நாடு முழுதும்.. ஏன், உலகம் முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த துர்ச்சம்பவம்.
சின்னசாமி ஸ்டேடியம் இருக்கும் பகுதியின் காவல் அதிகாரி, “ரசிகர்கள் அதீத உற்சாகத்தில் இருப்பார்கள்.. விழாவை தள்ளிப்போடுவதே நல்லது… இல்லாவிட்டால் அசம்பாவிதம் நடக்கலாம்” என்று நிர்வாக துறை செயலருக்கு எழுதிய கடிதம் வெளியானது.
உயர் அதிகாரிகள் இடமாற்றம், இடை நீக்கம் செய்யப்பட்டனர். பலியோனோர் குடும்பத்துக்கு தலா பத்து லட்ச ரூபாய் “நிவாரணம்” அறிவித்த கர்நாடக மாநில அரது பிறகு இதை 25 லட்ச ரூபாயாக உயர்த்தியது.
ஆனால், நெரிசல் பலிகளுக்கு இதுதான் தீர்வா?
அதற்கு முன் கிரிக்கெட் குறித்து பார்த்துவிடுவோம்.
விளையாட்டு ஆய்வாளர்கள் பலர், கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாகவே கருதுவது இல்லை.
உலகில் 195 நாடுகள் உள்ளன. இவற்றில் 92 நாடுகள் மட்டுமே உலக கிரிக்கெட் வாரியத்தில் (ஐ.சி.சி.யில்) இணை உறுப்பினராக உள்ளன. அதாவது ஏதோ கிரிக்கெட் என்று அந்த நாட்டில் இருக்கும். அவ்வளவுதான்.
உலக அளவில் இந்தியா உட்பட 12 நாடுகள் மட்டுமே, முழு உறுப்பினர் நாடுகள். இவற்றில்தான் கிரிக்கெட் ஜீவிக்கிறது.
ஏன் கிரிக்கெட்டை விளையாட்டு ஆர்வலர்கள் பலரும், பல நாடுகளும்் விளையாட்டாக ஏற்கவில்லை…
குளிர்காலம் அதிகமாக உள்ள பிரிட்டன் நாட்டில், சூரியன் மெல்ல தலைகாட்டும் நேரத்தில், “வார்ம் அப்” செய்வதற்காக பந்தினை உருட்டி, அடித்து பொழுதுபோக்க உருவானதே கிரிக்கெட்.
இதை விளையாட்டாக்கி, இந்தியா என்கிற நாட்டை உருவாக்கிய போது இங்கும் கொண்டுவந்தனர் வெள்ளையர்கள்.
அவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள சிற்றரசர்கள், ஜமீன்தாரர்கள், அதிகாரத்தில் இருந்த பார்ப்பனர்கள் கிரிக்கெட்டை கற்றுக்கொண்டனர்.
சுதந்திரத்துக்குப் பிறகு, நாட்டின் மிகப் பெரிய ஊடகமாக இருந்த வானொலியில் அதிகம் பேர் பார்ப்பனர்கள். அவர்கள் இந்த கிரிக்கெட் விளையாட்டை நேரடி வர்ணனை செய்து பிரபலமாக்கினர்.
நாடெங்கும் பரவியது கிரிக்கெட். ஆனாலும், பதினோரு பேர் கொண்ட தேசிய அணியில் ஆகப்பெரும்பாலும் பார்ப்பனர்களும், ஜமீன் வசம்சத்தினருமே இருந்தனர்.
தவிர, பிற விளையாட்டுகள் அனைத்தும் இந்திய அரசின் – மக்களின் விளையாட்டு. ஆனால் கிரிக்கெட் அப்படி அல்ல.
இதை அவர்களே சொல்லி இருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் டெஸ்ட் போட்டிகள் தூர்தர்சன் எனப்படும் அரசு தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகும். பிறகு தனியார் தொலைக்காட்சிகள் வந்ததும் – கூடுதல் பணத்துக்கு ஆசைப்பட்டு – ஒளிபரப்பு உரிமையை அங்கே கொடுத்தது பி.சி.சி.ஐ.
இதை எதிர்த்து தூர்தர்சன், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து. தனது மனுவில், “நாங்கள் அரசு தொலைக்காட்சி. கிரிக்கெட் அரசு விளையாட்டு. ஆகவே ஒளிபரப்பு உரிமையை எங்களுக்கே தர வேண்டும்” என்றது.
