உருட்டு உருட்டு: திரை விமர்சனம்

உருட்டு உருட்டு: திரை விமர்சனம்

வழக்கமான காதல் கதை. ஆனால் எதிர்பாராத கிளைமாக்ஸ்!

நாயகன் கஜேஷ் நாகேஷ், வேலை வெட்டிக்குப் போகாமல் எப்போதும் போதையில் ஊர் சுற்றிக்கொண்டு இருக்கிறார். அவரை(யும்) காதலிக்கிறார் நாயகி ரித்விகா ஸ்ரேயா. ஆனால் நாயகனோ, மதுவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இந்த மாதுவுக்கு அளிக்கவில்லை. அழகைக் காட்டியும் நாயகனை தன் பக்கம் திரும்ப வைக்க முடியாத நிலை நாயகிக்கு.

காதலனை திருத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை நாயகி எடுத்தாலும்.. எல்லாம் தோல்வி. இறுதியில் எதிர்பாராத ஒன்றைச் செய்து அனைவரையும் அதிர வைக்கிறார்.

அது என்ன அதிர்ச்சி முடிவு.. ஏன் அப்படி செய்தார் என்பதே கதை.

நாயகன் கஜேஷ் நாகேஷ்.. பெரைப் பார்த்தாலே தெரிந்திருக்கும். மறைந்த நடிகர் நாகேஷின் பேரன்.. ஆனந்த் பாபுவின் மகன். தாத்தா போல நடிப்போ, அப்பா போல நடனமோ இவருக்கு கைகூடவில்லை. வருங்காலத்தில் உரிய பயிற்சி பெற்று தாத்தா, அப்பா பெயரைக் காப்பாற்ற மனமார்ந்த வாழ்த்துகள்.

அறிமுக நாயகி ரித்விகா ஸ்ரேயா, வழக்கமான கமர்ஷியல் கதாநாயகிகள் போல் ஆட்டம் பாட்டம் என வருகிறார். திடீரென அவர் எடுக்கும் முடிவு எதிர்பாராதது.

நாயகியின் மாமாவாக வரும் மொட்டை ராஜேந்திரன், மூன்று பொண்டாட்டி முனுசாமி என காமெடி செய்ய முயற்சித்து இருக்கிறார். அவரது மனைவியராக அஸ்மிதா, ஹேமா, சின்னாலம்பட்டி சுகி ஆகியோர் கவர்ச்சி காட்ட முனைந்திருக்கிறார்கள்.

நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் தயாரிப்பாளர் பத்ம ராஜு ஜெய்சங்கர், சேரன் ராஜ், மிப்பு நடேசன், அங்காடித்தெரு கருப்பையா, பாவா லட்சுமணன் என பலரும் நடித்து உள்ளனர்.

இசையமைப்பாளர் அருணகிரியின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. ஒரு கார்த்திக் கிருஷ்ணாவின் பின்னணி இசை ஓகே ரகம்.

ஒளிப்பதிவாளர் யுவராஜ் பால்ராஜ், பாடல் காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார். லொக்கேஷன்கள் அதிகமில்லை என்பதால் அவரது திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் இல்லை.

எழுதி இயக்கியிருக்கும் பாஸ்கர் சதாசிவம், சமூக அக்கறையுடன் படத்தை உருவாக்கி இருக்கிறார். பாராட்டுகள்.

ஆனால் நாயகன், நாயகி காதலில் அழுத்தம் இல்லை.. நாயகியை நாயகன் ஏன் வெறுக்கிறார் என்பதையும் சொல்லவில்லை.. கதைக்குத் தொடர்பில்லாமல் மொட்டை ராஜேந்திரன் எபிசோடுகளை வைத்து இரண்டாம் பாதியை நகர்த்திஇருக்கிறார்.

நல்ல நோக்கத்துடன் எடுக்கப்பட்ட படம் என்கிற வகையில் பாராட்டலாம்.