எம்புரானுக்கு முன்பே தமிழரை இழிவுபடுத்தும் மலையாள படங்கள்! சேட்டன்களின் கேஸ் ஹிஸ்டரி!

எம்புரானுக்கு முன்பே தமிழரை இழிவுபடுத்தும் மலையாள படங்கள்! சேட்டன்களின் கேஸ் ஹிஸ்டரி!

டி.வி.சோமு பக்கம்:

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நாயகனாக நடித்துள்ள எம்புரான் படம் குறித்து இரு சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இந்துமதத்தைப் புண்படுத்தும் காட்சிகள் உள்ளன என இந்துத்துவ அமைப்புகள் குரல் கொடுத்தன. அதோடு படத்தைத் தடை செய்ய வேண்டும் என கேரளாவில் வழக்கு தொடுத்தன. வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆனாலும், எம்புரான் படக்குழு பயந்துபோய், குறிப்பிட்ட காட்சிகளை நீக்கியது. தவிர, ‘அந்தக் காட்சிகளைப் பற்றி எனக்குத் தெரியாது.. ஆனாலும் மன்னித்துவிடுங்கள்’ என்று வருத்தம் தெரிவித்தார் மோகன்லால்.

இந்த நிலையில்தான் படத்துக்கு, தமிழ்நாட்டில் இருந்து இன்னொரு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

“2002ல் குஜராத்தில் நடந்த கலவரம் குறித்த காட்சிகளும், அதை நடத்தியவர் பெயர் பஜ்ரங் என்றும் எம்புரான் படத்தில் இருக்கிறது. இந்த உண்மைகளை காட்சிப்படுத்தியதற்குத்தான் எதிர்ப்பு ஏற்பட்டது. அதற்கு பயந்து மோகன்லால் மன்னிப்பு கேட்டார்… படக்காட்சிகளும் நீக்கப்பட்டன. இப்படி நிஜத்தைச் சொன்னதற்கே பயந்து, காட்சிகளை நீக்கி இருக்கிறார்கள்.

ஆனால் அதே படத்தில், முல்லைப்பெரியாறு அணை குறித்து, வதந்தியைப் பரப்பும் வசனங்கள் இடம் பெற்று உள்ளன.

விசயத்துக்கு வருவோம்…

தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் நிலவிய கடும் வறட்சியைப் போக்க, 1895ம் ஆண்டு, ஆங்கிலேய, பொறியாளர் பென்னிகுவிக் முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கினார். இதனால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் சுமார் 2 இலட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பயனடைகின்றன; தென்மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

முல்லைப் பெரியாறு அணையால் கிடைக்கும் நீர் மூலம் விளைவிக்கப்படும் காய்கறிகள் கேரளாவின் காய்கறி தேவையில் 80% நிறைவு செய்கிறது.

ஆனால், அந்த அணையை பலம் இழந்துவிட்டது என பொய் சொல்லி, இடித்துவிட கேரள அரசுகள் தொடர்ந்து முயற்சிக்கின்றன. அவை தொடர்ந்த வழக்குகளைத் தீர விசாரித்த உச்சநீதிமன்றம் சிறப்புப் பொறியியல் வல்லுநர் குழுவை அமைத்து, முழுமையாக ஆய்வு செய்ய வைத்தது. வல்லுநர் குழு, அணை மிகவும் உறுதியாக உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து உச்ச நீதிமன்றம், அணை பலமாக உள்ளது என தீர்ப்பளித்தது.

ஆனாலும் முல்லைப்பெரியாறு அணையை உடைத்துவிடும் நோக்கத்தோடு கேரள அரசுகள், அரசியல்வாதிகள், திரையுலகினர் செயல்படுகின்றனர்.

அணை உடைந்து மக்கள் பலர் பலியாவது போல் கிராபிக்ஸில் படம் எடுத்து மிரட்டவும் செய்தனர்.

இது குறித்தெல்லாம் விவசாய சங்கங்களும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோரும் அறிக்கை வெளியிட்டனர்.

மேலும், “எம்புரான் படத்தில் தேவையே இல்லாமல் முல்லைப் பெரியாறு அணை குறித்த வதந்தி சேர்க்கப்பட்டு உள்ளது. அந்தப் படத்தின் இயக்குநர் பிருத்வி ஏற்கெனவே முல்லைப்பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என ட்விட்டரில் பதிவு போட்டவர்தான்.

இந்தப் படத்தில், நெடும்பள்ளி டேம் என்று மாற்று பெயரிட்டு முல்லைப் பெரியாறு அணையை சொல்கின்றனர். அதோடு, ‘பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குள் அடங்கி இருந்த திருவிதாங்கூர் ராஜா, 999 வருடங்களுக்கு இனாமாக எழுதிக் கொடுத்தார். எழுதி வாங்கிய பிரிட்டிஷ்காரன் போய்விட்டான்.. மன்னராட்சியும் போய் விட்டது.. ஆனாலும் அந்த ஆபத்து மக்களை காவு வாங்க காத்து நிற்கிறது’ என்று நடிகை மஞ்சு வாரியர் வசனம் பேசுகிறார்.

மேலும், ‘இரண்டு ஷட்டரை திறந்தாலே, மக்கள பலிவாங்குற அணையை, அதாவது முல்லைப் பெரியாறு அணையை, குண்டு வைத்து தகர்த்தால், கேரளம் மறுபடியும் தண்ணீருக்குள் மூழ்கும். அணையை காப்பாற்ற செக் டேம் எனும் சுவர்களால் பயனில்லை. அணையே இல்லாமல் இருந்தால் தான் சரி’ என்பன போன்ற வசனங்களும் படத்தில் இடம்பெறுகின்றன.

