ரகு தாத்தா: விமர்சனம்
1960களின் இறுதி வருடங்கள்… இந்தித் திணிப்பு எதிர்ப்பு உச்சகட்டத்தில் இருந்த காலகட்டம்… வள்ளுவன் பேட்டை என்கிற சிறிய ஊரில் உள்ள மதராஸ் வங்கியில் பணியாற்றுகிறார் கயல்விழி பாண்டியன் என்கிற இளம் பெண்.
இந்தித் திணிப்புக்கு எதிராக போராடுபவர்.. ‘க.பாண்டியன்’ என ஆண் அடையாளத்தில் புரட்சிகர கதைகளை படைப்பவர். அதே ஊரில் மின்துறையில் பணிபுரியும் இளைஞர் தமிழ்ச்செல்வன்.
கயல்விழி போலவே, தன்னையும் முற்போக்காளனாக காண்பித்துக் கொள்கிறார் தமிழ்ச்செல்வன்.
கயல்விழியின் தாத்தாவுக்குப் புற்றுநோய் என்பது தெரியவர, கயல்விழி உடனடியாக திருமணம் செய்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். ஆகவே தன் கருத்துக்களோடு ஓரளவு இயைந்து போகும் தமிழ்செல்வனைத் திருமணம் செய்துகொள்ள தீர்மானிக்கிறார். நிச்சயதார்த்தமும் நடக்கிறது.
ஆனால் தமிழ்ச்செல்வன் குறித்து அதிர்ச்சிகரமான விசயம், கயல்விழிக்குத் தெரியவருகிறது.
அதன் பிறகு என்ன நடந்தது என்பதை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறது ரகுதாத்தா திரைப்படம்.
கயல்விழி பாண்டியனாக, படு சுட்டியாக நடித்து உள்ளார் கீர்த்தி சுரேஷ். “இந்தி தெரியாது போயா” என்று அதிரடியாக பேசுவது, போராட்டம் நடத்துவது.. ஆணாதிக்கத்துக்கு எதிராக சாட்டையைச் சுழற்றுவது என சிறப்பாக நடித்து இருக்கிறார்.
அவர் மீது உள்ள ஆசையால் தன்னை முற்போக்குவாதியாக காண்பித்துக் கொள்ளும் நாயகனாக வருகிறார் ரவீந்திரவிஜய். சொல்லவும் முடியாமல் சொல்லாமல் இருக்கவும் முடியாமல் தவிப்பது.. தனது ஆதங்கத்தை டைரியில் கொட்டித் தீர்ப்பது என இயல்பாக நடித்து உள்ளார்.
தாத்தாவாக வரும் எம்.எஸ். பாஸ்கர், வழக்கம்போல இயல்பாக – சிறப்பாக நடித்து உள்ளார். பேத்தியின் முற்போக்கான – நியாயமான கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவிப்பது, தனது உடல நிலை குறித்து தெரிந்ததும் குமைந்துபோவது என அற்புதமான நடிப்பு.
இஸ்மாத் பானு, தேவதர்ஷினி, ஜெயக்குமார், ஆனந்த் சாமி என அனைவருமே தங்கள் பாத்திரம் அறிந்து நடிப்பை அளித்து உள்ளனர்.
பீரியட் பிலிம் என்பதை, அற்புதமாக நமக்குள் கடத்தி இருக்கிறது ஒளிப்பதிவாளர் யாமினி யக்ஞமூர்த்தியின் கேமரா. ஷான் ரோல்டனின்இசையும் டி.எஸ். சுரேஷின்படத்தொகுப்பும் படத்துக்கு பலம்.
பத்திரிகை போஸ்டர்கள், ஸ்கூட்டர், விளம்பர போர்டுகள், ஆடை… என எல்லாவற்றிலும் கவனம் செலுத்தி அந்தக் காலத்துக்கே கொண்டு சென்று இருக்கிறார்கள். ஆடை வடிவமைப்பாளர், கலை இயக்குநர் ஆகியோருக்கு பாராட்டுகள்.
இவை எல்லாவற்றையும் கற்பனை செய்து, அதை நிஜத்தில் கொண்டு வந்த இயக்குநர் சுனில் குமார்… பாராட்டுகள், பாராட்டுகள்.
(“ஆணுக்கு திருமண வயசு 18, பெண்ணுக்கு 15 வயசு” என்பது போன்ற வசனங்கள் மூலமும், அந்த காலகட்டத்தை கொண்டுவந்திருக்கிறார்கள்.. சபாஷ்!)
சீரியஸ் கதையை, நயமான நகைச்சுவையுடன் கொண்டு சென்றது சிறப்பு. வங்கி மேலாளர் ராஜீவ் ரவீந்திரநாதன் பேசும் காட்சி, எம்.எஸ் பாஸ்கரின் நகைச்சுவை பன்ச்சுகள் அருமையாக உள்ளன.
இந்தித் திணிப்பு, ஆணாதிக்கம், வரதட்சணை என எதிர்க்க வேண்டிய விசயங்களை படம் முழுதும் எதிர்த்தாலும், அதை வலிந்து திணிக்காமல் இயல்பாக சொன்ன விதத்தில் இயக்குநர் சுமன் குமார் ஜெயித்திருக்கிறார்.
அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
