விஜயகாந்த் மறைவு: கவிஞர் அருண்பாரதியின் உருக்கமான கவிதை
அஞ்சலி கவிதை
——————————-
மதுரை மாகாளிபட்டியிலிருந்து
மாநகரம் சென்னைக்கு வந்த
கருப்பு சூரியன்
அரசியலில் ஆளுமைமிக்க தலைவர்கள்
இருக்கும் போதே களத்தில் குதித்த
நெருப்பு சூரியன்
சினிமாவில்
அரசியல் செய்யத் தெரியாதவர்
அரசியலில்
சினிமாபோல நடிக்கத் தெரியாதவர்
கதாநாயகனாக தோன்றிய
முதல் படம் மட்டுமல்ல
இருட்டிலிருந்த பலரை
வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததில்
இவர் ஓர் அகல்விளக்கு
வெளிச்சம் குறையாத பகல்விளக்கு
தவிக்கும் நெஞ்சங்களின் தவிப்பறிந்து
தர்மங்கள் செய்ததால்
இவர் ஏழை ஜாதி
அரிசி ஆலையில்
பணியாற்றியதாலோ என்னவோ
பலரின் பசியறிந்து பசிதீர்த்த
பாமர ஜோதி
புரட்சிக் கருத்துகளை
திரையில் விதைத்த
புரட்சித் தலைவரின்
இரண்டாம் பாதி
முத்தமிழ் அறிஞர்
கலைஞரை நேசித்து
அன்பு பாராட்டியதில்
இவர் நெஞ்சுக்கு நீதி
விஜயகாந்த் – இது
கடவுள் கொடுத்த கொடைக்கு
காலம் வைத்த பேரு
கோடான கோடி மக்களின்
நினைவுப் புத்தகத்தில்
இவர் எப்போதும்
நிரந்தர வரலாறு
-கவிஞர் அருண்பாரதி
திரைப்பட பாடலாசிரியர்