இதெல்லாம் மலையாளிகளின் தமிழ் இன வெறுப்பு” என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து எம்புரான் படம் வெளியான மார்ச் 27ம் தேதியே,tamilankural.com இதழ் விமர்சனத்தில் தெரிவித்து இருந்தோம்.

அந்த தொடுப்பு:  https://tamilankural.com/l2-empuraan-movie-review-in-ll-tamil/

தமிழர்களை இழிவுபடுத்துவது என்பது மலையாளிகளுக்கு புதிதல்ல.. அவர்களது வழக்கமே அதுதான். அவர்களது, கேஸ் ஹிஸ்டரி அப்படி.

இது குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பே, சாம்ராஜ் என்பவர், ஆரம்ப கால சோசியல் மீடியாவான வலைப்பூ (Blog)வில்  எழுதிய கட்டுரை நினைவுக்கு வந்தது. அதை, தேடி எடுத்து பகிர்ந்திருக்கிறேன். படியுங்கள்..

மலையாள திரைப்படங்கள் தமிழரை எதிரியாக காட்டுவது ஏன்?: சாம்ராஜ்

இயல்பான தேடுதலில் மலையாள சினிமாவை அடைந்தவன் நான். தமிழ் சினிமாவின் போதாமையும், இலக்கிய வாசிப்பும் என்னை அதை நோக்கி ஈர்த்தன. 80 களின் இறுதியில் 90 களின் தொடக்கத்தில் மலையாள சினிமா பார்க்கத் தொடங்கினேன். யதார்த்தமான கதையமைப்பும், நம்பகமான காட்சியமைப்பும், மிகையில்லாத நடிப்பும், நகைச்சுவையும் என்னை சந்தோசப்படுத்தின. வெறிகொண்டு மலையாள சினிமா பார்க்கத் தொடங்கினேன். (நண்பர்கள் மதுரை மோகன்லால் ரசிகர் மன்றத்தின் தலைவன் நான் என்று என்னை கேலி செய்ததுண்டு.)

பெரும் ஆறுதலையும், ஆசுவாசத்தையும் தந்தது மலையாள சினிமா. கரைந்து அழுக, சிரிக்க, உன்மத்த நிலையில் நம்மை உட்கார்த்தி வைக்க எத்தனையோ அருமையான படங்கள் அவர்களிடம் உண்டு. சிபிமலயில் இயக்கத்தில் லோகிதாஸின் திரைக்கதையில் மோகன்லாலின் ’கிரிடம்’ படத்தை கணக்கு வழக்கில்லாமல் பார்த்திருக்கிறேன். ‘தேசாடனம்’ இன்றைக்கும் என்னை கண்ணீர் சிந்த வைக்கும் படம். ஒருபாடு படங்கள்.

80 களின் நடுப்பகுதி மலையாள சினிமாவின் பொற்காலம். துல்லியமான middile cinema உருவாகியிருந்தது. ஹரிஹரன், பத்மராஜன் சேதுமாதவன். பரதன், வேணு நாகவள்ளி, சத்யன் அந்திக்காடு,தொடக்க கால பிரியதர்ஷன், பிளஸ்ஸி போன்ற நல்ல இயக்குனர்களும், எம்.டி.வாசுதேவன் நாயர், சீனிவாசன் போன்ற திரைக்கதை ஆசிரியர்களும் உண்டு.

மரித்துப் போன மலையாள நடிகர் முரளி எனக்கு பரிச்சயமே. திலகனுடன் தொலைபேசியில் உரையாடுவதுண்டு. கோபியோடு ஒரு முறை உரையாடியிருக்கிறேன். லோகிதாசை ஒருமுறை சந்தித்திருக்கிறேன். அவர் இறந்த பொழுது அவருடைய லக்கடி அமராவதி வீட்டுக்குச் சென்ற விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழ் ரசிகர்களில் நானும் ஒருவனாய் இருப்பேன். பழைய நகைச்சுவை நடிகர் மாலா அரவிந்தன் எனக்கு நெருக்கமே.

பல கால மலையாள சினிமாவை அவதானித்தவன் என்ற இறுமாப்பில் சொல்கிறேன். முன் சொன்ன பத்தியில் இருக்கும் அத்தனை பேரும் கறைபட்டவர்கள் அல்லது கயமையானவர்களே.

இத்தனை வருட காலம் நான் பார்த்த மலையாள சினிமாவில் ஒரு திரைப்படம் கூட தமிழர்களை நல்லவர்களாய்ச் சித்தரிக்கவில்லை. மாறாக தமிழர்கள் என்றால் திருடர்கள், ஏமாற்றுக்காரர்கள், வேசிகள், கூட்டிக் கொடுப்பவர்கள், கோழைகள், பிச்சைகாரர்கள், காசுக்காக என்ன வேண்டுமானலும் செய்யும் எத்தர்கள் என்றே எப்பொழுதும் சித்தரிப்புகள். மலையாள சினிமாவின் எந்தவொரு நடிகர், நடிகை இயக்குனர் என எவரும் எனது குற்றச்சாட்டிலிருந்து தப்பமுடியாது. தமிழனை நல்லவனாக காட்டும் ஒரு படத்தை சொல்லுங்கள் நான் சங்கறுத்து செத்துப் போகிறேன்.