ஆனால் பி.சி.சி.ஐ., “நாங்கள் அரசு நிறுவனம் அல்ல. கிரிக்கெட் அரசு விளையாட்டு அல்ல. தனியார் அமைப்பு நடத்தும் விளையாட்டு” என்றது.
ஆகவே, கிரிக்கெட் போட்டிகளை தனியார் சேனல்களில் ஒளிபரப்ப தடை இல்லை என்றது உச்ச நீதிமன்றம்.
அதாவது, கிரிக்கெட் என்பது தனியார் நடத்தும் நிகழ்ச்சி. இதை தேசப்பற்றுடன் முடிச்சுப்போட்டு கொண்டாடுவது நமது அறியாமை!
அதுமட்டுமல்ல… பிறகு கிரிக்கெட், ஒரு நாள் போட்டியாக சுருங்கி, பெரும் வியாபாரமாக விரிந்தது. சூதாட்டம் புகுந்தது. இதில் இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் அசாருதீன் உள்ளிட்டோர் சிக்கியது வரலாறு.
அடுத்து, டொண்ட்டி டொண்ட்டி என தலா இருபது ஓவராக இன்னும் சுருங்கியது கிரிக்கெட். சூதாட்டம் இன்னும் பெருகிறது.
தவிர இந்த 20/20 அணிகளில் அந்தந்த பகுதியைச் சேர்ந்தவர்கள்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. உதாரணமாக, பெங்களூரு அணியில் நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த வீரர்கள் மட்டுமல்ல.. உலகின் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் உண்டு.
பிறகு எப்படி இது பெங்களூரு அணி ஆகும்.
இந்த அணியின் வெற்றியைத்தான் தங்கள் வெற்றியாக நினைத்து இளைஞர்கள் லட்சக்கணக்கில்கூடி, பதினோரு பேர் பலியாகி இருக்கிறார்கள்.
விளையாட்டே அல்லாத – அரசுக்கு தொடர்பே இல்லாத – அந்தந்த பகுதியின் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு செயல்படும் ஒரு நிகழ்வை, தங்களுடன் நெருங்கிய தொடர்பை பல கோடி இளைஞர்கள் ஏற்படுத்திக் கொண்டது எப்படி…
இப்படி ஓர் சமூக மனநோயை உருவாக்கியதில் அரசுக்கு பெரும் பங்கு உண்டு.
ஏற்கெனவே சொன்னது போல அரசு நிறுவனமான வானொலியை ஆக்கிரமித்து இருந்த பார்ப்பனர்கள், கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். தங்களது ஆதிக்கத்தைப் பயன்படுத்தி இந்தியா முழுதும் கிரிக்கெட்டை பரவச் செய்தனர். இந்தியா முத்திரை பதித்து வந்த ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுகள் முக்கியத்துவத்தை இழந்தன.
இன்னொரு காரணம்…
இங்கே எல்லாவற்றையும் அரசியலாக்குவது.
பெங்களூரு நிகழ்வையே எடுத்துக்கொள்வோம். “அந்த அணியின் வெற்றியை அரசு விழாவாக கொண்டாடுவோம்” என்றார் மாநில முதலமைச்சர் சித்தராமையா.
மக்களுக்கு ஒரு விசயத்தில் ஆர்வம் இருக்கிறது என்றால், அவர்களின் வாக்குகளை ஈர்க்க.. அந்த விசயத்தைப் பயன்படுத்திக்கொள்வது. அது, திருவிழா, பண்டிகை எதுவாக இருந்தாலும். அப்படியான ஒன்றுதான் சித்தராமையா அறிவிப்பு.
பெருங்களூரு கிரிக்கெட் பலிகளுக்கு இன்னுமொரு முக்கிய காரணம்… எந்த முன்னேற்பாடும் செய்யாமல், மறுநாளே கூட்டத்தைத் திரட்டிய ஆர்.சி.பி. உரிமையாளர், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (KSCA), மற்றும் நிகழ்ச்சி மேலாளர்கள் DNA என்டர்டெயின்மென்ட் ஆகியவை!
இந்த அமைப்புகளின் மீது வழக்கு பதிவு செய்யப்படடு இருக்கிறது. சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், “கொண்டாட்டத்துக்கு அழைப்பு விடுத்த கிரிக்கெட் வீரர் வீராட் கோலியும் கைது செய்யப்பட வேண்டும்” என்று சமூகவலைதளத்தில் பலரும் ஹேஷ்டேக் பரப்புரை செய்து வருகிறார்கள்.
