‘வணங்கான்’ படத்திற்கு யு/ஏ! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘அந்த’ காட்சி!

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, பாலா இயக்கத்தில் அருண்விஜய் நாயகனாக நடிக்கும் படம் ‘வணங்கான்’. நாயகிகளாக ரோஷினி பிரகாஷ், ரிதா ஆகியோர் நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோர் தோன்றுகின்றனர்.
தரமான படங்களை தயாரிக்கும் சுரேஷ் காமாட்சி, வித்தியாசமாக மிரட்டும் இயக்குநர் பாலா, அர்ப்பணிப்புடன் நடிக்கும் அருண் விஜய் ஆகியோர் கூட்டணி என்பதால், கவனம் ஈர்த்தது.
படத்தின் பர்ஸ்ட் லுக்கில், அருண் விஜய் உடல் முழுவதும் சகதியுடன் ஒரு கையில் பெரியார் சிலையையும் மற்றொரு கையில் பிள்ளையார் சிலையையும் வைத்திருப்பது போன்ற காட்சி எதிர்பார்ப்பை அதிகரித்தது.
டீசரில், இந்தக் காட்சி கொஞ்சம் விரிவாக இருந்தது. அதாவது, கிணற்றியிலிருந்து ஒரு கையில் பெரியாரையும், மறு கையில் பிள்ளையாரையும் சுமந்தபடி அருண்விஜய் மேலே வருவது போன்று காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.இந்தக் காட்சியும் வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியது. அதே நேரம் எதிர்பார்ப்பை எகிற வைத்தது.
இது குறித்து இயக்குநர் பாலா ஏதும் கருத்து தெரிவிக்காத நிலையில், படத்தின் நாயகன் அருண் விஜய், “அந்த சிலைகள் முழுக்க முழுக்க பாலாவின் சிந்தனை. படம் பார்க்கும்போது அது ஏன் என்பது அனைவருக்கும் தெரியும்’ என்றார். இதுவும் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்தது.
இந்நிலையில் ‘வணங்கான்’ படம் சென்சார் சான்றிதழுக்காக தணிக்கை அதிகாரிகளுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்த அதிகாரிகள் ‘வணங்கானு’க்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
குறிப்பிட்ட காட்சிக்கு சென்சார் அதிகாரிகள் என்ன கருத்து தெரிவித்தனர், அதில் மாற்றங்களைச் சொன்னார்களா, அப்படியே காட்சி வெளியாகிறதா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
மொத்தத்தில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே வருவது நிஜம்.