வலிந்து வலிந்து தமிழ் பாத்திரங்களை உருவாக்குவார்கள். அவர்களுக்கு தமிழ்நாட்டு வில்லன்கள் எனில் பொள்ளாச்சி கவுண்டர்களும், தென்காசி, உசிலம்பட்டி தேவர்களும்தான். பொள்ளாச்சி கவுண்டராக உசிலம்பட்டி தேவராக பெரும்பாலும் ஒரு மலையாள நடிகரே நடிப்பார். பெரும் நிலக்கிழாராக திண்ணையில் அமர்ந்து வெற்றிலை போட்டு துப்பி “வேண்டாம் தம்பி” என மோகன்லாலிடமோ மம்மூட்டியிடமோ ஜெயராமிடமோ சாவல் விட்டு, மோகன்லால் அந்த பொள்ளாச்சி கவுண்டரின் பூர்வ கோத்திரத்தை, வரலாற்றை மூச்சு விடாமல் பேசி “வேண்டாம் மோனே தினேஷா” என மாரில் ஏறி மிதிப்பார்.

பொள்ளாச்சியில் கவுண்டர்கள் இப்படித்தான் இருக்கின்றார்களா? (கொங்கு வேளாள கவுண்டர் சங்கம் இதையெல்லாம் கவனிக்கலாம்) தென்காசி பக்கம் திரும்பினால் தேவராக வினுச்சக்கரவர்த்திதான் மலையாள சினிமாவில் நீண்ட காலமாக set property போல திகழ்ந்தார். அவர் ஆக்ரோஷமாக சண்டையி்ட்டு இறுதியில் மலையாள கதாநாயகர்களிடம் மண்டியிடுபவராகத்தான் பல வருடம் இருந்தார்.

உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, வருஷநாட்டுக் கள்ளர்களை காலகாலமாக அவர்கள் சித்தரிக்கும் விதம் பற்றி நம்மவர்கள் ஒன்றும் அறியார். மலையாளிகள் கால் நூற்றாண்டாக சினிமாவில் அவர்களை கேலி செய்து சிரித்தபடி kl வண்டிகளில் உசிலம்பட்டியையும், ஆண்டிப்பட்டியையும் கடந்து செல்கிறார்கள். நம்மவர்களுக்கு சிங்கம் கால்மாட்டில் உட்கார்ந்திருக்க முத்துராமலிங்கத் தேவரோடு பிளக்ஸ் போர்டில் நிற்கவே நேரம் போதவில்லை.

கேரளத்தில் தொழில் துவங்கும், நடத்தும் தமிழர்களை மலையாள சினிமா சித்தரிக்கும் விதம் குரூரமானது. அங்கே தொழில் துவங்கும் தமிழர்கள் திருடர்கள். அவர்களின் ரிஷிமூலம் வெறும் பஞ்சை பராரியென்றும் ஏமாற்றி ஏமாற்றி பணம் சம்பாதித்து கேரளத்தில் தொழில் தொடங்க வந்துள்ளதாகவும் ”அது நடக்காது” என்று விடாது மம்மூட்டிகளும், மோகன்லால்களும் கர்ஜிக்கிறார்கள்.

(இப்பொழுது உங்களுக்கு முத்தூட் பின்கார்ப், மணப்புரம் கோல்டு லோன் எல்லாம் ஞாபகம் வரக்கூடாது.) கேரளத்தில் சிறிய சிறிய வியாபார நிறுவனங்கள் வைத்திருக்கும் தமிழர்கள் கொள்ளைக்காரர்களா…..? சிறிய நிறுவனங்கள் நடத்தும் தமிழர்கள் மீது அப்படி எந்த குற்ற வரலாறு கிடையாது. கால் நூற்றாண்டு கால மலையாள சினிமாவின் சித்தரிப்பு இதுவே. (பட்டியல் கடைசியில் இருக்கிறது.)

இதில் உள் ஒதுக்கீடுகளும் உண்டு. தமிழ் பார்ப்பனர்கள் இங்கிருந்து 15,16 நூற்றாண்டுகளில் புறப்பட்டவர்கள். கேரளத்தின் புறவாசல் இரண்டிலும் வாழ்கிறார்கள். திருவனந்தபுரம், பாலக்காடு, திருச்சூரில் கொஞ்சமுண்டு. இன்றைக்கு வரை மலையாள சமூகம் அவர்களை உள்வாங்கவில்லை. கேரளத்தில் இவர்களை விளிக்கப் பயன்படுத்தும் சொல் ”தமிழ் பட்டர்கள்”. வீட்டில் தமிழும், வெளியில் மலையாளமும் பேசுவார்கள். (ஜெயராமைக் கூட தமிழ் பட்டர் என்றே சொல்கிறார்கள்.)

இவர்களை மலையாள சினிமா சித்தரிக்கும் விதம் வழக்கமான தமிழர்களிடமிருந்து சற்று வேறுபட்டது. தமிழ் பட்டர்கள் அறிவாளிகள் நிரம்ப கல்வியறிவு பெற்றவர்கள் ஆடிட்டர்கள், அதிகாரிகள் என்று சித்தரிக்கும் மலையாள சினிமா அவர்களை பெரும் கோழைகள் பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்றே தமிழ் பட்டர்களின் பாத்திரங்களை வடிவமைக்கும்.

அரசியல், முல்லை பெரியாறு அணை, தமிழ் சினிமாவின் சகல தளங்களிலும் மலையாளிகள் கோலோச்சுகிறார்கள். அவர்கள் கதாநாயகர்களாகநடிக்கும் பட்டியல் அறுபதுவருட நீளமுடையது.

