‘வேடுவன்’: விமர்சனம் 4.1/5

‘வேடுவன்’: விமர்சனம் 4.1/5

ZEE5 Original ஓ.டி.டி.க்காக, ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயிண்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, பவன் இயக்கி, நாளை ( அக்டோபர் 10) முதல், ஸ்ட்ரீமிங் ஆக உள்ள வெப் சீரிஸ், வேடுவன்.

முக்காலத்துக்கும் – குறிப்பாக இறந்த காலத்துக்கு – ஒரு முக்கிய கேள்வியை வைத்து அதிரச் செய்கிறது ‘வேடுவன்’.

பிரபல நடிகர் சூரஜூக்கு தொடர்ந்து படங்கள் பிளாப் ஆகி வருகின்றன. தவிர, கதையில் அவர் தலையிடுகிறார் என்கிற குற்றச் சாட்டும் இருக்கிறது. இந்த நிலையில், புதிதாக கதை சொல்ல வருகிறார் ஒரு இயக்குநர்.

அவர் சொல்லும் கதையில், சூரஜ், அதிரடி எண்கவுண்ட்டர் போலீஸ். ரவுடி ஒருவனை போட்டுத்தள்ள, மூன்று மாதமாக பிச்சைக்காரனாகவே வாழ்ந்து சாதித்து முடிக்கிறார். அடுத்த எண்கவுண்ட்டரில்தான் பெரிய ட்விஸ்ட். இல்லையில்லை.. அடுத்தடுத்த ட்விஸ்டுகள்.

நடிகராகவும் போலீசாகவும் வந்து இயல்பான நடிப்பை அளித்து இருக்கிறார் கண்ணா ரவி. தனது படங்கள் தொடர்ந்து தோல்வி அடைவது பற்றிகூட கவலைப்டவில்லை.. தன்னைப் பற்றி தவறாக ட்ரோல் செய்கிறார்களே என அவர் டென்சன் ஆகும் காட்சியில் ஈர்க்கிறார். தவிர தப்பி ஓடும்போது, மனைவி மீது இடித்து.. அவர் மயங்கிவிழ.. அவரைக்கூட காப்பாற்ற முடியாத நிலையில் தொடர்ந்து ஓடுவது, பிறகு வருந்துவது, பழைய காதலியை பார்க்கும் போது ஏற்படும் பரவசம், அந்த கொலையை ( எண்கவுண்ட்டர்) செய்துவிட்டு வருந்துவது, இறுதியில் ஏற்படும் அதிர்ச்சியான முடிவு என ரசிக்க வைக்கிறார்.

‘நல்ல’ தாதாவாக வரும் சஞ்சீவ் வெங்கட் கவர்கிறார். உண்மையைச் சொல்லப்போனால், இதுவரை (ஆகப்பெரும்பாலும்) அசமஞ்ச கதாபாத்திரங்களிலேயே வந்தராயிற்றே.. இவர் தாதாவா என தோன்றுகிறது. ஆனால் போகப் போக, தனது அசாத்திய நடிப்பால் நம் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிடுகிறார்.

‘சாந்திமா… சாந்திமா’ என மனைவியிடம் வைத்திருக்கும் உச்சகட்ட பாசம், தன்னை கொல்ல வந்திருப்பவனிடம் தன்மையாக எச்சரிக்கும் விதம்.. அசத்தலான நடிப்பு! கடைசியில் நெகிழ வைத்து விடுகிறார்.

இன்னொரு தாதாவின் மனைவியாக வரும் ரேகா நாயர், அதிரடி நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கணவன் கொல்லப்பட்டதும் அவர் வெளிப்படுத்தும் ஆங்காரம், அந்த ஆங்காரத்தை வெளிப்படுத்தும் காளியாட்டம்… அட, இவ்வளவு சிறப்பான நடிப்பவரை தமிழ்த்திரையுலகம் சரியாக பன்படுத்தவில்லையே என்று ஆச்சரியமாக இருக்கிறது.

கண்ணா ரவியின் மனைவியாக வரும் லாவண்யாவும் இயல்பாக நடித்து கவர்கிறார்.

அதே போல, சஞ்சீவ் வெங்கட்டின் மனைவியாக வரும் விஷ்ணு தேவியும் ஈர்க்கிறார். பழைய அர்ச்சனா போல் இருக்கும் இவர், நடிப்பிலும் அதே போல ஜொலிக்கிறார். தன் பள்ளிக்கால காதலனை, கணவனிடம் அறிமுகப்படுத்தும் கள்ளமில்லா எதார்த்தம், கணவனின் முடிவுக்கு பழிவாங்கும் காட்சி என அசத்துகிறார்.

இதர கதாபாத்திரங்களில் வரும் சரவ்நிதா ஸ்ரீகாந்த், லாவண்யா, ஜீவா ரவி பார்வதி உள்ளிட்டோரும் தங்கள் பாத்திரம் அறிந்து நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

விபின் பாஸ்கரின் இசை, தொடருக்கு பெரும் பலம். காதல், சோகம், த்ரில் என அனைத்து வித உணர்வுகளையும் இசையாலேயே கொடுத்திருக்கிறார். பாடல்கள் ஓகே ரகம்.

சீனிவாசன் தேவராஜின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது. பலவித கோணங்கள்.. ஏதோ நாமே கேமரா ஆனது போன்ற உணர்வு.

இயக்குநர் பவன் தனது பங்களிப்பை சிறப்பாக செய்து இருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு குறையாலம் கொண்டு சென்று உள்ளார். தவிர, வெறும் த்ரில்லராக இல்லாமல், காதல், கடமை, துரோகம், குற்ற உணர்வு என பல வித உணர்வுகளை சிறந்த கதாபாத்திரங்கள் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.அதோடு, நம்மைச் சுற்றி நடப்பவை குறித்த பார்வை மாற வேண்டும் என்பதை அழுத்தமாக மனதில் பதிய வைக்கிறார்.

மொத்தத்தில் அனைவரும் ரசித்துப் பார்க்க மட்டும் அல்ல.. சிந்திக்கவும் வைத்தும் தொடர்!

– டி.வி.சோமு

ரேட்டிங்: 41./5

Related Posts