அசத்தும் ‘கொட்டுக்காளி’, ‘டிராக்டர்’!
திரைப்படங்கள் பிலிம் ரோலில் எடுக்கப்பட்ட காலத்தில் – சில்க் ஸ்மிதா உச்சத்தில் இருந்த சூழலில் – “பிலிம் ரோல் இல்லாம கூட படம் எடுக்கலாம்.. ஸ்மிதா இல்லாம படம் எடுக்கவே முடியாது” என்று சொல்லப்பட்டது.
சொல்லப்படாத விசயம், பாடல்கள் இல்லாமல் படம் எடுக்க முடியாது என்பதே. எதார்த்தமாக இருந்து வருகிறது.
அதே நேரம், 1954லேயே பாடல்கள் இல்லாமல் அந்தநாள் திரைப்படம் வெளியானது. அதுவும் பத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் திரைப்படங்களில் இடம் பெற்ற காலம் அது.
வீணை எஸ். பாலசந்தர் – ஏவி.மெய்யப்பன்
ஏவிஎம் தயாரிப்பில் உருவான அந்த நாள் படத்தை இயக்கியவர் வீணை எஸ். பாலசந்தர். இந்த தைரிய முயற்சியின் போது அவருக்கு வயது 23 தான்!
அந்த நாள் போலவே, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, குருதிப்புனல் என பாடல்கள் இல்லாத திரைப்படங்கள் அபூர்வமாக வெளியாகின. பேசும் படங்கள் வந்த சுமார் 95 ஆண்டுகால வரலாற்றில் சுமார் நாற்பது படங்கள் இப்படி பாடல்கள் இல்லாமல் வெளியாகி இருக்கும். இவை விதிவிலக்குகளே.
ஆனால், பின்னணி இசையே இல்லாத படம் என்பதை யாரும் முயற்சிக்கவே இல்லை. இந்த நிலையில், சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்க, வினோத்ராஜ் இயக்கியுள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம் பின்னணி இசை இன்றி வெளியாகி உள்ளது.
வினோத்ராஜ், – சிவகார்த்திகேயன்வாகனங்களின் இரைச்சல், ஆற்றின் சலசலப்பு, காற்றின் வீச்சு, சேவலின் கொக்கரிப்பு என காட்சிக்குப் பொருத்தமான ஒலிகளே பின்னணி.
அற்புதமான ஒலிவடிவப்பை கொடுத்திருக்கும் சுரேன் மற்றும் அழகிய கூத்தன் ஆகியோருக்கு பாராட்டு. இந்த தைரிய முயற்சியை எடுத்த இயக்குநர் விநோத்ராஜூக்கு கூடுதல் பாராட்டு.சூரி, அன்னா பென் உள்ளிட்டோரின் இயல்பான நடிப்பு, பி.சக்திவேலின் சிறப்பான ஒளிப்பதிவு, கணேஷ் சிவாவின் கச்சிதமான படத்தொகுப்பு அனைத்தும் படத்துக்கு பலம்.
அதே போல, ‘டிராக்டர்’ என்கிற திரைப்படமும், பின்னணி இசை இல்லாமல் உருவாகி கவனத்தை ஈர்த்துளளது. கார்பொரேட் கலாச்சாரம் செய்துவரும் அட்டூழியங்களால், பாதிக்கப்படும் விவசாயிகள் குறித்த படம்.
இந்திய மொழி திரைப்படங்களை பிரான்ஸ் நாட்டில் வெளியிடும் ஜெயந்தன் தயாரிப்பில், ரமேஷ் யந்த்ரா இயக்கி உள்ள திரைப்படம் இது. ராஜேஷ் சசீந்திரன் ஒலிக்கோர்வை செய்து இருக்கிறார்.
தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் ரமேஷ் யந்த்ரா – ஜெயந்தன்இந்த படம், தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா உள்ளிட்ட சிலவற்றில் திரையிடப்பட்டு கவுரவிக்கப்பட்டு உள்ளது. விரைவில் திரையங்குகளில் வெளியாக உள்ளது.
திரைப்படத்தின் பின்னணி இசை என்பது இயக்குநரின் வேலையை சுளுவாக்கும். ஒரு கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும்போதோ, ஒரு காதாபாத்திரம் ஏதும் செயலைச் செய்யும் முன்போ அளிக்கப்படும் பின்னணி இசை மூலம், அந்த கதாபாத்திரத்தின் இயல்பு, நோக்கம் ஆகியவற்றை எளிதாக ரசிகர்களுக்கு கடத்திவிட முடியும்.
இந்த நிலையில் பின்னணி இசை இல்லாத படம் என்பது இயக்குநர்களுக்கு பெரிய சவால்தான். இந்த சவாலை எதிர்கொண்ட கொட்டுக்காளி, டிராக்டர் படங்களை நாம் ஆதரிக்க வேண்டும்.
– டி.வி.சோமு