கோட்: தறிகெட்டு ஓடுதா? தள்ளாடுதா?
வழக்கம் போல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விஜய் நடித்த கோட் திரைப்படம், கடந்த செப்டம்பர் 5ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க, மீனாட்சி சவுத்ரி, சிநேகா, பிரசாந்த், பிரபு தேவா, ஜெயராம், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மோகன் வில்லனாகவும், கேமியோ ரோலில் சிவகார்த்திகேயனும் தோன்றி உள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தை அர்ச்சனா கல்பாத்தி தனது ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
படம் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது. இப்படம் முதல் நாள் ரூ.126.32 கோடியை வசூலித்தது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று, படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.288 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
முன்பு போல் இல்லாமல், படத்தின் வணிக வெற்றியை அனைவரும் தெரிந்துகொள்ளும் நிலையை இன்றைய இணைய வசதி ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி, Vishvaksenan என்பவர் தனது முகநூல் பக்கத்தில், “Goat எப்படி போகிறது என்று (தியேட்டர்கள் இருக்கை நிலையை இணையத்தில்) பார்த்தோம், செவ்வாய்க்கிழமை மதியம் எடுத்த தகவல் சேகரிப்பு. படம் வெளியாகி ஆறாவது நாளான செவ்வாய்கிழமையே தள்ளாடுகிறது. மாயாஜாலில் பல ஷோக்கள் பச்சை நிறத்தில் இருக்கின்றன,
அதாவது காத்தாடுகின்றன. பெரிய ஸ்டார்கள் படங்கள் பத்து நாளாவது ஹவுஸ்ஃபுல்லாக ஓடினால்தான் நல்ல வசூல் இருக்கும், இப்படி மாயாஜால், ஏஜியெஸ் (தயாரிப்பாளர்களின் சொந்த தியேட்டர்) போன்ற தியேட்டர்களிலேயே பச்சை நிறத்தில் காத்தாடுவது அவர்களுக்கு சரியானதல்ல.

