“எனக்கு தாயும், பேயும் அந்த நடிகைதான்!” : டெவில் விழாவில் மிஷ்கின்
ஹெச் பிக்சர்ஸ் ஹரி, டச் ஸ்கிரீன் ஞானசேகர் ஆகியோர் தயாரிக்க, ‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யா உருவாக்கத்தில் விதார்த், பூர்ணா, அருண், மிஷ்கின் மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் ‘டெவில்’. சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் தேவி பாரதி எழுதிய “ஒளிக்குப் பிறகு இருளுக்கு அப்பால்” என்னும் நாவலைத் தழுவி, திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார்.
பிப்ரவரி 2ல் வெளியாகவிருக்கும் நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் இயக்குநர் மிஷ்கின் பேசும் போது, “சில செய்திகளில் நான் என் தம்பியை தூக்கிப் பிடிப்பதாக எழுதி இருந்தார்கள். அந்த செய்தியைப் படித்து நான் வெட்கப்பட்டேன். என்னிடம் உதவி இயக்குநாக சேர வேண்டும் என்று கேட்ட என் தம்பியைப் பார்த்து செருப்பைத் தூக்கி எறிந்தவன். பிறகுதான் பார்த்திபன் சாரிடம் உதவி இயக்குநராக சேர்ந்தான். அதன் பிறகே அவனை என்னுடன் சேர்த்துக்கொண்டேன்.
தவிர, வாழ்க்கையில் அதிகமாக கஷ்டப்பட்ட நபர்களால் மட்டுமே சினிமாவை நேசித்து காதலிக்க முடியும். கஷ்டங்களை அனுபவிக்காமல் வளரும் ஒருவரால் சினிமாவிற்கு உண்மையாக இருக்க முடியாது என்பது என் எண்ணம். அதனால் தாய் தகப்பன் இல்லாத வாழ்க்கையில் கொடுமையான சோகத்தை அனுபவித்த இளைஞர்களை நான் உதவி இயக்குநராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவேன்” என்றார்.
மேலும், “நடிக்கும் போது சுயத்தை இழப்பவர்கள் தான் சிறந்த நடிகர் நடிகைகள் என்பேன்.. பூர்ணா அந்த மாதிரியான நடிகை. சவரக்கத்தி படத்தில் என் அம்மாவின் கதாபாத்திரத்தை தான் எழுதியிருந்தேன். அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தது பூர்ணா. அவரது குழந்தையின் காலை எடுத்து என் தலையில் வைத்துக் கொண்டேன்.. அது போல் தான் பூர்ணாவின் காலையும்..!
பூர்ணா என் வாழ்க்கையில் மிக முக்கியமான பெண். அவள் வயிற்றில் நான் குழந்தையாகப் பிறக்க விரும்புகிறேன். என்னை ஒரு தாய் போல் அவள் பார்த்துக் கொள்வாள். என்னையும் அவளையும் குறித்து சிலர் தவறாகப் பேசுவார்கள். அவள் எனக்குத் தாய் போன்றவள். என் குழந்தையை விட அவள் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்…. அவள் சாகும் வரைக்கும் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும். நடிப்பில் அவள் ஒரு பேய்” என்று பேசினார் மிஷ்கின்.

