“வாரிசுகள் ஜெயிப்பது கடினம்!” ‘சீசா’ பட விழாவில் இயக்குநர் பேரரசு!

“வாரிசுகள் ஜெயிப்பது கடினம்!”  ‘சீசா’ பட விழாவில் இயக்குநர் பேரரசு!

விடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் கே.செந்தில் வேலன் தயாரித்திருக்கும் படம் ‘சீசா’. அறிமுக இயக்குநர் குணா சுப்பிரமணியம் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தின் கதையை தயாரிப்பாளர் செந்தில் வேலன் எழுதியிருக்கிறார். இதில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, மற்றொரு நாயகனாக நிஷாந்த் ரூசோ நடித்திருக்கிறார். நாயகியாக பாடினி நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆதேஷ் பாலா, மூர்த்தி, தயாரிப்பாளர் செந்தில் வேலன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

சரண் குமார் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பெருமாள் மற்றும் மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். வில்சி ஜெ.சசி படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

வரும் ஜனவரி 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘சீசா’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா டிசம்பர் 15 ஆம் தேதி, சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் கஸ்தூரி ராஜா, பேரரசு, மைக்கேல், தயாரிப்பாளர் கே.ராஜா உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் இயக்குநர் பேரரசு பேசுகையில், “சிறிய படங்களை வாழ்த்துவதற்கு பெரிய மனசு வேண்டும். அப்படி இந்த படத்தை வாழ்த்த நேரம் ஒதுக்கி இங்கு வந்திருக்கும் கே.ராஜன் சார், கஸ்தூரி ராஜா சார் ஆகியோருக்கு நன்றி. திரையுலகில் வாரி என்று இருக்கு. அரசியலில் வாரிசு ஜெயிப்பது ஈஸி, பணம் இருந்தால் போதும். ஆனால், திரையுலகில் வாரிகள் ஜெயிக்க திறமை வேண்டும். அறிமுகம் எளிமையாக இருக்கும், ஆனால் நிலைத்து நிற்க திறமை தான் வேண்டும்.

கஸ்தூரி ராஜா சாரின் மகன்கள் என்பதால் செல்வராகவன் இயக்குநராகவும், தனுஷ் நடிகராகவும் அறிமுகம் ஆகலாம். ஆனால், அவர்கள் இன்று முன்னணியில் இருப்பதற்கு அவர்களின் திறமை தான் காரணம். அதேபோல், திறமை மட்டும் போதாது ஜெயிக்க வேண்டும் என்ற வெறி வேண்டும். ஒரு படம், இரண்டு படங்களுக்கு பிறகு அப்பா பெயரை மறந்துவிட்டு, நம்ம ஜெயிக்க வேண்டும், பெரிய இடத்துக்கு போக வேண்டும் என்ற வெறி வேண்டும், அந்த வெறி இருந்தால் தான் ஜெயிக்க முடியும். அதனால், சினிமாவில் வாரிசுகள் ஜெயிப்பது சாதாரண விசயம் இல்லை, அப்படிப்பட்ட இரண்டு பேரை கொடுத்த கஸ்தூரி ராஜா சாருக்கு நன்றி.

சீசா என்பது ஒரு விளையாட்டு, அது அனைவருக்கும் தெரியும். நிறைய பூங்காக்களில் சீசா இருக்கும். விளையாட்டுக்களிலேயே சிறந்த விளையாட்டு சீசா தான். மற்ற விளையாட்டுகளில் தோற்பவர்களை பார்த்து ரசிப்பார்கள். ஆனால், இந்த விளையாட்டில் தோற்பவரை பார்த்து வெற்றி பெற்றவர் ரசிப்பர், அதே சமயம், வெற்றி பெற்றவர் தோற்பார், ஏறும், இறங்கும். அப்படிப்பட்ட விளையாட்டின் பெயரை தலைப்பாக வைத்து இயக்குநராக அறிமுகமாகும் குணாவுக்கு இனி எல்லாமே ஏற்றம் தான். அவரிடம் எனக்கு பிடித்த விசயம் கடவுள் பக்தி. இயக்குநராக முயற்சிக்கும் போது, ஒரு தயாரிப்பாளரை சந்தித்து கதை சொல்லி, அவரை பல வருடங்களாக பின் தொடர்ந்து வாய்ப்பு பெற்று படம் செய்தால் அது முயற்சி. ஆனால், எங்கேயோ இருக்கும் டாக்டர் செந்தில் வேலனை ஒரு நோயாளியாக சந்திக்க, இவரைப் பற்றி அவர் விசாரித்து தெரிந்துக்கொண்டதோடு அல்லாமல் அவருக்காக படம் தயாரிக்க முன் வந்திருக்கிறார் என்றால் இது முயற்சி அல்ல கடவுள் செயல். குணா பேசும் போது சிவனாக செந்தில் வேலனை பார்ப்பதாகவும், சக்தியாக சுகுணா மேடமை பார்க்கிறேன் என்றார். அது உண்மை தான், நமக்கு உதவியவர்களை தெய்வமாக பார்ப்பவர்கள் என்றுமே தோற்க மாட்டார்கள். அதனால் குணா நிச்சயம் வெற்றி பெறுவார்.

