Vanangaan Review: என்ன சொல்ல வருகிறான் பாலாவின் வணங்கான்?
அநீதி செய்வோருக்கு தனது பாணியில் வணங்கான் தண்டனை தருவதுதான் கதை.
பேச்சு மற்றும் செவித்திறன் இல்லாத மாற்றுத் திறனாளி கோட்டி. பெற்றோர் சுனாமியில் இறந்துவிட, அவரும் தங்கையும் கிடைத்த வேலையைச் செய்து வாழ்கிறார்கள்.
அதே கன்னியாகுமரியில் டூரிஸ் கைடாக இருக்கிறார் டீனா. பாதி நேரம் சுற்றுலா பயணிகளுக்கு ஊரை சுற்றிக் காட்டும் டீனா, மீதி நோரம் கோட்டியை சுற்றிவருகிறார்.
கோட்டியைப் பொறுத்தவரை, தப்பு என்று பட்டால் உடனே தன் பாணியில் தண்டனைதான். சர்ச் அருகே பார் வைத்து நடத்தி அதீத சத்தமாக பாடல்களை ஒலிக்கவிடும் பார் ஓனர், திருநங்கைகளை கொடுமைப்படுத்தும் இளைஞர்கள் ஆகியோரை போட்டுத் தாக்குகிறார்.
அவரது கோபத்தைக் குறைக்க, மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதரவற்றோர் இல்லத்தில் வேலைக்குச் சேர்த்துவிடுகிறார், அருண் விஜய் மீதுஅன்புகொண்ட பாதிரியார்.
இந்நிலையில், அந்த இல்லத்தில் நடக்கும் ஒரு கொடுமையை அறிந்து ஆத்திரம் கொள்ளும் கோடடி, தண்டனை கொடுக்க தயாராகிறார்.
அந்த அநீதி என்ன… கோட்டி கொடுத்த தண்டனை என்ன… என்பதே மீதிக்கதை.
கோட்டியாக வந்து அசத்துகிறார் அருண் விஜய். ஏற்கெனவே பாலா படங்களில் வரும், வாய்பேச முடியாத, காது கேளாத பாலா ஸ்டைல் டிபிகல் கதாபாத்திரம்தான். ஆனாலும் தனது பாணியில் சிறப்பாகவே நடித்து இருக்கிறார் அருண் விஜய்.
வாய் பேச முடியாத நிலையிலும் பேரன்பையும் பெருங்கோபத்தையும் முகபாவத்தாலும் கண்களாலும் வெளிப்படுத்தி விடுகிறார். பாராட்டுகள்!
அவரது தங்கையாக, ரிதா நடித்து உள்ளார்.அண்ணன் மீது காட்டும் பாசம், அண்ணனுக்கு பிரச்சினை என்றதும் துடிப்பது என்று பாசக்கார தங்கையை கண் முன் நிறுத்துகிறார்.
அருண் விஜயை துரத்தித் துரத்தி காதலிக்கும் டீனாவாக, ரோஷினி பிரகாஷ். கைது என்கிற பெயரில் அவர் அடிக்கும் லூட்டிகள் ரசிக்கவைக்கின்றன.
அருள்தாஸ், சமுத்திரகனி, மிஷ்கின் உள்ளிட்டோர் குறைவான காட்சிகளில் வந்தாலும் வழக்கம்போல் நிறைவான நடிப்பை அளித்து உள்ளனர்.
ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் அனைத்தும் அற்புதம். குறிப்பாக, ‘யாரோ நீ யாரோ’ பாடல் மயக்குகிறது.
சாம் சி.எஸ்-ஸின் பின்னணி இசை, படத்துக்கு பலம்.
கன்னியாகுமரி கடற்கரை, விவேகானந்தர் பாறை, ஓங்கி உயர்ந்த வள்ளுவர் சிலை, குடியிருப்புகள் என நேரடியாக நம் கண் முன் நிறுத்தி இருக்கிறது ஆர்.பி. குருதேவ்வின் ஒளிப்பதிவு. சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பு கச்சிதம்.
பேச முடியாத நாயகன், அவனை துரத்தும் நாயகி, பாசம் காட்டும் தங்கை, கன்னியா குமரி கடற்கரை என்று படத்தில் ரசிக்க ஏராளமாக உள்ளன.
அதே நேரம், ‘பெண் உடலை புனிதம்; அதற்கு ஆபத்து என்றால் கொலைதான் தீர்வு’ என்பதும் பாலாத்தனம். இதை அவர் மாற்றிக்கொள்ள வேண்டும்.
மற்றபடி ரசிக்கலாம்.

