பார்த்திபனின் வில்லங்க யோசனை! வியந்த விஜய்! டாஸ்மாக்கில் மாற்றம் வரும்?
திரைப்பட இயக்குநர், நடிகர் பார்த்திபன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். அவருக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் நேரில் சென்றும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பிரபல இயக்குநரும் நடிகருமான ஆர். பார்த்திபன், முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி, மலர்க்கொத்து கொடுத்து தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இந்தச் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கருத்துக் கணிப்புகளுக்கு கடுக்காய் கஷாயம் கொடுத்து விட்டு, மக்களின் ஏகோபித்த ஆதரவோடு ஆட்சியமைத்து,
AM முதல் PM வரை ஒரு சாதாரண அரசு அலுவலராகவே பணியாற்றும் ஒரு CM !
சினிமா ஒரு சொகுசு சொர்க்கபுரி. சகல சௌகர்ய விமானத்தில் பல வருடம் பயணித்தவர் சட்டென மாறிய வானிலைப் போல CM நாற்காலியில் அமர்ந்ததுமே தன்னை மிகுந்த பொறுப்புள்ளவராக பொருத்திக் கொள்வது சாத்தியமா?
சத்தியமாய் சந்தேகம் மேலெழும்.
சினிமாவிலிருந்து சென்றவர் என்பதால் ஒரு செல்ல ப்ரியம் கலந்த கர்வத்துடன் கூடிய மகிழ்ச்சியுடன் சந்தித்தேன் நம் மாண்புமிகு விஜய் அவர்களை.
புகைப்படம் எடுக்கையில் தோளின் மீது கை வைக்கையில் “ கை போட்டுக்கலாமா?”என்றார் பணிவாக.
“சார்ர்ர்! என்ன சார், நானில்லை உங்ககிட்ட கேட்கனும்” என்றேன் “போடுங்க” என்று அவரே என் கையை இழுத்து போட்டுக் கொண்டார்.
திரையை விலக்கி நான் காட்டிய photo frame-ஐ பார்த்து “இப்படி ஏதாவது வருமென எதிர்பார்த்தேன்”என்றார்.வாசித்துக் காட்டினேன் யோசித்து சிரித்தார்.
தனிமையில் 15 நிமிடங்கள் பேசினோம். அதில் முதல் 5 நிமிடங்கள் நான் மனம் விட்டு ஒரு emotional bonding- குடன் பேச,மெதுவாய் அவரும் ஆத்மார்த்த உணர்வுடன் உட்புகுந்தார். என் குழந்தைகள், பார்த்திபன் மனித நேய மன்றம், அரசியல் இப்படி பல திசை பேச்சோடு ஒருவர் மீது ஒருவர் காட்டும் அக்கறையாக பேச்சு தொடர்ந்தது.
இரண்டு கோரிக்கைகள் என் கைவசம் இருந்தது.
ஒன்று சற்றே தழும்பித் தாள்ளாடியது… அது tasmac பற்றியது!!!
tasmac-ஐ முழுமையாக ஒழிப்பதில் சாதிக்க முடியாமலே சந்திக்கக் கூடிய பிரச்சனைகள் ஏராளம். நாள் முழுக்க கண்களில் ரத்தம் சிந்தி உழைப்பவர்களுக்கு குடி ஒரு உடனடித் தீர்வு தானே தவிர, அது நிவாரணம் அல்ல.
அவர்களுக்கான ஊதியமும் வாழ்க்கை தரமும் உயர்த்தப்பட வேண்டும். அதன் பின்பே அவர்கள் பணக்காரர்களைப் போல ஜாலிக்காக மிதமாகக் குடிக்க பழகுவார்கள். உலகம் முழுக்க தங்கள் குடியை கெடுக்காமலும் குடிக்கிறார்கள். நம்மூரில் தான் அதில் குளிக்கிறார்கள். குடும்பமும் tasmac-ம் நடுத்தெருவில் அல்லாடாமல் இருக்க எனக்கொரு யோசனை. பள்ளி-கோவில் அருகே இருக்கும் 717 கடைகளை அப்புறப்படுத்துவது என்பது பாராட்டுக்குரியது.
ஆனால் என் யோசனை யாதெனில்… ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருக்கும் இடுகாடோ, சுடுகாடோ, மின்தகனமோ உள்ள இடத்தில் அல்லது அதன் அருகாமையில் மட்டுமே tasmac கடைகளை குடித்தனம் வைத்தால், பாட்டிலின் மீது ‘statuary warning’ கொடுத்து விற்பதைப் போல், வியாபாரமும் கெடாது, குடித்தனங்களுக்கும் இடையூறு குறையும், மொடா குடியர்களுக்கு சைக்கலாஜிக்கலாக ஒரு பயம் வரும். கடைசியாக வரும் இடத்திற்கு முன்கூட்டியே செல்கிறோமோ? என்ற அச்சம் ஏற்படும்.
