வன்கொடுமைக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம்? திருமா சொல்வது சரியா?
கட்டுரையாளர்: டி.வி. எஸ். (எ) சோமு
“ உச்சநீதிமன்றம், ‘தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்களை, யாரும் பார்க்காத வகையில், நான்கு சுவர்களுக்குள் வைத்து அவமானப்படுத்தினால் அது வன்கொடுமை ஆகாது!’ என்று தீர்ப்பு வழங்கிவிட்டது.. இது கொடுமை!’ என்று வி.சி.க.த லைவர் திருமாவளவன் உள்ளிட்ட சில அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் கொந்தளிப்பதைப் பார்க்க முடிகிறது.
உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த, தாழ்த்தப்பட்ட பெண் ஒருவர், தனது நிலத்தை ஹிதேஷ் வர்மா என்பவர் ஆக்கிரமித்துள்ளதாகவும், இது குறித்து நியாயம் கேட்கைச் சென்றபோது, சாதிப் பெயரைச் சொல்லி அவமானப்படுத்தியதாகவும் உச்சநீதிமன்றத்தை அணுக, இது குறித்த வழக்கில், மேற்கண்டவாறு தீர்ப்பளிக்கப்பட்டதாக விமர்சிக்கப்படுகிறது.

‘ஒருவர் தனித்திருக்கும்போது, அவரை கொலை செய்யலாம், கொள்ளையடிக்கலாம்!’ என்று.. நீதிபதிகள் மட்டுமல்ல.. யாருமே சொல்லமாட்டார்கள். அப்படித்தான் சாதீய வன்கொடுமையும். அதை எந்த சூழலிலும் ஏற்க இயலாது.
நீதிபதிகளும், இப்படிச் சொல்லவில்லை.
“ சம்பவம் கட்டடத்தின் நான்கு சுவர்களுக்குள் வீட்டில் நடந்த ஒன்றாகும். அந்த நேரத்தில் பொதுமக்களில் எந்தவொரு உறுப்பினரும் இருந்ததாக எப்ஐஆரில் கூறப்படவில்லை.” என்று தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அதாவது, ‘சாட்சிகள் இல்லாத வீட்டின் நான்கு சுவர்களுக்குள் நடந்ததாக கூறப்படுகிறது’ என்பதை நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், ‘நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ள சொத்துக்களை வைத்திருப்பது தொடர்பானதாக இருதரப்புக்குமான பிரச்சனை உள்ளது’ என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
இதிலிருந்து, ‘நில விவகாரத்தை மனதில் வைத்து, கொடுக்கப்பட்ட பொய்ப்புகார்’ என்று நீதிபதிகள் நினைத்திருப்பதை புரிந்துகொள்ள முடியும்.
வன்கொடுமை புகார்களில் பல பொய்யாக கொடுக்கப்பட்டவை என்று ஏற்கெனவே பலமுறை புள்ளி விபரங்கள் வெளியாகி உள்ளன என்பதையும் பார்க்க வேண்டும்.
தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் வார்த்தைகள், வேறு அர்த்தத்தைக் கொடுத்துவிட்டனவா அல்லது (மொழிபெயர்ப்பில்) தவறாக புரிந்துகொள்ளப்பட்டனவா என்பது தெரியவில்லை.
சுருக்கமாகச் சொல்லப்போனால், ‘சாட்சிகள் இல்லை… தவிர இரு தரப்புக்கும் ஏற்கெனவே நிலத் தகராறு உள்ளதால் பொய்ப் புகாராக இருக்கலாம்’ என்பதே நீதிமன்றத்தின் தீர்ப்பாக இருக்கும்.
யாரும் யாருடைய நிலத்தை ஆக்கிரமித்தாலோ மோசடி செய்தாலோ நிச்சயமாக கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும்.
அதே நேரம், விவகாரத்துக்குள்ளான இரு தரப்பினர் கூறும் சாட்சியமற்ற புகார்களை ஏற்க வேண்டியதில்லை.
சிலர், ‘யாரும் இல்லாத சூழலில் சாட்சி இன்றி கொலை செய்தாலோ, கொள்ளை அடித்தாலோ, பலாத்காரம் செய்தாலோ தவறில்லையா’ என்று கேட்கிறார்கள்.

