பிளாக்: விமர்சனம்

பிளாக்: விமர்சனம்

சென்னை புறநகரில் கடற்கரையோரம் உள்ள உப்பளப்பாக்கம் பகுதியில் வசந்த் – ஆரண்யா இளம் தம்பதியினர் தாங்கள் புதிதாக வாங்கியிருக்கும் வீட்டில் சில நாட்கள் தங்கும் முடிவுடன் செல்கிறார்கள். அந்த பகுதியில் வேறு யாரும் குடிபுகாத அந்தத் தொடர் வீடுகள் பகுதிக்கு அவர்கள் சென்ற இரவு, பல அமானுஷ்ய சம்பவங்Kள் நடக்கின்றன.

அந்த இடத்தை விட்டுத் தப்பிக்க நினைத்தாலும், மறுபடி மறுபடி அங்கேயே வந்து சிக்கிக்கொள்கின்றனர். அச்சு அசலாக அவர்களைப் போன்ற இரு உருவங்கள் அங்கே இருப்பதையும் பார்க்கின்றனர்.இந்த திகில் நிகழ்வுகளைத் தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதே கதை.

கணவன் வசந்த் கதாபாத்திரத்தில் ஜீவாவும், மனைவி ஆரண்யாவாக பிரியா பவானி சங்கரும் நடித்து உள்ளனர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, சவாலான கதாபாத்திரத்தில் தோன்றி இருக்கிறார் ஜீவா. தன்னைச் சுற்றி நடப்பதை புரிந்துகொள்ள முடியாமல் குழம்புவது, அடுத்து என்ன நடக்குமோ என்று திகிலடித்துக் கிடப்பது என பாத்திரம் அறிந்து சிறப்பான நடிப்பை அளித்து இருக்கிறார்.

பிரியா பவானி சங்கரும் சிறப்பாக நடித்து உள்ளார். பயம், பதட்டம் என பல்வேறு உணர்வுகளை அருமையாக வெளிப்படுத்தி உள்ளார்.

இளம் வயது கதாபாத்திரத்தில் வில்லத்தனமான நடிப்பையும், முதிர்ந்த வயது தோற்றத்தில் பரிதாப நடிப்பையும் சிறப்பாக அளித்திருக்கிறார் விவேக் பிரசன்னா,ஷாரா, யோகி ஜேபி, சிந்தூரி ஆகியோருக்கு சிறிய கபாதாத்திரம்தான்.

ஒரே குடியிருப்பு பகுதிதான் களம். ஆனாலும் நம்மை சோர்வடையச் செய்யாமல், பல்வேறு கோணங்களில் படம் பிடித்து திகிலை தருகிறது கோகுல் பினோயின் ஒளிப்பதிவு. குறிப்பாக இரவுநேரக் காட்சிகள் அசரடிக்கின்றன.

பிலோமின் ராஜின் கச்சிதம்.

பின்னணி இசையில் சாம் சி.எஸ் மிரட்டுகிறார்.

1964-ம் ஆண்டு, 48 மணி நேரத்துக்கு முன், நிகழ்காலம் என மூன்று காலங்களில் கதை பயணிக்கிறது. கொஞ்சமும் குழப்பாமல் தெளிவான திரைக்கதையில் அசத்துகிறார் இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி.

மொத்தத்தில் திகில் பிரியர்களுக்கு ஏற்ற திரைப்படம்.