சென்னையில் போராட்டம் நடத்த தடை காவல் ஆணையர் அதிரடி..!
சென்னை; இன்னும் 15 நாள்களுக்கு சென்னையில் போராட்டம் நடத்த காவல்துறை தடை விதித்துள்ளது.
சென்னையில் எந்த அரசியல் கட்சிகளுக்கும், அமைப்பினருக்கும் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது என்று சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டம், வன்முறை சம்பவங்கள் நடந்துவரும் நிலையில் வடசென்னையின் வண்ணாரப்பேட்டைப் பகுதியிலும் தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
இந்தநிலையில், சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ‘பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடத்தக்கூடிய போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மனித சங்கிலி, உண்ணாவிரதம், பொதுகூட்டம் உள்ளிட்டவை நடத்த எந்த அரசியல் கட்சியினருக்கும் மற்றும் அமைப்புக்கு அடுத்த 15 நாட்களுக்கு காவல்துறை அனுமதி வழங்காது என காவல் ஆணையர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வள்ளுவர் கோட்டம், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை, ராஜரத்தினம் மைதானம் போன்ற இடத்தில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த திட்டம் போட்ட கட்சியினர் மற்றும் அமைப்புகளுக்கு காவல் துறை அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வரும் 28-ஆம் தேதி இரவு முதல் மார்ச் 14 ஆம் தேதி இரவு வரை அனுமதி மறுக்கப்படும் என இந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் நடக்ககூடிய மதம் சார்ந்த நிகழ்ச்சி, திருமண ஊர்வலம், மாரத்தான் போன்ற நிகழ்ச்சிகள் நடத்த எந்த தடையும் இல்லை. என காவல் ஆணையர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.