‘தலைவர் தம்பி தலைமையில்’: திரை விமர்சனம்

‘தலைவர் தம்பி தலைமையில்’: திரை விமர்சனம்

ஹீரோவுக்கு ஜோடி இல்லை.. அதனால் டூயட் இல்லை.. வில்லன் இருந்தாலும் சண்டை இல்லை, ஆகவே ரத்தம், ஆபாசம் இல்லை.. இத்தனை இல்லைகள்… ஆனால் ரசித்து சிரிக்க காட்சிகள் உண்டு, புரிந்துகொள்ள வேண்டிய மெஸேஜ் உண்டு!

இந்தத் திரைப்பத்தை கண்ணன் ரவி குழுமம் சார்பில் கண்ணன் ரவி – தீபக் ரவி இணைந்து தயாரிக்க, நிதிஷ் சகாதேவ் இயக்கி இருக்கிறார். ஜீவா கதையின் நாயகனாக அசத்தி இருக்கிறார்.

ஊர் பஞ்சாயத்துத் தலைவராக இருக்கும் ஜீவா தேர்தல் நெருங்குவதால் ஓட்டுகளை அள்ளும் திட்டத்தில் இருக்கிறார். அந்த நேரத்தில் ஊரில் உள்ள வேளையில், அந்த ஊரில் வசிக்கும் இளவரசுவின் மகளான பிரார்த்தனா நாதனுக்கு திருமணம் நடக்க இருக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்கிறார் ஜீவா. (ஓட்டு!)

ஆனால் பக்கத்து வீட்டுக்காரர் தம்பி ராமையாவின் தந்தை இறந்துவிடுகிறார். மறுநாள் காலை பத்தரை மணிக்கு உடலை எடுத்துச் செல்வதாக கூறுகிறார். அப்போதுதான் பக்கத்து வீட்டில் திருமணம்.

இந்தப் பக்கம் இளவரசு திருமண நேரத்தை மாற்ற மறுக்கிறார்.. அந்தப் பக்கம் இளவரது இறுதிக் காரிய நேரத்தை நடத்த மறுக்கிறார்.

இரண்டு பக்க ஓட்டுக்களையும் வாங்க வேண்டும் என்பதால், சமாதான முயற்சிக்கு அல்லாடுகிறார் ஜீவா.

இறுதியில் என்ன ஆகிறது என்பதுதான் சுவாரஸ்யமான கதை.

ஊர்த் தலைவராக வரும் ஜீவா, கெத்தான அரசியல்வாதியாக முத்திரை பதிக்கிறார். ஓட்டு வாங்கும் நோக்கத்தில் இரு தரப்பினரிடமும் சாதுர்யமாக பேசி, சமாளிக்க முயல்வது.. இரு தரப்பும் சொல்பேச்சு கேட்காத நிலையில் டென்சனோடு அங்கும் இங்கும் அலைபாய்வது.. இறுதியில் அந்த சிரிப்பு… ஆகா.. சிறப்பான நடிப்பு!தம்பி ராமையா தனது எதிர்மறை கதாபாத்திரத்துக்கு உயிரூட்டி இருக்கிறார். பக்கத்து வீட்டுக்காரரை எதிரியாக நினைத்து அதிரடியாக அவர் செய்யும் காட்சிகள், கிராமத்து மனிதர்களுக்குள்ளும் இருக்கும் வஞ்சத்தை வெளிப்படுத்தி காட்டுகிறது. அதுவும் பொய்யாக சாமியாடும் இடத்தில் அசத்தி இருக்கிறார்.

மகளின் திருமணத்தை எப்படி நடத்துவது என்கிற பரிதவிப்பை வழக்கம்போல் இயல்பாக காண்பித்து இருக்கிறார் இளவரசு. பொறுக்க முடியாமல் ஒரு கட்டத்தில் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு பக்கத்து வீட்டுக்குள் ஓடும் காட்சியில்.. ரகளை!

அவரது மகளாக – மணப்பெண்ணாக – வரும் பிரார்த்தனா நாதன் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ‘எனக்குக் கல்யாணம் நடக்கணும் என்பதைவிட, உங்களுக்குப் பகைதான் முக்கியம்’ என ஆற்றாமையுடன் பேசும் இடத்திலும், குப்பைக் குழியில் மயங்கிக் கிடந்தவர், தனது மணமகனை அங்கு கண்டவுடன் நெகிழ்ந்து அழும் காட்சியிலும் கூடுதலாக ஈர்க்கிறார்.