அப்படி சாட்சிகள் இன்றி நடக்கும் கொலை, கொள்ளை, பலாத்காரங்களையும்கூட இதர ஆதாரங்களை வைத்து காவல்துறையினர் புலனாய்வு செய்து குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது நடந்துகொண்டுதான் இருக்கிறது.
குறிப்பிட்ட இந்த விவகாரத்தில், ஒருவர் சாதீய வன்கொடுமையுடன் பேசினாரா என்பதற்கான ஆதாரம் இல்லை.
கொலை, கொள்ளை, பலாத்காரம் ஆகியவற்றுடன் இப்படி, ‘சாட்சி இல்லை வன்கொடுமை புகார்’ என்பதையும் இணைப்பது சரியாக இருக்காது.
முன்பே குறிப்பிட்டது போல, ‘இப்படிப்பட்ட புகார்கள் பல பொய்யாகக் கொடுக்கப்டுகிறது’ என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.
அதற்காக, ‘தாழ்த்தப்பட்ட மக்களை, சாதியைச் சொல்லி இழிவுபடுத்தலாம்’ என்று நான் கூறவில்லை.
சாதி என பிரிப்பதே கேவலம். அதில் உயர்வு தாழ்வு என்பது அதனிலும் கேவலம்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகள் ( சலுகைகள் அல்ல.. உரிமைகள்) அனைத்தும் தரப்பட வேண்டும்.. அவர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர வேண்டும்!
அதே நேரம், வன்கொடுமை சட்டம் என்பதை, தங்களது பிற பிரச்சினைகளுக்கும் பயன்படுத்துவதை ஒடுக்கப்பட்ட மக்கள் தவிர்க்க வேண்டும். எல்லோரையும், எல்லா புகார்களிலுல் சொல்லவில்லை. வார்த்தைகளால் சாதியைச் சொல்லி ஏசுவது நடக்கவே செய்கிறது. அது குற்றமே.
ஆனால் பொய்ப்புகார்கள் கூடாது.
அது, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு,நியாயமாக அளிக்கப்படும் சட்ட ரீதியான உரிமைகளை- குறிப்பாக, வன்கொடுமை சட்டத்தை – எதிர்த்துப் பேசுவோருக்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.
தவிர, ஒரு தீர்ப்பு வெளியானால்.. அதை முழுதும் உள்வாங்கி ஊடகங்களிலோ, சமூக ஊடகங்களிலோ பதிய வேண்டும்.
அர்த்தம் மாறக்கூடாது.
இன்னொரு விசயம்.. சம்பவத்தின் உண்மைத்தன்மை மாறக்கூடாது.
கடந்த 2015ம் ஆண்டு, டில்லி அருகே உள்ள நொய்டா நகர் காவல் நிலையம் முன்பு ஒரு குடும்பம் நிர்வாணமாக நிற்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
உடனே, ‘காவல்துறையினர் அந்த குடும்பத்தை நடு ரோட்டில் வைத்து நிர்வாணப்படுத்திவிட்டனர்’ என்று இந்தியா முழுதும்.. இங்கே முகநூல் முழுதும் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த வீடியோவைப் பார்த்தவுடனேயே, ‘தகவல்களுக்குப் பொறுத்திருங்கள்.. இது காவல்துறையினர் செய்தது போல தோன்றவில்லை. சம்பந்தப்பட்டவர்களே தங்களை துகிலுரிந்திருக்கலாம்..’ என்று பதிவிட்டேன்.

உடனே பலரும், ‘நீ சாதி வெறியன்’ என்று முத்திரை குத்தினர்.
பிறகு உண்மை வெளியில் வந்தது. சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் உறுப்பினரே பெண்களின் ஆடையை அவிழ்த்து அதை போராட்டகரமானதாக நினைத்திருக்கிறார் என்பது தெரியவந்தது.
அதற்காக ஒட்டுமொத்தமாக, ‘காவல்துறையினர் அனைவரும் நல்லவர்கள். அவர்கள் எந்தக் குற்றமும் செய்யவதில்லை’ என்று சொல்லவில்லை.
குறிப்பிட்ட சம்பவத்திலும் உண்மைத் தன்மையை ஆராய்ந்து எழுத வேண்டும், அவசரப்பட்டு அபாண்டமாக பழிபோடக்கூடாது என்பதே என் கருத்து.
இன்னொன்றும் சொல்வார்கள்.. ‘நொய்டா சம்பவத்தைச் சொல்லி, ஒடுக்கப்பட்டவர்களே இப்படித்தான் என்கிறாயா…’ என்பார்கள் சிலர்.
நான் அப்படிச் சொல்லவில்லை. அந்த சம்பவத்தில் நாம் எப்படி அவசரப்பட்டோம் என்பதைக் குறிப்பிடவே இதைக் கூறினேன்.
சாதி, மதம், நாடு கடந்து எத்தனையோ சம்பவங்களில் ஊடகங்கள், சமூக ஊடகர்கள் அவசரப்படுகிறார்கள்.
சமீபத்திய டில்லி தீர்ப்பிலும் அப்படி அவசரப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது.
உச்சநீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களின் தீர்ப்புகள் விமர்சனத்துக்கு உட்பட்டவையே. நான் குறிப்பிடுவது இந்தத் தீர்ப்பில் மட்டுமே..!
மீண்டும் சொல்கிறேன்..
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு காலம் காலமாக அநீதி இழைக்கப்பட்டதன் பரிகாரமாகவே அவர்களுக்கான சிறப்பு சட்டங்கள், இட ஒதுக்கீடு அளிக்கப்படுகின்றன. இன்றும் அவர்கள் அவமதிப்பது தொடர்கிறது. ஆகவே அவர்களுக்கான சிறப்பு சட்டங்கள், இட ஒதுக்கீடு தொடர வேண்டும்.
அதே நேரத்தில், தொடர்பில்லா விவகாரங்களிலும் சாதியை இழுப்பது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நியாயமான உரிமைகள் மீது கேள்விகள் வைப்போருக்கே சாதகமாக முடியும்!
இதை அனைவரும் உணர வேண்டும்!
(கட்டுரையாளர் ஊடகர், அரசியல் விமர்சகர், சமூக ஆர்வலர். இக்கட்டுரை குறித்த கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன – ஆசிரியர், தமிழன் குரல்)

