சாமானியன் விமர்சனம்

சாமானியன் விமர்சனம்

ராமராஜன் ஹீரோவாக நடித்து, நாளை வெளியாக இருக்கும் படம், சாமானியன். பல வருடங்களுக்குப் பிறகு நடிக்கிறார்… இளையராஜா இசை.. என பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

படத்தில் ராமராஜனின் கதாபாத்திரமே ஒரு இன்ப அதிர்ச்சிதான். கிராமத்து வேடத்தில் வந்து ரசிகர்களின் உள்ளத்தைக் கவர்ந்தவர் இவர். இந்தப் படத்திலும் கிராமத்துக் காட்சியில் ஆரம்பத்தில் தோன்றினாலும்,  ஓய்வு பெற்ற ராணுவ வீரராக வருகிறார்.

தவிர, காதல், ஊடல் என்றெல்லாம் போகாமல், அறுபது வயது நபராகவே வருவது, ஜோடி இல்லாதது என வித்தியாசமான, ரசிக்கத்தக்க களம்.

ராமராஜன், ராதா ரவி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகிய மூவரும் ஒரு வங்கியை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்கள்.

ஓய்வு பெற்ற ராணுவ வீரரான ராமராஜன், இது போன்ற செயலில் ஏன் இறங்கினார், வங்கி கொள்ளையடிக்கப்பட்டதா, அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை.

வயது கூடியிருந்தாலும் அன்று பார்த்த அதே ராமராஜன்தான் இன்றும். அதே வெள்ளந்தி பேச்சு, இயல்பான நடை என வருகிறார்.

அவரது கூட்டாளிகளாக வரும் ராதா ரவி, எம்.எஸ். பாஸ்கர், போஸ் வெங்கட், மைம் கோபி ஆகியோர் வழக்கம்போலவே இயல்பாக நடித்து உள்ளனர். விநோதினி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோரும்  இருக்கிறார்கள்.

இசை – இளையராஜா. வேறெந்த வர்ணனைகளும் தேவையில்லையே! வழக்கம் போல ரசிக்கவைக்கிறார்.

அருள் செல்வனின் ஒளிப்பதிவு, ராம் கோபியின் எடிட்டிங் படத்துக்கு பலம்.

கார்த்திக் குமார் கதை எழுத, ஆர்.ராகேஷ் இயக்கி இருக்கிறார்.

வங்கிக் கொள்ளை தொடர்புடைய காட்சிகள் திக் திக் நிமிடங்கள்.   அதே நேரம், வெறும் த்ரில்லராக இல்லாமல், வங்கிகள் அடிக்கும் கொள்ளை குறித்த விழிப்புணர்வு படமாகவும் எடுத்து இருக்கிறார்கள்.

மொத்தத்தில் அனைத்துத் தரப்பினரும் பார்த்து ரசிக்கலாம்.

 

Related Posts