அதில் நியாயமும் இருக்கிறது. அவரது அறிவிப்பால் – அவரைப் பார்க்கக் கூடிய கூட்டம் அதிகம். பிரபலமான ஒருவர், பொது வெளியில் தான் பேசும் வார்த்தைகள் எந்த மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்திருக்க வேண்டும்.
மீண்டும் அரசு நிர்வாகத்துக்கே வர வேண்டி இருக்கிறது. இதை நான் கட்சி சார்ந்து சொல்லவில்லை. பொதுவாகவே அரசு என குறிப்பிடுகிறேன்.
மக்களின் வாழ்க்கையை மட்டுமல்ல மரணத்தையும் அரசு தீர்மானிக்கிறது. ஏன் அவர்களது குண நலன்களையும் அரசு தீர்மானிக்கிறது.

தேவையான ரயில்கள் இருந்தால், பயணிகள் சுமுகமாக பிற பயணிகளுடன் பேசிக்கொண்டு மகிழ்ச்சியாக பயணம் செய்வார்கள். போதுமான ரயில்கள் இல்லாவிட்டால், சக பயணிகளுடன் வாக்குவாதம், சண்டை என்றுதான் பயணம் துவங்கும்.
முப்பது வருடங்களுக்கு முன்புவரை, தமிழ்நாட்டில் பிரபலமான வார்த்தைகளில் ஒன்று குழாயடிச் சண்டை. அப்போதெல்லாம் வீட்டுக்கு வீடு குடிநீர் குழாய் வசதி கிடையாது. தெருவுக்கு ஒன்று இருக்கும். குறிப்பிட்ட நேரத்தில்தான் தண்ணீர் வரும். அந்த நேரத்தில் ஓரே அடிதடி, ரகளைதான்.
இதை வைத்துத்தான், “ரகளை” என்றாலே, “குழாயடிச் சண்டை” என்று குறிப்பிடும் வழக்கம் இருந்தது.
இந்தத் தலைமுறையினருக்கு அந்த வார்த்தைகளோ – அர்த்தமோ தெரியாது. காரணம், ஆகப்பெரும்பாலும் வீட்டுக்கு வீடு குடி நீர் குழாய் இருப்பதுதான். ( கோடை காலங்களில் சென்னை பகுதியில் வரும் தண்ணீர் லாரி சண்டைகளைத் தவிர்த்து..)
ஆக.. அரசு எந்தவொரு விசயத்துக்கும் அரசு முக்கிய காரணம்.
அடுத்து பண முதலைகள் முக்கிய காரணம்.
இந்த 20/20 கிரிக்கெட்டையே எடுத்துக்கொள்வோம். ஒளிபரப்பு உரிமம் கோடிகளில் போகிறது, தனியார் தொலைக்காட்சிகள் விளம்பரங்களில் கோடிகளில், வீட்டிலிருந்தே பலர் தொ.கா. மூலம் கிரிக்கெட் பார்ப்பதால் உணவு ஆர்டர் செய்கிறார்கள் – அந்தந்த நிறுவனங்கள் கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள்.. இப்படி பெரு முதலைகளின் கோடி கோடியான ஆசைகள், இல்லாத கிரிக்கெட் மீது மக்களை பயித்தியமாக்க வைக்கிறது.
‘பயித்தியம்’ என்ற வார்த்தையை நான் சொல்லவில்லை. பி.சி.சி.ஐ. செயலாளர் தேவஜித் சைகியாதான், “மக்கள் கிரிக்கெட் பைத்தியம் பிடித்து அலைகிறார்கள்” என்கிறார் பட்டவர்த்தனமாக. (ஆனால் அதற்கான காரணங்களை – அட, தாங்கள்தான் காரணம் என்பதைச் சொல்ல மாட்டார்.)
பெங்களூரு கிரிக்கெட் பலிகள் மட்டுமல்ல.. இந்தியாவில் கடந்த ஜூலை 2024 முதல் ஓராண்டில் நெரிசல் சம்பவங்களில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள்.
உ.பி. மாநிலத்தில் ஹத்ராஸ் பகுதியில் போலே பாபா நடத்திய ஆன்மிக நிகழ்ச்சியின் நெரிசலில் 121 பேர் பலி.