நம்பியார், பாலாஜி, பிரேம்நசீர், சங்கர் (ஒரு தலைராகம்), ராஜிவ், விஜயன், ரகுவரன், பிரதாப் போத்தன், தீபன்(முதல் மரியாதை), ரகுமான், கரண், வினித், ஜெயராம், அஜித்,பரத்,நரேன்,அஜ்மல் (அஞ்சாதே), பிரித்வ்ராஜ், ஆரியா மேலும் மம்மூட்டி, மோகன்லாலை நாடே அறியும். நடிகைகளின் பட்டியல் நான் சொல்ல வேண்டியதே இல்லை. தமிழ் சினிமா உருவாகுவதற்கு முன்பே அவர்கள் வந்து விட்டனர்.

தொழில் நுட்பக்கலைஞர்கள், பாடகர், பாடகிகள் என பெரும் திரள் இங்குண்டு. எம்.எஸ்.விஸ்வநாதன் (மனையமங்கல சுப்பிரமணிய விஸ்வநாதன்) மலையாளி என்று நிறைய சினிமா துறையினருக்கே தெரியாது. அவரது சந்தன குங்குமப் பொட்டை பார்த்து காரைக்குடி பக்கம் என்றே கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

மலையாள சினிமாவில் ஒரு தமிழரைக் கூட காட்ட முடியாது. இதுவரை மலையாள சினிமாவில் தோன்றிய தமிழ் முகங்கள் அத்தனையும் தமிழ் தெலுங்கு பார்ப்பன முகங்களே. கமல்ஹாசன், லக்ஷ்மி, ஸ்ரீ வித்யா, மேனகா, சுஹாசினி, பூர்ணிமா ஜெயராம், ஒய்.ஜி.மகேந்திரன் என அத்தனையும் அவாளே. மீனா, தேவயானி,கனிகா போன்றவர்கள் சமீப மலையாள சினிமாவில் அதிகம் தென்படுகிறார்கள். இவர்களில் மீனா,தேவயானி பகுதி மலையாளிகள் என்றும், கனிகா தமிழ் பார்ப்பனர் என்றும் செய்தி உண்டு. தமிழ் பார்ப்பனர் அல்லாத ஒருவருக்குக் கூட அவர்கள் வாய்ப்பளித்ததில்லை.

பழசிராஜாவில் குதிரை மேல் கண்ணை உருட்டிக் கொண்டு வரும் சரத்குமார் எல்லாம் படம் தமிழ்நாட்டில் விற்பதற்கான சேட்டன்களின் வியாபார உத்தி. எனக்குத் தெரிந்து மலையாளப்படம் இயக்கச் சென்ற இயக்குநர் பாலு மகேந்திராதான். 81 ல் ஓளங்கள், 83 ல் யாத்திரா (ஒருவேளை அவர் பேசும் ஈழத் தமிழை மலையாளம் என்று கருதி விட்டார்களோ என்னவோ) அதன்பின் மணிரத்னம் “உனரு” 1982 ல் ஒரு படத்தை இயக்கினார். அதன் பின் இந்த இருபத்தேழு வருடத்தில் எந்தவொரு தமிழ் இயக்குநரும் மலையாளப் படத்தை இயக்கவில்லை. கமலஹாசன் 90 ல் சாணக்கியன் திரைப்படத்தோடு கதாநாயகனாக விடைபெற்றார். அதன் பின் இந்த இருபது வருடத்தில் எந்த தமிழ் கதாநாயகனும் நடித்ததில்லை.

ஒளிப்பதிவாளர்கள் ஜீவா, கே.வி.ஆனந்த், படத்தொகுப்பாளர் பூமிநாதன் போன்றோர் அவ்வப்போது மலையாளத்திரையில் தென்பட்டது உண்டு.

தவிர, பெரும்பாலும் ஸ்டண்ட் மாஸ்டர்கள் தமிழர்கள்தான். பாத்திரங்களாக மட்டுமல்ல சண்டைக் காட்சிகளிலும் தமிழர்களே அடிவாங்குகிறார்கள். இளையராஜா மாத்திரம் இப்போது அங்கே வலம் வருகிறார். இளையராஜாவின் புகழ்மிக்க காலத்தில் அவர்கள் அழைக்கவில்லை. அவர் தமிழில் ’சோர்ந்திருக்கும்’ காலத்தில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பழசிராஜா படத்தில் அவரது இசை கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. அந்த மண்ணின் மணம் இளையராஜாவுக்குத் தெரியாது என்றார்கள். பழசிராஜா படத்திற்கான கேரள மாநில அரசு விருதுப் பட்டியலில் இளையராஜாவின் பெயர் கிடையாது.

அப்படியே தோசையை திருப்பிப் போட்டோமென்றால் தமிழ் சினிமாவில் இதுவரை எவ்வளவு மலையாள இயக்குநர்கள். ராமூ கரியாட் தொடங்கி சேது மாதவன், ஐ.வி.சசி, பிரதாப் போத்தன், பரதன், பாசில், வினயன், கமல், ரஃபி மெக்கார்டின், சித்திக், பிரியதர்ஷன்,லோகிதாஸ், ஷாஜி கைலாஷ், ராஜிவ் மேனன் என. இந்த மலையாள இயக்குநர்களின் தமிழ் படங்கள் மிகவும் ஆய்வுக்குரியவை. பிரதான பாத்திரங்களைத் தவிர மற்ற பாத்திரங்களை முடிந்தவரை மலையாள நடிகர்களைக் கொண்டே நிரப்புவார்கள்.