இவர்களுடன்..

பதவி வெறியுடன் அலையும் ஜென்சன் திவாகர், கன்னியாகுமரி வட்டார வழக்கில் கலக்கும் மாப்பிள்ளைத்தோழன் சர்ஜின் குமார், மாப்பிள்ளை சுபாஷ் கண்ணன், ராஜேஷ் பாண்டியன் உள்ளிட்ட அனைவருமே சிறப்பாக நடித்து உள்ளனர். ஆரம்பத்தில் இருந்து கிளைமாக்ஸ் வரை சமவெளி நதி போல சீராக செல்லும் திரைக்கதையை அமைத்த சஞ்சோ ஜோசஃப், நித்திஷ் சகாதேவ், அனுராஜ் ஆகியோர் பாராட்டுக்கு உரியவர்கள்.

கிராமம், இரண்டே வீடுகள், ஒரு லாட்ஜ், சில வண்டிகள் என லொகேசன் குறைவு என்றாலும், வித்தியாசமான கேமரா கோணத்தால் அலுப்பின்றி சுவாரஸ்யமூட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் பப்லு அஜு. அதுவும் இரவு நேர கல்யாண வீட்டு சீரியல் லைட்டுகள், துக்க வீட்டின் உட்பகுதி ஆகிய காட்சிகளில் அசத்தல்!

பிரமாண்ட தண்ணி டேங்க் இடிந்து விழுவத, வீட்டுக்குள் வெள்ளமாக தண்ணீர் ஓடுவது, அதில் பிணம் அடித்துச் செல்வது என கிராபிக்ஸ் காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன.

அர்ஜுனே பாபுவின் எடிட்டிங் கச்சிதம்.

விஷ்ணு விஜயின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் அபாரம். அதுவும், வேனில் மாப்பிள்ளை வீட்டார் பயணப்படும் காட்சி.. அப்போது ஓட்டலில் நிறுத்தலாமா வேண்டாமா என்று சிறு விவாதம், பக்கத்து பக்கத்து கல்யாண – துக்க வீடுகளின் சூழல்.. எல்லாவற்றிலும் சிறப்பாக பின்னணி இசை அமைத்து இருக்கிறார்.

சின்ன கிராமம்.. ஒரு வீட்டில் திருமணம்.. பக்கத்து வீட்டில் மரணம்..இரு குடும்பத்துக்கும் அப்படி ஒரு பகை. திருமணமா இறுதிக் காரியமா என ஈகோ மோதல்.. அதனூடான சம்பவத்தை சிரித்து ரசிக்கும்படி அளித்து இருக்கிறார் இயக்குநர் நிதிஷ் சகாதேவ்.

இதற்கிடையே மனைவி சொல்வதை கேட்காத, மகளின் உணர்வைப் புரிந்து கொள்ளாத ஆணாதிக்கம், ஊராரின் பொய்ப் பேச்சுக்கு பலியாகும் – கதாபாத்திரமாக வராத – பெண், ‘மணப்பெண் இவ்வளவு அழகா இருக்காரு.. மணமகன் அத்தனை ஒர்த் இல்லையே.. மணமகளுக்கு காதலன் இருப்பானோ.. ஓடிப்போயிருவாளோ’ என அந்த கிராமத்து கிறுக்குகளைப் போலத்தான் நம்மில் பலரும் யோசிப்போம்.. ஆனால் அந்த இருவருக்கும் உள்ள நேசத்தை வெளிப்படுத்தி இருப்பது.. அதுவும் குப்பைக் கிடங்கில்…

மொத்தத்தில் குடும்பத்துடன் பார்த்து ரசிக்க வேண்டிய சர்க்கரைப் பொங்கல்!

பின்குறிப்பு: ‘தலைவர், தம்பி’ என ஏன் தலைப்பில் சேர்த்தார்கள் என தெரியவில்லை. இரண்டும், விடுதலைப்புலிகள் தலைவர்  பிரபாகரனை குறிக்கும் சொல் என்பது அனைவருக்கும் தெரியும்.

ரேட்டிங்: 4.2/5

 

Related Posts