தயாரிப்பாளர் செந்தில் வேலன் ஒரு மருத்துவராக இருந்தாலும் அவரிடம் ஒரு கதையாசிரியர் இருந்திருக்கிறார், ஒரு பாடலாசிரியர் இருந்திருக்கிறார். நம்ம அனைவரிடமும் ஒரு கதை இருக்கும், ஆனால் அதை அவர்கள் கதையாக பார்க்க மாட்டார்கள், பிரச்சனையாக பார்ப்பார்கள். ஆனால் டாக்டர் தான் அவரது பிரச்சனைகளை கதையாக பார்த்திருக்கிறார். நமக்குள்ள இருக்கும் பிரச்சனைகளை கதையாக நினைத்து பார்த்தால், மன அழுத்தம் போன்றவை வராது. எனவே, நமக்கு நல்ல கதையாசிரியர் மற்றும் பாடலாசிரியர் கிடைத்திருக்கிறார். நானும் தான் பாடல்கள் எழுதுவேன், ஆனால் நான் பல வருடங்களாக சினிமாவில் இருந்து, அதற்கான திறமைகளை வளர்த்துக்கொண்டு எழுதினேன்.ஆனால், செந்தில் வேலன் சார் வேறு ஒரு துறையில் இருந்து பாடல் எழுதியிருப்பது பெரிய விசயம். கதை எழுதுவது ஈஸி, பாடல்கள் எழுதுவது கஷ்ட்டம். அதிலும், அப்போது இருந்த இசையமைப்பாளர்களின் இசைக்கு பாடல்கள் எழுதுவது சுலபமாக இருந்தது. ஆனால், தற்போதைய இசையமைப்பாளர்களின் இசைக்கு பாடல்கள் எழுதுவது மிகவும் கஷ்ட்டம், அந்த அளவுக்கு அவர்கள் இசை எக்குதப்பாக இருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில், மிக அருமையான பாடல்கள் எழுதியிருக்கிறார் என்றால் செந்தில் வேலன் சாரை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். அதில் ஒரு வரி சிறப்பாக இருந்தது. இந்த பூவுலகத்தில் முதல் தலைவன் தமிழன் தான், மிக அற்புதமான வரி.

படத்தின் கதாநாயகன் நட்டி சாரை பற்றி சொல்ல வேண்டும் என்றால், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததை ஒப்பிட்டு சொல்லலாம். விஜய் சாருக்கு சம்பளம் 100 கோடி, 200 கோடி என்று சொல்கிறார்கள், அந்த சம்பளத்தை விட்டுவிட்டு அவர் இன்று அரசியலுக்கு வந்திருக்கிறார். அதுபோல் தான் நட்டியும். அவர் பெரிய கேமராமேன், அவர் இந்தி சினிமாவுக்கு சென்றால் அவருக்கு பல கோடி சம்பளம் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால், அதை விட்டுவிட்டு நடிப்பு மீது உள்ள ஆர்வத்தால் நடிக்க வந்திருக்கிறார். இன்றும் 5 கோடி ரூபாய் கொடுத்து ஒளிப்பதிவு செய்ய கூப்பிட்டாலும், 50 லட்சம் ரூபாய் கொடுத்து நடிக்க கூப்பிட்டால் அதுக்கு தான் போகிறார். என்னடா மனுஷன் இவ்வளவு வாய்ப்புகளை விட்டுவிட்டு நடிக்க வருகிறாரே, என்று யோசித்திருக்கிறேன். பிறகு தான் தெரிந்தது அவரது மனசுக்கு பிடித்ததை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். வெறும் பணத்தை மட்டுமே பார்க்காமல் மனதுக்கு பிடித்த விசயத்தை செய்ய வேண்டும் என்பதால் அவர் தொடர்ந்து நடிக்கிறார். அதேபோல் அவரிடம் பிடித்த விசயம், பெரிய இயக்குநர், சிறிய இயக்குநர், பெரிய தயாரிப்பாளர் என்று பார்க்க மாட்டார், யார் அவரை அணுகினாலும் கதை நன்றாக இருந்தால் நடிப்பார். அவர் இந்த கதைக்காக மட்டுமே நடித்திருக்க மாட்டார், இயக்குநர் குணாவின் நல்ல குணத்தை பார்த்து தான் நடிக்க சம்மதித்திருப்பார், என்று நினைக்கிறேன்.

இந்த படக்குழுவை பார்க்கும் போது ஜெயிக்க வேண்டும் என்ற வெறி தெரிகிறது. திறமை உள்ள இயக்குநருக்கு வாய்ப்பு கொடுத்து ஜெயிக்க வைக்க வேண்டும் என்ற வெறி தயாரிப்பாளரிடம் தெரிகிறது. அதேபோல், படத்தை நல்லபடியாக இயக்கி தயாரிப்பாளருக்கு வெற்றி கொடுக்க வேண்டும் என்ற வெறி இயக்குநர் குணாவிடம் தெரிகிறது. படத்தில் நடித்த ரூசோ, பாடினி, ஆதேஷ் பாலா உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். எனவே, இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, மொத்த குழுவும் அடுத்தக் கட்டத்திற்கு செல்ல வேண்டும். தயாரிப்பாளர் செந்தில் வேலன் அடுத்தடுத்து படங்கள் தயாரிக்க வேண்டும், எங்களைப் போன்றவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.