உதாரணம் பாசில், பிரியதர்ஷன் படங்கள். பாசிலின் பூவிழி வாசலிலே படத்தில் சத்ய ராஜைத் தவிர ஏறக் குறைய எல்லோரும் மலையாள நடிகர்களே. ரகுவரன், கார்த்திகா, பாபு ஆண்டனி (உங்களுக்கு ஞாபகம் வரவில்லை எனில் விண்ணைத் தாண்டி வருவாயா ஜெஸியின் தந்தை), மணியம் பிள்ளை ராஜு, குழந்தை பாத்திரம் சுஜிதா (அது வாவா…. வாவா…. என்று மழலை மொழியில் அல்ல மலையாள மொழியிலேயே பேசும்). அந்த படத்தின் flash back ல் தோன்றி மறையும் கதாபாத்திரங்களில் வருவது கூட மலையாளிகளே. இதற்கு மேல் சொல்வதற்கு துணை நடிகர்கள் மாத்திரமே.

பூவே பூச்சூடவா வில் ’மதிப்பிற்குரிய மைலாப்பூர் எம்.எல்.ஏ எஸ்.வி.சேகர்’ தவிர எல்லோரும் மலையாளிகளே. பாசிலின் பெரும்பான்மையான படங்களில் நாயகனோ நாயகியோ மலையாளிகளாக இருப்பர். பிரியதர்ஷனின் லேசா லேசாவில் ஷாம், விவேக், ராதாரவி, மயில்சாமி தவிர எல்லோரும் மலையாளிகளே. அவரும் முடிந்தவரை மலையாள நடிகர்களையே பயன்படுத்துவார். முடியவில்லை எனில் தமிழில் இருக்கும் பிறமொழிக்காரர்களைப் பயன்படுத்துவது. சமீபத்திய பிரியதர்ஷனின் ’தமிழ் படமான’ காஞ்சிவரத்தில் பிரதான பாத்திரங்கள் பிரகாஷ் ராஜும், ஸ்ரேயா ரெட்டியும் தான்.

ராஜீவ் மேனனின் படங்கள் ஆபத்தானவை. மின்சாரக் கனவில் அரவிந்தசாமி, நாசரைத் தவிர பிறமொழிக் காரர்களும், மலையாளிகளுமே. கஜோல், கிரீஷ் கர்னாட், பிரபுதேவா, எஸ்.பி.பாலசுப்பிரமணியன், பிரகாஷ் ராஜ்…..இது ஏ.வி.எம். பொன்விழா தயாரிப்பு என்பது மற்றுமொரு அபத்தம். அடுத்த படத்தில் ராஜீவ் மேனனுக்கு இன்னும் கூடிப் போய் முழுக்க முழுக்க தமிழர் அல்லாதவர்களை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ”கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்”. இதை மிஞ்சி இன்னும் ஒரு திரைப்படம் வரவில்லை. ஐஸ்வர்யா ராய், தபு, மம்மூட்டி (இவர் இந்திய ராணுவத்தின் ”அமைதிப் படை”யில் இலங்கை சென்று காலை இழந்தவர்.) அஜித், அப்பாஸ், ரகுவரன், அனிதாரத்னம், ஸ்ரீவித்யா என. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ம.தி.மு.க வின் கலைப்புலி எஸ்.தாணு. ராஜீவ் மேனனால் இந்திய அமைதிப்படையில் காலை இழந்தவரை நாயகனாக்கித் தமிழ் படம் எடுக்க முடிகிறது. சரி…. ’ராஜீவ்’ – ’மேனன்’ என்று பெயர் கொண்டவர் வேறு எப்படி படம் எடுப்பார்…?

ஏறக்குறைய மற்ற மலையாள இயக்குநர்களும் இதே முறையை பின்பற்றுகின்றனர். முடிந்தவரை மலையாள நடிகர்கள், நடிகைகள் அல்லது தமிழில் இருக்கும் பிற மொழிக் காரர்கள், வேறு வழியே இல்லையெனில் தமிழ் நடிகர்கள்.

நாராயணகுருவின் வாழ்க்கை வரலாறு, யுவபுருஷன் என்ற பெயரில் மலையாளத்தில் திரைப்படமாக்கப்பட்டது. மம்முட்டி ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.  தலைவாசல் விஜய் நராயணகுருவாக நடித்தார்.  முக ஒற்றுமைக்காக அவருக்கு அந்த வாய்ப்பு கிட்டியது என்று சொல்லப்பட்டது. சொல்லாதது, இனப்பற்று காரணமாக கிட்டியது என்பதே. எத்தனை தூரத்தில் இருந்தாலும் தம்மவர்களை அடையாளம் கண்டு அழைத்துப் போவார்கள் மலையாளிகள்.

அஜீத்தின் படங்களை கவனித்துப் பாருங்கள். திரைப்படத்தில் அவர் ஏதேனும் ஒரு அறையைத் திறந்தால் அங்கே ஒரு மலையாள நடிகர் இருப்பார். இன்றைக்கு நடித்துக் கொண்டிருக்கும் மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்ட நாயகர்களில் அஜீத் ஆதிக்கம் செலுத்தக் கூடிய நிலையில் இருப்பவர். எனவே சகட்டுமேனிக்கு அவர் படத்தில் மலையாள நடிகர் நடிகைகள். தீரமிக்க அண்ணன் அவருக்கு தீனாவில் தேவைப்பட்ட பொழுது சோதரர் சுரேஷ் கோபியே அவருக்கு உதவினார்.