தாய்மார்கள்,மனைவிமார்கள் கூட “போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்’ திருச்சி லோகநாதன் பாடலை அதே ஆபேரி/ மோகனம் ராகத்தில் அல்லது வாய்க்கு வாகான ராகத்தில் கிண்டலாய் பாடி மெகா குடிமகர்களை திருத்தப் பார்க்கலாம்.
இப்படி இன்னும் காமடியாய் நான் சொல்லச் சொல்ல சிரித்தார். யோசிப்பதாகச் சொன்னார்.
அடுத்து என் மகள் கீர்த்தனாவின் விண்ணப்பம்.
தெருவில் அன்புக்காக அல்லாடும் ஜீவன்களுக்கு (பொதுமக்களுக்கும் பாதுகாப்பாக) ஒரு நிலையான நல்வழி செய்துத் தரவேண்டும் என்பது . அது தொடர்பான விவரமான விண்ணப்பம் இணைத்து அவரிடம் வழங்கப்பட்டது.
நான் ஒரு ‘சோத்துக் கட்சி’ ஆயுட்கால உறுப்பினன்.
வறுமை கோட்டை அழித்து, சாதி மத பேதமற்ற சமூகத்தை உருவாக்க வேண்டுமென்பதே இன்றைய தேவை . அதை தான் ஆட்சியாளர்களிடம் மக்களோடு சேர்ந்து நானும் எதிர்பார்ப்பது .
நேரத்திற்கு நன்றி தெரிவித்து நேரத்தோடு கிளம்பினேன் மகிழ்வாய்…!” என்று பார்த்திபன் குறிப்பிட்டு உள்ளார்.
அதே போல, தனது பாணியில் வித்தியாசமான கவிதையும், சிம்மாசனம் அருகில் ராஜ உடையில விஜய் நிற்பது போன்ற ஓவியத்தையும் பரிசாக அளித்து உள்ளார் பார்த்திபன்.
ஓவியத்தில் உள்ள குறியீடுகள்?
திரைப்படம், கதை, கவிதை, ஓவியம், பரிசு.. எதுவாக இருந்தாலும் பார்த்திபன் படைப்பு என்றாலே வித்தியாசம் இருக்கும். தவிர ஓவியத்தில் உள்ள குறியீடுகள் குறித்து, விஜய்க்கு பார்த்திபன் விளக்குவது போன்ற படமும் வெளியாகி இருப்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஆடை: இந்த ஓவியத்தில் நடிகர் விஜய் அணிந்திருப்பது போன்ற ஆடை வடிவமைப்பு, பதினெட்டாம் அல்லது பத்தொன்பதாம் நூற்றாண்டு (18th – 19th Century) ஐரோப்பிய பிராந்திய அரசர்களின் (குறிப்பாக பிரெஞ்சு அல்லது பிரிட்டிஷ் ஏகாதிபத்திய காலத்து) ராணுவ மற்றும் அரச உடைகளின் பாணியை ஒத்துள்ளது. தோள்களில் உள்ள எபாலெட்ஸ் (Epaulets), தங்க நிற வேலைப்பாடுகள் கொண்ட நீண்ட கோட் மற்றும் உயர்ந்த காலணிகள் (Boots) ஆகியவை இந்த ஐரோப்பிய ராயல் பாணியைக் குறிக்கின்றன.
-
சிம்மாசனம்: ஓவியத்தின் இடது கீழ் மூலையில் உள்ள சிறிய சிம்மாசனம், பொதுவாக இந்தியத் துணைக் கண்டத்து அரசர்கள் அல்லது முகலாய/மராட்டிய காலத்து நவரத்தினங்கள் மற்றும் தங்க வேலைப்பாடுகள் கொண்ட “சிம்ஹாசனா” பாணியை ஒத்திருக்கிறது. இது சிவப்பு வெல்வெட் மெத்தை மற்றும் தங்க நிறக் கைப்பிடிகளுடன், இந்திய பாரம்பரிய ராஜ வம்சங்களின் அரியணையை நினைவுபடுத்துகிறது.
இதில் வித்சியாசமான குறியீடுகள் இருக்கும். அதை பார்த்திபன் விஜய்க்கு விளக்கி இருக்கிறார் என தோன்றுகிறது.

