சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்: திரைவிமர்சனம்: நிஜமான உலகத் திரைப்படம்!
ஹாலிவுட் படங்கள் என்றாலே பிரமிக்க வைக்கும் சண்டைக் காட்சிகள், துப்பறிதல், காதல் காட்சிகள் என்றுதான் அர்த்தப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.
எதார்த்தத்தை – சுடும் நிஜத்தைச் சொல்லும் படங்களும் உண்டு.
ஆம்…
பலரின் கனவு தேசமான அமெரிக்காவில், இன்றளவும் நடக்கும் குழந்தைகள் கடத்தலை அதிரவைக்கும்படி சொல்லி இருக்கிறது, சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் திரைப்படம்.
12 வயது சிறுவன் ஜீசஸ், மெக்சிகோ நாட்டில் ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வருகிறான். வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி. தன்னுடைய பெயரை ஜீசஸ் என்று கைகளில் பச்சை குத்தி இருக்கிறான்.
அவனுக்கு இருக்கும் ஒரே கனவு, கால்பந்தாட்ட வாரராக உலகை வலம் வர வேண்டும் என்பதுதான். மிகப்பெரிய மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் மத்தியில், தான் கால் பந்து விளையாடுவதாக நினைத்துப் பார்ப்பான்.
ஆனால் நடப்பதோ வேறு.
குடும்ப வறுமை.. ஆகவே அவனை, அமெரிக்க புரோக்கரிடம் விற்று விடுகிறார் தந்தை. இப்படி ‘வாங்கப்பட்ட’ சிறுவர்கள், அமெரிக்கவுக்கு கடத்திச் செல்லப்பட்டு அங்கு கொத்தடிமைகளாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.
இதன்படி, சிறுவன் ஜீசஸை மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு அழைத்து வருகிறான் அந்த புரோக்கர்.
தான் ஒரு மிகப் பெரிய புட்பால் கோச்சிங் சென்டரில் சேர்ந்து கால்பந்து வீரனாக போவதாக நினைத்து வருகிறான் ஜீசஸ்.
அமெரிக்கவில் லாஸ் ஏன்ஜெல்ஸ் நகரில் இருக்கும் ஒரு மர்மமான, மறைவான கொத்தடிமை கூடத்தில் ஜீஸஸ் விற்கப்படுகிறான்.
வெளியே பாழடைந்த தேவாலயம் போல இருக்கும் அந்த பிரம்மாண்ட கட்டிடத்தின் உள்ளே மிகப்பெரிய தையல் கூடம் செயல்படுகிறது. அங்கு துணிகளை தைத்துக் கொண்டிருக்கும் அந்த கொத்தடிமை கூடத்தில் இருப்பவர்கள் அனைவருமே கடத்தி வரப்பட்ட . குழந்தைத் தொழிலாளர்கள்தான்.
அவர்கள் அங்கே அடைத்து வைத்து ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைப்பைச் சுரண்டுகிறது ஒரு கும்பல்.
சிறுவன் ஜீசஸும் அங்கே சிக்குகிறான். பல முறை தப்பிக்க நினைத்து சிக்கி, சவுக்கடி வாங்கி, உடல் முழுவதும் ரத்த காயத்துடன் சாவின் விளிம்புக்கே செல்வது வழக்கமாகிவிட்டது. ஆனாலும் மீண்டும், மீண்டும் கால்பந்தாட்ட ஆசை உந்தவே, மீண்டும் மீண்டும் தப்பிக்கும் முயற்சியைத் தொடர்கிறான்.
அவன் தப்பித்தானா.. அவனுடைய கால்பந்து கனவு நிறைவேறியதா என்பதுதான் மீதிக்கதை.
சிறுவன் ஜீசஸாக நடித்திருக்கும் ஆரி லோபஸ் அற்புதமான நடிப்பு!
கிராமத்தில் சக சிறுவர்களுடன் கால்பந்து விளையாடும்போதே, பெரிய மைதானத்தில் விளையாடுவதாக கனவு காண்பது… சித்திரவதைக் கூடத்தில் சிக்கிய பிறகு கண்களில் ஆத்திரமும் ஆதங்கத்தையம் வெளிப்படுத்துவது, தப்பிக்கும் முயற்சியில் காட்டும் பதட்டம்.. ஆர்வம்.. சிறப்பான நடிப்பு.
அவர் அழும்போது எல்லாம் நமக்கும் கண்கள் கசிகின்றன.. அவர் தப்பிக்க நினைக்கும்போதெல்லாம்.. ஆகா சிக்கிவிடாமல் தப்பித்து விட வேண்டுமே என நம் உள்ளம் பதைபதைக்கிறது.
இதர கதாபாத்திரங்களில் நடித்து இருக்கும் எலனா, ரெனாட்டா வகா, அல்ஃபிரெடோ காஸ்ட்ரோ, பவுலினா கைடான் என்றுஅனைவருமே தங்கள் பாத்திரம் அறிந்து சிறப்பான நடிப்பை அளித்து உள்ளனர்.
சித்திரவதை கூடத்தின் முதலாளியாக நடித்திருக்கும் எல்ஜெபின், அவனது அடியாளான சீசர், அவ்வப்போது வந்து பெண்களை பாலியல் தேவைக்காக இழுத்துச் செல்லும் நிக்கோல் ஆண்ட்ரூஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸ் டிபார்ட்மெண்டில் வேலை செய்யும் சார்ஜெண்ட்டும், உதவி சார்ஜண்டாக நடித்த இருவருமே தங்களுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
அதிலும் அந்த பெண் சார்ஜன்ட் கடைசியில் சிறுவனை காப்பாற்றும் காட்சியில் நம்மை அறியாமல் ஆனந்தக் கண்ணீரே வந்துவிடுகிறது.
அலெஹாண்ட்ரோ சாவேஸின் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது. குறிப்பாக, மெல்லிய ஒளியுடன் கூடிய அந்த சித்திரவைக்கூடம்… ஒவ்வொரு கோணமும் நமது பதற்றத்தை அதிகரிக்கிறது.
அதே போல லிசா ஜெரார்டின் இசை படத்துக்கு பலம். சிறுவன் தப்பிக்கும் காட்சியில் பதட்டத்தை கூட்டுகிறது பின்னணி இசை.
அமெரிக்கா என்றாலே பணக்கார நாடு, மாசு மருவற்ற நாடு என்றெல்லாம் நினைத்துக்கொண்டு இருப்பவர்களே மிக அதிகம். அங்கும் குழந்தைக் கடத்தல், குழந்தைக் தொழிலாளர்கள், கொத்தடிமை கொடுமை எல்லாம் இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காண்பித்து இருக்கிறார் இயக்குநர் மோகித் ராம்சந்தானி.
படம் முடிந்த பிறகு, சொல்லப்படும் நிஜ புள்ளி விவரங்களும், பத்திரிகை தகவல்களும் இன்னும் அதிரவைக்கின்றன.
நிஜமான அதிர்வலைகளை ஏற்படுத்திய பிரம்மாண்டமான படம் என்றால் இதுதான்.
RATING : 4.6 / 5
– டி.வி.சோமு