இதற்கு நடுவேதான் கெளதம்மேனனும் மலையாளிகளுக்காக தன் பங்கிற்கு கிடார் இசைத்துக் கொண்டிருக்கிறார். என்ன இருந்தாலும் அவர் ஸ்கூல் ஆப் ராஜீவ்மேனன் அல்லவா. இவரின் முக்கிய பங்களிப்பு மலையாள கதாபாத்திரங்களை உருவாக்கி, அவர்களை சென்னையில் உலவ விட்டு தமிழ் படம் எடுப்பது. வாரணம் ஆயிரத்தில் சகல பாத்திரங்களும் மலையாளிகளே. விண்ணைத் தாண்டி வருவாயாவில் மலையாள ஜெசியை துரத்தித் துரத்திக் காதலித்து தோற்றுப் போகிறார் தமிழ் கார்த்திக். அவர் கெளதமாக இருந்த பொழுது மின்னலேயும், காக்க காக்கவும் தந்தவர் கெளதம் வாசுதேவ மேனனாகிய பின் ”தான் முன் வைக்கும் மலையாள அடையாளங்கள்” என்கிறார் தன் பாத்திரங்களைப் போலவே ஆங்கிலத்தில்.

சரி கேரளத்துக்குத் திரும்புவோம். சேரனின் ஆட்டோகிராப் கோட்டயத்தில் வெளியான போது அதில் சேரன் மலையாளிகளை அடிக்கும் காட்சி நீக்கப்பட்டது. பாலாவின நான் கடவுள் படத்தில் மலையாளிகளை அடிக்கும் காட்சியில் பெரும் கூச்சல் கோட்டயம் திரையரங்கத்தில். ”பாண்டி…” என்றே மலையாள சமூகமும், சினிமாவும் தமிழர்களை எப்போதும் விளிக்கிறது.

ஏறக்குறைய 16,17 ம் நூற்றாண்டு வரை பாண்டியர்களுக்கும் சேரர்களுக்கும் யுத்தம் நடந்திருக்கிறது. சேர மன்னர்களோடு சமீப நூற்றாண்டு வரை போரிட்ட தமிழ் மன்னர்கள் பாண்டியர்கள் மட்டுமே. அந்த வரலாற்றுக் காழ்ப்புணர்வின் அடிப்படையில் பாண்டியன் என்ற சொல்லின் ’அன்’ நீக்கி பாண்டி என்று இகழ்ச்சியோடு விளிக்கிறார்கள்.

இந்தப் பாண்டிகளின் தலைநகரில்தான் மலையாள் நடிக, நடிகைகள், இயக்குநர்கள் பெரும்பான்மையினர் வசிக்கின்றனர். மோகன்லால் நடிகர் பாலாஜியின் வீட்டு மருமகன். மம்முட்டி இங்கு வந்து பல வருடம் ஆகிறது. ஜெயராமின் தாக்கப்பட்ட வீடு பல வருடமாக இங்கேதான் இருக்கிறது. ஏ.வி.எம்., பிரசாத் உள்ளிட்ட சென்னை ஸ்டுடியோக்களில் அவர்களின் சூட்டிங் நடக்கிறது. தமிழ்நாடு மலையாள சமாஜம்,  லட்சக்கணக்கான உறுப்பினர்களோடு கோலாகலமாய் ஓணம் கொண்டாடுகிறது.  தமிழர்களோடுதான் அவர்கள் ’வாழ்கின்றனர்’. ஒரு தமிழர்தான் அவர் வீட்டுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்பவராக இருப்பார்..  ஒரு தமிழ்ப் பெண்தான் வேலைக்காரியாக இருப்பார்.

இப்படி, அன்றாடம் தமிழர்களோடு புழங்குபவர்கள் தான் விடாது சொல்கிறார்கள் ‘தமிழர்கள் திருடர்கள், கோழைகள், ஏமாற்றுக் காரர்கள்’ என்று.

தமிழர்களை இழிவுபடுத்தும் இந்தப் படங்கள் சென்னையிலும், கோவையிலும் வெளியாகின்றன. காம்ப்ளக்ஸ் திரையரங்குகளில் நம் தமிழ் சமூகம் வேறு படம் பார்த்துவிட்டு வெளியில் வர, “பாவம் இந்தப் பாண்டிகள்” என்று ஏளனப் புன்னகையோடு கடந்து போகிறார்கள் பக்கத்துத் திரையரங்கத்திலிருந்து வெளிவரும் மலையாளிகள். கேரளத்தில் இது போன்ற ஒன்றை கற்பனை கூட செய்ய முடியாது. திரையரங்கம் சூறையாடப்படும். ஒரு காட்சி அல்ல ஒரு ரீல் கூட ஓடாது.

தமிழ் படங்களில் மலையாளிகளை கேவலப்படுத்தவில்லையா என்று கேட்கலாம். தமிழ் சினிமாவில் நாயர் டீக்கடை என்பது கற்பனை நகைச்சுவை கடைதானே. உங்கள் மனதைத் தொட்டு சொல்லுங்கள். எந்த டீக்கடை நாயர் நம்மை பார்த்து சிரித்திருக்கிறார். மூன்றாம் தாரத்து பிள்ளைகளைப் போலத்தானே நம்மை நடத்துகிறார்கள். வெறுப்பை முகப் பரப்பெங்கும் தேக்கி வைத்திருக்கும் மாந்தர்களே கல்லாப் பெட்டியில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களின் விருந்தோம்பல் மனித நாகரீகத்துக்கு உட்பட்டதல்ல.

