“மொட்டை மாடி நட்பு… இன்று 50 கோடி வசூல்!”: ‘யூத்’ விழாவில் கென் கருணாஸ் நெகிழ்ச்சி

“மொட்டை மாடி நட்பு… இன்று 50 கோடி வசூல்!”: ‘யூத்’ விழாவில் கென் கருணாஸ் நெகிழ்ச்சி

மார்ச் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, பள்ளிப் பருவ நினைவுகளைத் தட்டி எழுப்பிய “யூத்” திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு 50 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. பார்வதா என்டர்மெய்ன்மென்ட் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரிப்பில், கென் கருணாஸ் நாயகனாக நடித்து இயக்கியுள்ள இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து நெகிழ்ச்சியுடன் தங்களது நன்றிகளைப் பகிர்ந்து கொண்டனர்.

அந்த விழாவில் அவர்கள் பேசியவற்றின் தொகுப்பு இதோ:

தயாரிப்பாளர் கருப்பையா சி. ராம்: “யூத்” என்னுடைய முதல் படம். எடுத்த எடுப்பிலேயே 50 கோடி வசூல் என்பது மகிழ்ச்சி அளித்தாலும், இந்த படம் மக்களைச் சென்றடைந்த விதமே எனக்குப் பெரிய சாதனை. ஒரு காலத்தில் கையில் இரண்டு ரூபாய் கூட இல்லாத நிலையில் இருந்த என்னை, இன்று இந்த உயரத்திற்குத் தூக்கிவிட்டது மக்களின் நம்பிக்கை தான். இயக்குநர் கென் மீது வைத்த நம்பிக்கையும், நாங்கள் எடுத்த தைரியமான முடிவுகளுமே இந்த வெற்றிக்குக் காரணம். இனி எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் இயக்குநர்களுக்கும் தயாரிப்பாளர் அந்தஸ்து வழங்கப்படும் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகை நளினி: இந்த வெற்றி விழாவுக்கு எங்களை அழைத்த தயாரிப்பாளர் கருப்பையாவுக்கு நன்றி. அவர் எல்லோரையும் மதிக்கும் பண்பு இந்தப் நிறுவனத்தை இன்னும் உயர்த்தும். சூரஜ் சாரோட உழைப்பு எனக்கு ஒரு பாடம், அவர் இந்தப் படத்தில் மிரட்டியிருக்கிறார். தேவதர்ஷினி இந்தப் படத்தில் மிக அழகாக நடித்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக கென் மற்றும் அந்தக் குழந்தைகளின் உழைப்பு அபாரமானது. இந்தப் படத்தில் பணியாற்றியது எனக்கு ஒரு புதிய ஆற்றலைக் கொடுத்திருக்கிறது.

நடிகை தேவதர்ஷினி: ஒரு உதவி இயக்குநராக இருந்து இன்று வெற்றிகரமான தயாரிப்பாளராக மாறியுள்ள கருப்பையாவுக்கு வாழ்த்துகள். ஜி.வி. பிரகாஷின் இசை இந்தப் படத்திற்குப் பெரிய பலம். சூரஜ் சாருடன் நடித்தது எனக்குப் பெருமை. கென் இந்தப் படத்திற்காகப் பல பரிமாணங்களில் உழைத்திருக்கிறார், அவருடைய நேர்மையும் அன்பும் அவரை இன்னும் பெரிய இடத்திற்குக் கொண்டு செல்லும்.

நடிகை மீனாட்சி: இன்று ஒரு கேப் டிரைவர் கூட என்னை என் கதாபாத்திரத்தின் பெயரால் அழைக்கும்போது கிடைக்கும் அந்த அடையாளமே இந்தப் படத்தின் உண்மையான வெற்றி. பல வருடங்களாக நடித்து வந்தாலும், இந்த “யூத்” படம் தான் எனக்குத் தனி அங்கீகாரத்தைக் கொடுத்துள்ளது. இந்தப் படக்குழு எனக்கு ஒரு குடும்பத்தைப் போல அமைந்தது. 2023-ல் தொடங்கிய இந்தப் பயணம் இன்று வெற்றியில் முடிந்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சி.நடிகர் சுராஜ்: கென் ஒரு மிகச்சிறந்த நடிகர் மட்டுமல்ல, தெளிவான இயக்குநரும் கூட. அவருடைய அர்ப்பணிப்பு தான் இந்த வெற்றிக்கு அச்சாணி. தயாரிப்பாளர் கருப்பையா இன்னும் பெரிய இடத்திற்கு வருவார். நளினி அம்மா, தேவதர்ஷினி அம்மா ஆகியோருடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம். எனக்குத் தமிழ் கற்றுக்கொடுத்தவர்களுக்கும், பாராட்டிய சிம்பு அவர்களுக்கும் என் நன்றிகள்.


கென் கருணாஸ்: இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடக நண்பர்களுக்கு முதலில் என் நன்றிகள். என் அப்பா, அம்மா மற்றும் எனக்குத் தோள் கொடுத்த நண்பர்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை. மொட்டை மாடியில் ஆரம்பித்த எங்களது நட்பு தான் இன்று இந்த மேடை வரை எங்களை அழைத்து வந்திருக்கிறது. ஜி.வி. பிரகாஷ் அண்ணனின் இசை, விக்கி அண்ணாவின் வழிகாட்டுதல் என ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரும் இந்தப் படத்தின் உயிர்நாடி. என்னையும் என் கதையையும் முழுமையாக நம்பிப் படம் எடுத்த கருப்பையா அண்ணாவிற்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன்.


ஜி.வி. பிரகாஷ் இசையில் ‘முட்ட கலக்கி’, ‘பறந்தனே பெண்ணே’ மற்றும் ‘ஆச புள்ள’ ஆகிய பாடல்கள் ஏற்கனவே வைரலாகி வரும் நிலையில், “யூத்” திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாகத் தனது பயணத்தைத் தொடர்கிறது.

Related Posts