சூரரைப் போற்றலாமா? ; விமர்சனம்
‘ஏழைகளும் ஏரோப்ளேனில் பறக்க வேண்டும்!’ என்கிற லட்சியம் கொண்டவர், தனது குறிக்கோளில் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதே கதை.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள சிறு கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யா. அப்பா, ஆசிரியர் பூ ராமு. பொது விசயங்களில் நாட்டமுள்ள அவர், கிராம்த்துக்கு தேவையான மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை, அரசுக்கு மனு எழுதிப் போட்டு பெற்றுத் தருகிறார். ஆனால் அவரால், எத்தனை மனு போட்டும், சோழவந்தானில் எக்ஸ்பிரஸ் ரயில்களை நிறுத்த முடியவில்லை.
இதையே போராட்டம் நடத்தி சாதிக்கிறார் சூர்யா. இது அப்பா ராமுவுக்குப் பிடிக்கவில்லை. இருவரிடையே கருத்து மோதல் ஏற்படுகிறது.
சூர்யா தேசிய பாதுகாப்பு அகாடமியில் ராணுவப் பயிற்சி பெற்று பணிபுரிகிறார். சில வருடங்களுக்குப் பிறகு ஓய்வுபெற்று சொந்த ஊருக்கு வருகிறார்.
தன்னைப் போன்று இருக்கும் ஏழைகள், விமானத்தில் பறக்க கனவு காண்பதை உணர்கிறர். அவர்களது விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக 1000 ரூபாயில் ஏன் 1 ரூபாயில் கூட விமானத்தில் பறக்க முடியும் என்பதை நிரூபிக்க நினைக்கிறார்.
இதற்காக விமான சேவை நிறுவன அதிபரிடம் உதவி கேட்கிறார். அவரோ அவமானப்படுத்துகிறார்.
மத்திய அரசு அலுவலகங்களை நாடினால் அங்கும் உதாசீனம்தான்.
லைசென்ஸ் பெறுவதில் பிரச்சினை, பெரிய விமான சேவை நிறுவன அதிபர்களின் சூழ்ச்சி, நம்பிக்கைத் துரோகம், குடும்ப பிரச்சினை, கடன் தொல்லை என்று ஏராளமான சிக்கல்கள்.
ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் எழுதிய தன் வாழ்க்கை நூலான ‘சிம்பிள் ஃப்ளை’ நூலை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை இயக்கி இருக்கிறார் சுதா கொங்கரா.
பட உருவாக்கம் சிறப்பு. அதிலும், கதாபாத்திரங்கள் அனைத்தையும் சிறப்பாக உருவாக்கி உள்ளார். அதற்கேற்ப அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
வழக்கமாக, அறச் சீற்றம் கொண்டு நீண்ட வசனம் பேசும் சூர்யா இதில் இல்லை. அருவா, வேல் கம்பையும் அவர் எடுக்கவில்லை.
நெடுமாறன் ராஜாங்கம் என்ற மனிதராக வாழ்ந்திருக்கிறார்.
அழுதுகொண்டே தன் இயலாமையை வெளிப்படுத்தும் காட்சிகளில் அசத்துகிறார்.
அதிலும், தனது தந்தைக்கு நேர்ந்ததை உணர்ந்து ஊருக்கு வர முயற்சித்து, விமானக் கட்டணத்துக்கு வழியில்லாமல் பலரிடம் கெஞ்சிக் கூத்தாடி பிச்சையாகக் கேட்கும்போதும், ஊருக்கு வந்து அம்மாவைப் பார்த்தவுடன் கதறி அழுது தன் நிலையை விளக்கும்போதும் நெஞ்சை உருக்குகிறார்.
நாயகி அபர்ணா பாலமுரளியும் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார். திருமணத்துக்குப் போடும் நிபந்தனைகள், சூர்யாவுடன் ஏற்படும் சிறு மோதல்கள், பிறகு நெருங்குவது என இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். சூர்யாவின் நண்பனாக வரும் காளி வெங்கட்டும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கருணாஸ், ஊர்வசி,
விவேக் பிரசன்னா, கிருஷ்ணகுமார் ஆகியோர்நடிப்பும் பாந்தம்.
ஒளிப்பதிவு, இசை என அனைத்துமே படத்துக்கு பக்கபலமாக விளங்குகிறது.
மொத்தத்தில் தன்னம்பிக்கையூட்டும் நல்லதொரு படம்.