நல்ல மலையாளப் பாத்திரங்கள் தமிழில் உண்டு.  கே.பாக்யராஜின் அந்த ஏழு நாட்கள் படத்தின் கதாநாயகன் மாதவன் பாலக்காட்டு மாதவன்தானே. இன்றைக்கும் பேசப்படும், கதாபாத்திரம்தானே அது. மணிவண்ணன் பல படங்களில் நல்ல மலையாளியாக வலம் வருகிறார். ”அலைபாயுதே”யில் அழகம்பெருமாள் பாத்திரம், ”தினந்தோறும்” ல் கொச்சின் ஹனிபா பாத்திரம் இவையெல்லாம் தமிழ் சினிமா உருவாக்கிய, மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பாத்திரங்கள் தானே. இது போல் ஒன்றை காட்ட முடியுமா மலையாள சினிமா.

தமிழ் சினிமா நாணப்பட வேண்டிய இடமொன்று உண்டு. அது மலையாளப் பெண் பாத்திரம் உருவாகும் இடம். ஏறக்குறைய முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னால் அவர்கள் கைவிட்ட ஜாக்கெட் பாவாடையோடுதான் இன்றைக்கும் அவர்கள் ’சின்னக் கலைவாணர்’ விவேக்கு டீக் கொண்டு வருகிறார்கள். தமிழ் சினிமா உருவாக்கும் சித்திரத்திலிருந்து நம்மவர்கள் கேரளத்தில் ”அஞ்சரைக்குள்ள வண்டி”யும், ’சொப்பன சுந்தரிகளும்’ ’அடிமாடு’களூம் நிகழ்ந்து கொண்டிருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

மலையாள சினிமா என்றாலே பிட் படம் என்று கருதும் பெரும்பான்மை இங்குண்டு. அந்தப் பாவத்தில் பாதிதான் நமது பங்கு. (மலையாளிகளே அதுபோன்ற படங்களை தயாரிக்கவும் செய்தார்கள். நடிகர் கொச்சின் ஹனிபாவே சில்க் ஸ்மிதாவை வைத்து பல படங்களைத் தயாரித்தவர்). கேரளப் பெண்கள் தமிழ் பெண்களை விட தைரியமாக பேசக்கூடியவர்கள். வாதிடக்கூடியவர்கள். அதனடிப்படையிலும் தமிழ் சினிமாவின் செல்வாக்கிலும் தமிழர்கள் மலையாளப் பெண்களைப் பற்றி உருவாக்கிக் கொண்ட கேவலமான மனச்சித்திரம் அது.

கெளரவமான மலையாள பெண் பாத்திரங்கள் தமிழ் சினிமாவில் நிச்சயம் உண்டு. ”கற்றது தமிழ்” பாத்திரமான பிரபாகரனின் அத்தனை பிரச்சினைகளும் டீக்கடை சேச்சியின் நியாயமான கோபத்திலிருந்தே துவங்குகிறது.

1985 முதல் 2010 வரை வெளிவந்துள்ள மலையாளப் படங்களில் தமிழர்களை இழிவுபடுத்தும் படங்களின் குறுகிய தொகுப்பு இது. (முழுமையான பட்டியல் வெகு நீளமானது)

1. நாடோடிக் காற்று- மோகன்லால், சீனிவாசன் – பிரியதர்ஷன் 1985 ல்
2. நியூடெல்லி – மம்முட்டி – ஜோஷி – 1986
3. யுவ ஜனோற்ஷவம் – மோகன்லால் – 1987
4. இது எங்க கத – முகேஷ் – விஸ்வாம்பரன் – 1983
5. சித்ரம் – மோகன்லால் – பிரியதர்ஷன் – 1989
6. நம்பர் 20 மெட்ராஸ் மெயில்- மோகன்லால், மம்முட்டி – ஜோஷி -1990
7. முகுந்தேட்ட சுமித்ரா விளிக்குன்னு – மோகன்லால் – பிரியதர்ஷன் – 1987
8. வந்தனம் – மோகன்லால் – பிரியதர்ஷன் – 1991
9. மிதுனம் – மோகன்லால் – பிரியதர்ஷன் – 1992
10. விஷ்ணு – மம்முட்டி – – 1993
11. கிலுக்கம் – மோகன்லால் – பிரியதர்ஷன் – 1992
12. பிங்காமி – மோகன்லால் – சிபிமலயில் – 1997
13. மழவில் காவடி – ஜெயராம் – 1990
14. காவடியாட்டம் – ஜெயராம் – 1990
15. ஐட்டம் –மோகன்லால் – 1985
16. மணிசித்ரதாழ் – மோகன்லால் – பிரியதர்ஷன் – 1994
17. வெறுதே ஒரு பாரியா – ஜெயராம் – 2008
18. நாலு பெண்கள் – அடூர் கோபால கிருஷ்ணன் – 2006
19. தாழ்வாரம் – பரதன் – 1987
20. அச்சுவிண்ட அம்மா – ஊர்வசி,நரேன் – சத்யன் அந்திக்காடு – 2005
21. மிஸ்டர் பிரமச்சாரி – மோகன்லால் – 2000
22. காருண்யம் – முரளி, ஜெயராம் – சிபிமலயில், லோகிதாஸ் – 1998
23. சேக்ஸ்பியர் M.A இன் மலையாளம் – ஜெயசூர்யா – 2008
24. பிளாக் – மம்முட்டி – 2004
25. கருத்தபட்சிகள் – மம்முட்டி – கமல் – 2006
26. காழ்ச்சா – மம்முட்டி – பிளஸ்ஸி – 2004
27. தன்மாத்ர – மோகன்லால் – பிளஸ்ஸி – 2005
28. பளிங்கு – மம்முட்டி – பிளஸ்ஸி – 2006
29. கல்கத்தா டைம்ஸ் – திலீப் – பிளஸ்ஸி – 2007
30. பிரம்மரம் – மோகன்லால் – பிளஸ்ஸி – 2009
31. பாண்டிப்படா – திலீப், பிரகாஷ்ராஜ் – 2003
32. ஒரு மருவத்தூர் கனவு – சீனிவாசன் – 1999
33. நரன் – மோகன்லால் – 2005
34. தென்காசி பட்டணம் – சுரேஷ் கோபி – லால் – 2002
35. நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா – குஞ்சாக்க கோபன், பார்த்திபன் – சத்யன் அந்திக்காடு – 2001
36. ரச தந்திரம் – மோகன்லால், கோபி – சத்யன் அந்திக்காடு – 2005
37. ஹலோ – மோகன்லால் – ரஃபி மெக்காடின் – 2005
38. புலி வால் கல்யாணம் – ஜெயசூர்யா – 20002
39. மலையாளி மாமனுக்கு வணக்கம் – ஜெயராம், பிரபு – 2003
40.மழைத்துளி கிலுக்கம் – திலீப் – 2000
41. டிரீம்ஸ் – சுரேஷ் கோபி – 1998
42. மேலப் பரம்பில் ஆண் வீடு – ஜெயராம், முகேஷ் 2000
43. இன்னலே – சுரேஷ் கோபி – 1999
44.கேரள ஹவுஸ் உடன் விற்பனைக்கு – ஜெயசூர்யா – 2006
45. பெடக்கோழி கூவுன்ன நூற்றாண்டு – ஊர்வசி, ஜெகதி – 2001
46.ஏகேஜி – 2007
47. மேகம் – மம்முட்டி – பிரியதர்ஷன் – 1998
48. பகல் பூரம் – முகேஷ் – 2000
49.ஜனவரி ஒரு ஓர்மா – மோகன்லால் – 1992
50. யாத்ரக்காரர் ஸ்ரதிக்கு – சத்யன் அந்திக்காடு – 2003

