‘ பரமசிவன் பாத்திமா’: சிறுபான்மையினருக்கு எதிரான படமா? ‘சாட்டை’ துரைமுருகன்
‘பரமசிவன் பாத்திமா’ எனற புதிய படத்தை லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்குகிறார் இசக்கி கார்வண்ணன். இவர் ஏற்கெனவே சேரன் நடிப்பில் ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தை இயக்கியவர்.
‘சார்’ படத்தில் ஜோடியாக நடித்த விமல் – சாயாதேவி இப்படத்திலம் ஜோடியாக நடிக்கின்றனர். மேலும் எம். எஸ். பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், கூல் சுரேஷ், காதல் சுகுமார், வீரசமர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் தோன்றுகின்றனர்.
‘மைனா’ சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, தீபன் சக்கரவர்த்தி இசை அமைக்கிறார்.
இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. படக்குழுவினருடன், ‘நாம்தமிழர்’ கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் சாட்டை துரைமுருகன் பேசியபோது, “பொதுவாகவே கலைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டவர்கள் என்பார்கள். இப்படத்தின் இயக்குநர் கார்வண்ணன் ரொம்பவே உணர்ச்சிவசப்படுபவர்.
இந்தப் படத்தைப் பார்க்கும்போது தெரிந்தது.. இது இந்த மொழிக்கானது, இந்த சமூகத்துக்கானது…! இயக்குநர் தனது ஊரில் என்ன பார்த்தாரோ, அங்கே என்ன நடக்குதோ அதை உண்மைக்கு நெருக்கமாக எடுத்து இருக்கிறார்..
படத்தின் டிரெய்லர் பார்த்து சிலர் விமர்சித்தார்கள்… ‘இந்தப் படம், ஒரு சமூகத்துக்கு.. குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக இருக்கு மத மாற்றத்துக்கு எதிராக இருக்கிறது… கிறிஸ்துவர் இஸ்லாமியர் எதிர்ப்பாங்க.. இஸ்லாமியர் கோயில்ல தொப்பி வச்சு ஆடுற மாதிரி இருக்கு…’ என்றெல்லாம் பேசினார்கள்.
இதையடுத்து சீமான் என்னிடம், படம் எப்படி இருக்கிறது என்று கேட்டார்..
நான், ‘அண்ணே… நீங்க தரையில் பேசியதை தம்பி திரையில் எடுத்து இருக்காரு.. ” என்றேன்.
குலசாமிகள் எப்படி உருவாக்கப்பட்டது என்று இயக்குநர் கார்வண்ணன் ஆகச் சிறந்த படைப்பை அளித்து இருக்கிறார்..” என்று சாட்டை துரைமுருகன் பேசினார்.

