“ஹூம்… சினிமா பாடல்களையே நம்பிக் கிடக்கிறோம்…!”: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹைனா ஆதங்கம்!

“ஹூம்… சினிமா பாடல்களையே நம்பிக் கிடக்கிறோம்…!”: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹைனா ஆதங்கம்!

இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவருமான ஏ.ஆர்.ரெஹைனா சினிமாவையும் தாண்டி சுயாதீன பாடல்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் அவரது குரலில் சர்வதேச தரத்தில் லேட்டஸ்ட் ஆக உருவாகியுள்ள ஆல்பம் தான் ‘மாத்திக்கலாம் மாலை’.

இது குறித்து ஏ.ஆர் ரெஹைனா பேசும்போது “பிரபலமான ஹீரோக்களின் படங்களை பார்த்துவிட்டு தான் பாடல்கள் ஹிட் ஆகி வந்தன. ஆனால் இப்போது படங்களில் பாடல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகின்றது. பாடகர்கள், இசையமைப்பாளர்கள் நிறைய பேர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கான வருமானம் எங்கே இருக்கிறது ? உலகம் முழுவதும் சுயாதீன பாடல்கள் மூலமாக இசைக்கலைஞர்கள் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்கள். ஆனால் இங்கே தான் நாம் திரையுலகையை சார்ந்து அதை மட்டுமே நம்பிக்கொண்டே இரண்டாம் இடத்தில் இருக்கிறோம்.

பாடல் என்பது சினிமாவில் இருந்தால் என்ன, தனி ஆல்பமாக இருந்தால் என்ன ? ரசிகர்கள் எப்போதும் கேட்கத்தான் போகிறார்கள்.

இதில் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி ஒரு டீனேஜ் பெண் போல தான் பாடி இருக்கிறேன். கவிஞர் ருத்ரா இந்த பாடலை எழுதியுள்ளார். தோசை சுடுகின்ற வேகத்தில் பாடல் எழுதி விடுவார். ரம்யா இந்த ஆல்பத்தின் டிராக்கை பாடியுள்ளார். எமில் மிகத் திறமையானவர்.

அனிருத், ரஹ்மான் போன்று வரக்கூடியவர். எதனாலோ தெரியவில்லை அவரது திறமை வெளியே தெரியாமல் அமுங்கிக் கிடக்கிறது. அனேகமாக இதுபோன்ற சுயாதீன ஆல்பங்களில் அவரது பெயர் பெரிதாக வரும் என எதிர்பார்க்கிறேன்.. கனடாவில் அவர் பெரிய ஆளாக இருப்பது போல இங்கே இந்தியாவிலும், குறிப்பாக தென்னிந்தியாவிலும் வரவேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். மணி வி வி நாயர் இதை இயக்கியுள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கு நான் கூப்பிட்டதுமே உடனே ஓடோடி வந்த பாப் ஷாலினிக்கு நன்றி. அவர் சினிமாவில் பாடுவதற்கு முன்பாகவே நிறைய பாப் பாடல்கள் பாடியுள்ளார். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நான் நான்கு வரிகள் தான் முதலில் பாடினேன். அதைக் கேட்டு விட்டு ஏ.ஆர் ரஹ்மானிடம் இந்த குரல் யாருடையது முழு பாடலையும் பாட வையுங்கள் என்று கூறிவிட்டார். அதுவே எனக்கு ஒரு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்தது போன்றது. மணிரத்னம் படங்களில் நான் பாடிவிட்டால் என் பாடலை தூக்கக்கூடாது என விட்டுவிடுவார். அதன்பிறகு மாதேஷ் என்னை நம்பி ஒரு முழு பாடலை கொடுத்து ரசிகர்களுக்கு இன்னும் என்னை அடையாளம் காட்டினார்” என்றார்.

நடிகை கோமல் சர்மா பேசும்போது, “ஏ.ஆர்.ரெஹைனா பற்றி பேச வேண்டுமென்றால் சரஸ்வதியே கீழே இறங்கி வந்து பாடினால் எப்படி இருக்கும் அப்படித்தான் இருப்பார். ஒரு பக்கம் அவர் திறமையின் உச்சம் என்றால் இன்னொரு பக்கம் இந்த திரைத்துறையில் அவரை மதர் தெரசா என்று சொல்லலாம். ஒரு திறமையான கலைஞராக மட்டுமல்ல அற்புதமான மனிதராக, மனித நேயம் கொண்டவராகவும் அவரை பார்க்கிறேன். அவரை பார்த்து நான் மயங்கிய ஒரே விஷயம் என்றால் அவருடைய உதவும் குணம், அறக்கட்டளை பணி தான். இந்த ஆல்பம் மூலமாக கூட எத்தனை பேருக்கு நல்லது பண்ண முடியும் என்பதுதான் அவர் எண்ணம். அதைக்கூட விளம்பரப்படுத்தாமல் செய்து வருகிறார். பல பேருக்கு இந்த விஷயமே தெரியாது.

இந்த பாடலை கண்ணை மூடி கேட்கும்போது ஒரு சர்வதேச பாடகர் பாடியது போன்று இருக்கும். யாராலும் இந்த லெவலில் பாட முடியாது. அந்த அளவிற்கு இதை சர்வதேச ஆல்பம் என்றே சொல்லலாம். ஒரு ஆல்பமோ அல்லது படமோ பெரிதாக வரும்போது இந்த திரைத்துறைக்கு நிறைய பயன்கள் இருக்கின்றன. பெரிய வருமானங்களும் பல பேருக்கு வாய்ப்புகளும் கிடைக்கின்றன” என்று கூறினார்.