இந்த ஆய்வை தொடர்ந்தால் நமக்கு துரோகம் இன்னும் தொகுப்பு தொகுப்பாக கிடைக்கும். மலையாள சினிமாவுக்கும் சிங்கள சினிமாவுக்கும் உள்ள தொடர்புகள் கவனிக்கப்பட வேண்டியது.” – சம்ராஜ் அவர்கள் எழுதிய கட்டுரை இன்றும் பொறுத்தமாக இருக்கிறது.

ஆம்… அந்த ஐம்பது படப் பட்டியிலல் இன்னும் ஒன்று சேரப்போகிறது.

‘இத்திக்கார கொம்பன்’ என்ற மலையாள படம் உருவாகி வருகிறது. மலையாளத்தில் கொம்பன் என்றால் ‘பெரிய தந்தம் உடைய யானை’ என்று அர்த்தம்.

‘இத்திக்கார’ என்பது கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலையில் கொல்லம் மாவட்டத்தில் ஓடும் ஒரு ஆறு. இந்த ஆற்றங்கரையில் இத்திகார என்கிற பெயரில் ஒரு கிராமமும் உண்டு.

ஆக, ‘இத்திக்கார கொம்பன்’ என்றால் அந்தப் பகுதியில் உலவும் காட்டு யானை என்று அர்த்தம் கொள்ளலாம்.

படக்குழுவினரும், “யானை குறித்த படம்” என்று அறிவித்து உள்ளனர். முழுதும் மலையாள இயக்குநர், ஒளிப்பதிவாளர் என கலைஞர்கள். நடிகர்களும் மலையாளிகளே.

அது அவர்களது விருப்பம்.

இதில் ஒரே ஒரு தக்ஷன் விஜய் என்கிற ஒரே ஒரு தமிழ் நடிகர் வருகிறார்.

நமக்கு மகிழ்ச்சிதான்.

ஆனால் இருக்கு, ‘தூத்துக்குடி செல்வம்’ என்கிற வில்லன் கதாபாத்திரம். இதையும் படக்குழுதான் அறிவித்து இருக்கிறது.

படத்தின் நாயகன், நாயகி உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களுக்கும் மலையாளிகளை தேர்வு செய்தவர்கள், இயக்குநர், இசை அமைப்பாளர் என தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரையும் மலையாளிகளாக தேர்வு செய்தவர்கள், வில்லன் கதாபாத்திரத்துக்கு மட்டும் தமிழரை வைத்து இருக்கிறார்கள். கதாபாத்திரமும் அக்மார்க் தமிழர்தான்.. அதாவது தூத்துக்குடி செல்வம்.

யானைகளை கடத்துவது குறித்த படம் என்று தெரிகிறது. இதில் கடத்தல்காரனாக தமிழரை – தமிழ் கதாபாத்திரத்தை – தமிழ் நடிகரை வைத்தே காண்பிக்கப்போகிறார்கள்.

“படம் வருவதற்கு முன்பே இப்படி நினைக்கலாமா” என்று சிலருக்குத் தோன்றலாம்.

படக்குழு அறிவித்த விசயங்களைப் பாரத்தாலே இதைப் புரிந்துகொள்ள முடியும். தவிர, மலையாளிகளின் கேஸ் ஹிஸ்ட்ரியைப் படித்துத்த தெரிந்துகொள்லலாமே.

மலையாளத்தை தாய் மொழியாகக் கொண்ட நடிகர்கள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள் என அனைவரையும் தமிழ்த் திரையுலகில் கொண்டாடுகிறோம்.  ஆனால் அதற்கு தலைகீழாக இருக்கிறார்கள் மலையாளிகள்.
– டி.வி.சோமு

 

Related Posts