சென்னையில் விமான சாகச நிகழ்ச்சி நடந்தபோது 5 பேர் பலி
பீகார் பாபா சித்தநாத் கோயில் திருவிழா நெரிசலில் 7 பேர் பலி
ஹைதராபாத் தில் புஷ்பா 2 பட சிறப்புக்காட்சிக்கு பட நாயகன் அல்லு அர்ஜன் வந்தபோது ஒரு பெண் பலி
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி – சொர்க்கவாசல் இலவச தரிசன டிக்கெட் பெற முண்டியத்ததில் 6 பேர் பலி
கும்பமேளா நெரிசலில் 30 பேர் பலி
.
தில்லி ரயில் நிலைய நெரிசலில் 16 பேர் பலி
கோவா கோயில் நெரிசலில் 7 பேர் பலி
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1992ம் ஆண்டு நடந்த மகாமக பலிகளை மறக்கவே முடியாது.
தொடர்ந்து, நெரிசல் பலிகள் நடந்தும் நாம் பாடம் படிக்கவில்லை என்பது பெரும் சோகம்.
நிவாரணத் தொகை அளிப்பதும், விசாரணை கமிசன்கள் வைப்பதும் ஏன் தீர்வளிக்கவில்லை.. என்னதான் செய்ய வேண்டும் அரசு?
@ குறிப்பிட்ட பகுதியில் எந்த அளவுக்கு மக்கள் கூட வாய்ப்பு இருக்கிறதே அந்த அளவுக்கு மட்டும் அனுமதிக்க வேண்டும். உதாரணமாக, சவுதி ஹஜ் பயணத்தில் கடந்த வரும் நெரிசலால் பலர் மாண்டனர். இந்த வருடம் விசாவை குறைத்துவிட்டனர். குறிப்பிட்ட அளவே பக்தர்களை அனுமதிக்கின்றனர்.
@ கிரவுட் மேனேஜ்மெண்ட் குறித்த பார்வை விரிய வேண்டும். காவல்துறை, தீயணைப்புத் துறை போன்று இதற்கும் படிப்புகள், பயிற்சிகள் உருவாக்கப்பட வேண்டும்.
@ கூட்ட இடங்களுக்கு பிரபலங்கள் செல்லக்கூடாது. கும்பமேளாவு நிகழ்வுக்கு ஜனாதிபதி முர்மு சென்றார். அதனால் நெரிசல் பலி ஏற்பட்டதா என தெரியாது. ஆனால், பாதுகாப்பு படையினரின் கவனம், மக்களைவிட தலைவர்களை நோக்கிய இருக்கும். இது பிரச்சினையை ஏற்படுத்தும். (மகாமக நெரிசல் பலி சம்பவத்துக்கு ஜெயலலிதா சென்றதும், அங்கு குளத்தில் தனது நிகழ்ச்சியை திடீரென அவர் மாற்றியதும் காரணம் என்றும் விமர்சிக்கப்படுகின்றது.)
@ மனிதர்கள் அனைவருக்குமே கொண்டாட்டங்கள் தேவை. அதன் ஒரு பகுதியாக எந்த கொண்டாட்டமாக இருந்தாலும் செல்ல விரும்புவார்கள். குறிப்பிட்ட மத விழாக்களக்கு பிற மதத்தினர் செல்வதையும் பார்க்கிறோம்.
ஆகவே அந்தந்த பகுதி அளவில் அவ்வப்போது அரசே விழாக்களை நடத்த வேண்டும். சென்னையில் சென்னை சங்கமம் நடப்பது போல.
@ எல்லாவற்றுக்கும் மேலாக, இதோ தற்போது பெங்களூரு நெரிசல் பலி குறித்தும் ஆராய ஒரு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் அளிக்கும் ஆலோசனைகளே ஏற்க, அரசு தயாராக இருக்க வேண்டும். இதற்கு முன் நெரிசல் பலிகள் குறித்து ஆணையங்கள் அமைக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டு இருந்தால் அது குறித்தும் ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சரி… இது போன்ற அசம்பாவிதங்கள் நடப்பதற்கு அரசும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களும்தான் காரணமா… பொது மக்களுக்கு பங்கு இல்லையா?
@ சொல்வதற்கு வருத்தமாக இருந்தாலும், பொது மக்களாகிய நாம் ஒரு விசயத்தை உணர வேண்டும். அதிகாரத்தில் உள்ளவர்களை காப்பாறவே அரசுகள் செயல்படுகின்றன. பாமரர்களாகிய நமக்கு எந்தவித முக்கியத்துவமும் இல்லை. மொத்தத்தில் இங்கே சிஸ்டம் அப்படி.
தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா, “இந்தியாவில், ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கை விலைமதிப்பற்றது அல்ல – அது பயனற்றது. ஒரு கோப்பை டீயை விட மலிவானது!” என்று ட்வீட் செய்தார்.
பெஹல்ஹாம் பயங்கரவாத நிகழ்வில் கணவரை பறிகொடுத்த மனைவி ஒருவர், “வி.ஐ.பி.கள் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கிறீர்களே.. பாமரர்களுக்கு பாதுகாப்பு அல்லது முன்னெச்சரிக்கை அளிக்க மாட்டீர்களா” என்றதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
ஆகவே நமக்கான பாதுகாப்பை நாமே தேடிக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
முதல் விசயம்…
பெரும் திருவிழாக்களை தவிர்க்க வேண்டும். அவ்வளவு ஏன், பெரிய ஹீரோக்களின் திரைப்படத்தின் முதல் காட்சிக்கு செல்வதையும்கூட தவிர்க்கலாம். ஒரே வளாகத்தில் இரு பெரிய ஹீரோக்கள் திரைப்படங்கள் வெளியானால் அந்த இரு ரசிகர்களிடையே மோதல்.. அவர்கள் மட்டுமல்ல இதரர்களும் பாதிக்கப்படுவதைப் பார்க்கிறோம். அதே போல நடிகருக்கு மிகப்பெரிய கட் அவுட் வைத்து – சாய்ந்து – பலிகள் ஏற்படுவதையும் பார்க்கிறோம்.
ஆகவே படம் வெளியாக சில நாட்கள் கழித்து பார்க்கலாம்.
@ செல்பி மோகத்தைத் தவிர்க்க வேண்டும். பெருங்கூட்டத்துக்குச் சென்று அங்கு செல்பி எடுத்து, சமூகவலைதளத்தில் பதிய வேண்டும் என்கிற ஆசையே, அங்கு செல்வதற்கு காரணமாகவும் அமைந்துவிடுகிறது. செல்பியை விட நமது உயிர் முக்கியம்.
@ சக மனிதரை மனிதராக மதிக்க வேண்டும். பெங்களூரு அசம்பாவிதம் நடந்த பிறகு, அந்த கூட்டத்தின் ஒரு பகுதி மெட்ரோ ரயில் நிலையத்துக்குச் செல்கிறது. அங்கும் வரிசையில் நில்லாமல் நெரிசல். நல்லவேளை பலி இல்லை.
சாதாரணமாகவே சாலைகளில் பார்க்கிறோம். சாலை விதிகளை மதித்தால் அனைவருமே இயல்பாக சென்று வரலாம். ஆனால் அதைச் செய்வதில்லை
@ நம் நாட்டு நிலையை உணர வேண்டும்… மகராஷ்டிரா மாநிலத்தின் பீட் மாவட்டத்தில் கரும்பு விவசாயம்தான் பிரதானம். அங்கு பெண் தொழிலாளிகள் 843 பேர் தங்கள் கருப்பையை எடுத்துவிட்டனர். காரணம், பிரசவ, மாதவிடாய் விடுப்பு எடுத்தால் கூலி பாதிக்கப்படுகிறது. குடும்பத்தினர் உணவு உண்ண முடியவில்லை என்பதால்.
இப்படிப் பட்ட நாட்டில்தான் நாம் வசிக்கிறோம் என்பதை அனைவரும் உணர வேண்டும். அதீத – தேவையற்ற கொண்டாட்டங்கள் நமக்கு அவசியமா என சிந்திக்க வேண்டும்.
@ இது மிக முக்கியமானது..
அதீத கடவுள் நம்பிக்கையும் – குறிப்பாக விதி என்கிற கற்பிதத்தின் மீதான அதீத நம்பிக்கையும் அசம்பாவிதங்கள் தொடர காரணம்.
இந்த ( வீண்) நம்பிக்கையினால், “அவன் விதி அவன் போய்ச் சேர்ந்துட்டான்…” என்கிற மனநிலையைக்கு வந்துவிடுகிறோம். குறிப்பிட்ட அசம்பாவிதங்களுக்குக் காரணம் யார் என்று அறிந்து அவர்கள் மீதான கோபம் வருவதில்லை.
அந்த கோபம் வந்தால்தான்.. அந்த கோபம் ஒன்றிணைந்தால்தான் நல்ல தீர்வு கிடைக்கும்.
கட்டுரையாளர்: டி.வி.சோமு, பத்திரிகையாளர்

