‘திருக்குறள்’: திரைப்பட விமர்சனம்
வள்ளுவநாட்டில் வாழும் திருவள்ளுவர் இளைஞர்களுக்கு தமிழ் கற்றுக்கொடுத்து வருகிறார். ஒன்றே முக்கால் அடிகளை கொண்ட செய்யுள்களை எழுதி, அதை நூலாக தொகுக்க முற்படுகிறார். அவரது முயற்சிக்கு உற்ற துணையாக இருக்கிறார் அவரது மனைவி வாசுகி.
திருவள்ளுவர், தான் எழுதிய சில செய்யுள்களை மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்கு கொண்சட சென்று அங்கீகாரம் பெற முயற்சிக்கிறார். ஆனால், அவை சங்கத்தின் விதிகளுக்கு உட்பட்டதாக இல்லை என நிராகரிக்கப்படுகிறது.
ஆனாலும் தனது பணியைத் தொடர்கிறார் வள்ளுவர். தன்னூடைய நூல், தமிழ்ச் சங்க விதிகளுக்கு உட்படாததாக இருந்தாலும், உலக மக்களுக்கு நன்மை பயக்கும் ஒரு படைப்பாக இருக்கும் என உறுதியாக நம்புகிறார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட செய்யுள்களை எழுதுகிறார்.
இந்த நிலையில், சிறிய ராஜ்ஜியங்களில் நடக்கும் சூழ்ச்சிகளால் நல்லாட்சி புரியும் மன்னர்கள் வீழ்த்தப்படுகின்றனர்; கொடுங்கோல் அரசர்கள் ஆட்சிக்கு வருகின்றனர். இதனால் மக்கள் அவதியுறுகிறார்கள்.
இதையடுத்து அந்த கொடூர அரசர்களை அழிக்க சிலர் புரட்சி செய்ய தீர்மானிக்கிறார்கள். இது குறித்து திருவள்ளுவரிடம் கலந்துரையாடுகிறார்க்ள்.
போரையும், உயிர்க் கொலைகளையும் விரும்பாதவராக இருந்தாலும், மக்களின் நலனுக்காக கொடுங்கோல் மன்னனை வீழ்த்தும் பணியில் ஈடுபடுகிறார்.
ஒரு பக்கம் தனது நூலினை ஆக்கும் பணி, இன்னொரு புறம் நல்லாட்சி மலர யுத்த பணி என்றுசெயல்படுகிறார்.
அவர் தனது நூலினை அரங்கேற்றினாரா, அவர் நினைத்தபடி நல்லாட்சி அமைந்ததா என்பதுதான், திருக்குறள் திரைப்படம்.
திருவள்ளுவராக நடித்திருக்கிறார் கலைச்சோழன். ஒரு தேர்ந்த குருவுக்கான நிதானத்துடன் பிறருக்கு அறிவுரை கூறுவது, மக்களின் நிலை கண்டு வருந்துவது, போரிடும் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதம், தனது நூலுக்கு எதிரான கருத்துக்களை மறுத்து வாதிடும் தீட்சண்மம் என பல்வேறு உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் கலைச்சோழன்.
வள்ளுவரின் மனைவி வாசுகியாக நடித்திருக்கிறார் தனலட்சுமி. கணவன் மீதான காதல், அவர் மனம் அறிந்து செயல்படுவது என அவரது பேச்சு, உடல்மொழி அனைத்தும் சிறப்பு.
கவரும் இன்னொரு ஜோடி, பரிதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குணாபாபு மற்றும் பவளக்கொடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாடினி குமார். காதல், வீரம் என உணர்வுகளை வெளிப்படுத்தி கதாபாத்திரத்துக்கு பெருமை சேர்த்து இருக்கிறார்கள்.
மாட்டத்தி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுகன்யா, சங்கு மாறன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சந்துரு ஜோடியும் கவர்கிறது. சங்க காலத்திலேயே கலப்பு திருமணங்கள் நடந்ததையும், அதை ஆதரிப்பது தான் நம் கலாச்சாரம் என்பதையும் உணர்த்துகின்றன இவர்களது கதாபாத்திரங்கள்.
பாண்டிய மன்னனாக நடித்திருக்கும் ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா, புலவர் பெருந்தலைச்சாத்தனாராக நடித்திருக்கும் கொட்டாச்சி, குமணனாக நடித்திருக்கும் அரவிந்த் ஆண்டவர், நன்னனாக நடித்திருக்கும் கார்த்தி, பரிதியின் தோழனாக நடித்திருக்கும் யாசர், போர்க்கருவிகளை தயாரிக்கும் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நடித்திருக்கும் நாற்காலி கார்த்தி என இதர வேடங்களில் நடித்திருப்பவர்களும் பாத்திரம் அறிந்து நடிப்பை கொட்டி இருக்கிறார்கள்.
இளையராஜாவின் இசையும் பாடல் வரிகளும் லயிக்க வைக்கின்றன.
எட்வின் சகாயின் ஒளிப்பதிவு கண்ணக்கு குளிர்ச்சி.
கலை இயக்குநர் சுரேஷ் கலேரி, ஆடை வடிமைப்பாளர் சுரேஷ் குமார் ஆகியோரது பணி படத்துக்கு பலம்.
செம்பூர்.கே.ஜெயராஜின் கதை, திரைக்கதை, வசனம் திருவள்ளுவரின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும், என்கிற யூகத்தை கண் முன் நிறுத்தி இருக்கிறது.
இயக்குநர் ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் பாராட்டுக்கு உரியவர். வள்ளுரை வெறும் புலவராக மட்டுமன்றி மக்களுக்காக களத்தில் இறங்கி போராடியவர் என்று காண்பித்து இருக்கிறார்.
அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.
ரேட்டிங் 3/5

