மைசூர் பாக்: காரணம் இந்த உடையார்தான்!

மைசூர் பாக்: காரணம் இந்த உடையார்தான்!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் கடந்த மாதம் 22ம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது  நம் நாடு தாக்குதல் தொடுத்தது. இதற்கு  ‛ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டது. பதிலுக்கு பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது. பிறகு இரு தரப்பும் தாக்குதலை நிறுத்தின. ஆனாலும் போர்ப்பதற்றம் குறையவில்லை.

இந்த நிலையில், தங்களது தேசப்பற்றை வித்தியாசமான முறையல் சிலர் வெளிப்படுத்தி வருகின்றனர். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் ஒரு இனிப்பு கடை, “‛மைசூர் பாக்’ என்பதை ஆங்கிலத்தில் எழுதும்போது Pak என்று வருகிறது. இது பாகிஸ்தானை குறிக்கும் வகையில் உள்ளது. ஆகவே இனி  ‛மைசூர் பாக்’ பெயரை ‛மைசூர் ஸ்ரீ’ என்று  அழைப்போம்” என அறிவித்து உள்ளது.

அதே போல  அந்த கடையில் விற்பனை செய்யப்பட்டு வரும் கோந்த் பாக், மோத்தி பாக், ஆம் பாக் உள்ளிட்டவற்றின் பெயர்களும் கோந்த் ஸ்ரீ, மோத்தி ஸ்ரீ, ஆம் ஸ்ரீ என்று பெயர்களை மாற்றி விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்து உள்ளது.  அந்த ஸ்வீட் கடையில் பெயர் மாற்றி ஸ்டிக்கராக ஒட்டப்பட்டு இருக்கும் போட்டோ, வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.

மேற்கண்ட இனிப்புகளில் நாம் அறிந்தது மைசூர்பாக்கு மட்டும்தான். இது எப்படி உருவானது தெரியுமா…

மைசூர் நாட்டினை மன்னர்  நான்காம் கிருஷ்ணராஜ உடையார் 1894 முதல் 1940 வரை ஆட்சி செய்தார்.  அவரது அரண்மனையில் சமையல்கலைஞர்கள் விதவிதமாக இனிப்பு செய்வது வழக்கம்.  ஒரு முறை, சமையல் கலைஞர் ஒரு இனிப்பை தயாரித்தார். அந்த இனிப்பு சூடாக இருக்கும்போது, கட்டியாகி விட்டது. கொஞ்சம் சுவைத்துப் பார்த்தார். வித்தியாசமான சுவையில், இருந்தது.

ஆகவே அரசருக்கு அந்த இனிப்பை அளித்தார்.  மன்னரும் அந்த இனிப்பை  சுவைத்து மகிழ்ந்தார்.  அந்த இனிப்பின் பெயர் என்னவென்று மன்னன் கேட்டபோது, சமையல் கலைஞர் “நளபாக்” என்று சொன்னார்.

ஆனால் அரசர், “இது மைசூர் அரண்மனையில் செய்யப்பட்ட  இனிப்பு.. ஆகவே இனி “மைசூர் பாகு” என்று அழைக்கப்படும்” என்று உத்தரவிட்டார்.

அதிலிருந்து இந்த இனிப்பு மைசூர்பாகு என அழைக்கப்பட்டது. வட இந்தியாவில் மைசூர் பாக் என அழைக்கப்பட்டது.

அதைத்தான் இப்போது பாகிஸ்தானுடன் தொடர்புபடுத்தி மைசூர் ஸ்ரீ என மாற்றி உள்ளனர் ஒரு கடைக்காரர்கள்.

Related Posts